full screen background image

கார்மேனி செல்வம் – சினிமா விமர்சனம்

கார்மேனி செல்வம் – சினிமா விமர்சனம்

அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கும் இந்த ‘கார்மேனி செல்வம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சக்ரி.

இதில் பி.சமுத்திரக்கனி – செல்வம், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி – சாந்தி, கரண் சக்கரவர்த்தி – பாலு, கௌதம் வாசுதேவ் மேனன் – சம்பத், அபிநயா – தேவி, படவா கோபி – பாலன், கார்த்திக் குமார் – வசந்த், கோதண்டம் – பிளாட் சுந்தரம், மதுமிதா – ப்ரீத்தி, அர்ஜுனன் – பாண்டியன், ஹரிதா பரகோட் – ரீனா, ஜெயந்தி – அபிராமி, பேபி கே லயா – துர்கா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீசரவணன், ஒளிப்பதிவாள​ர் – யுவராஜ் தக்ஷன், எடிட்டிங் – ஜெயன் ஆர்.வி. – தினேஷ் எஸ், பாடல்கள் – மணி அமுதவன், உமாதேவி கே, நடன இயக்குநர் ஹரிஷ் கார்த்திக், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஷங்கர், ஆடியோகிராபி – ராகவ் ரமேஷ், ஒலி வடிவமைப்பாளர் – ராகவ் ரமேஷ் – ஹரி பிரசாத் எம்.ஏ, நிர்வாக மேலாளர் – மணி தாமோதரன், தயாரிப்பு மேலாளர் – வி.ஆர்.ராம்பரத், ஆடை வடிவமைப்பாளர் – சுவேதுலெக்ஷ்மி எஸ், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

என்னடா இது ஒரே மாதிரி.. அடிதடி, வெட்டு, குத்து, இல்லாட்டி பேய், பிசாசு… படமா வந்துக்கிட்டிருக்கு? குடும்பமா உட்கார்ந்து பார்க்கிற மாதிரி ஒரு படமும் வரலையே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்துவது போல வந்திருக்கின்ற திரைப்படம்தான் இந்த கார்மேனி செல்வம்’.

படத்தின் ஹீரோவான சமுத்திரக்கனி பணக்காரரான கௌதம் மேனனின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கார் ஓட்டுநராகவே இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஒருவர் போலவே அனைவராலும் மதிக்கப்படுகிறார். அதனால் அந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்.

சமுத்திரக்கனியின் வீடு துறைமுகத்தின் அருகில் கடலின் முகத்துவாரத்தில் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. அவருடைய மனைவி லட்சுமி பிரியா. எட்டு வயதில் ஒரு மகன். சமுத்திரக்கனி சம்பாதிப்பது வீட்டுக்கே சரியாகி விடுகிறது. ஆனால், சேமிப்பு என்று பார்த்தால் எதுவுமே செய்ய முடியவில்லை. மாதந்தோறும் பட்ஜெட் போட்டாலும் அவர் கொண்டு வரும் பணம் போதாமையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் அவருடைய தங்கை மகளின் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற சமுத்திரகனி மிகக் குறைவான பணத்தையே சீராக செய்ததால் அவமானப்படுகிறார். அந்த அவமானத்தை தாங்காத லட்சுமி பிரியா தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்து சீராகக் கொடுத்துவிட்டு தன்னுடைய கோபத்தை காட்டி விடுகிறார்.

இப்போது சேமித்த பணமும்போய் எதுவும் கையில் இல்லாத சூழலில் இதனாலேயே தம்பதிகளுக்குள் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.

இந்த நேரத்தில் கௌதம் மேனன் அவருடைய மனைவி, மகனுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார். அதனால் நான் வரும்வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள் என்று காரை கொடுத்துவிட்டு போகிறார்.

சமுத்திரக்கனிக்கு திடீரென்று இந்தக் காரை வைத்து பணம் சம்பாதிக்கலாமே என்று எண்ணம் வருகிறது இதனால் காரை வாடகை டாக்ஸியாக ஓட்ட ஆரம்பிக்கிறார். இதற்காக நிறைய உழைக்கிறார். தூங்கக்கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதோடு அவரது மனைவியும் வீடு இல்லாவிட்டாலும் ஒரு நிலமாவது வாங்க வேண்டும் என்று நச்சரிக்கிறார். இதனால் இரவு, பகலாக காரை ஓட்டி வருகிறார் சமுத்திரக்கனி.

அதே சமயம் “கடன் வாங்கியும் தொழில் செய்யலாம். தப்பில்ல. நீங்கள் கடன் வாங்க வாங்க உங்களுக்கு பணம் இன்னொரு பக்கம் இருந்து வந்து கொண்டே இருக்கும்” என்ற மிட்டாயில் தேன் குழைத்த வார்த்தைகளை வீசிய ஒருவனின் பேச்சைக் கேட்டு சமுத்திரக்கனி கடனும் வாங்க ஆரம்பிக்கிறார்.

அந்த கடனையும் திருப்பி கட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் திகைத்துப் போய் நிற்க அனைத்து வலிகளும் சமுத்திரக்கனிக்கு வருகிறது.

இந்த நேரத்தில் கெளதம் மேன்னின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பினால் அவரும் ஊரைவிட்டுப் போகிறார். இதனால் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் வெளிநாட்டுக்குப் போனால்தான் முடியும் என்று பலரும் சொல்ல.. சமுத்திரக்கனியும் துபாய்க்கு வந்து சம்பாதிக்கத் துவங்குகிறார்.

ஆனால் அவரால் மனைவி, மகனை விட்டுவிட்டு துபாயில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மகனைப் பார்க்க வேண்டும்.. பேச வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். பணத் தேவை ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் கடன் தொல்லை.. என்ன செய்தார் சமுத்திரக்கனி என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

மிடில் கிளாஸ் ஃபேமிலியின் பிரச்சனைகள் எப்பொழுதும் பொருளாதாரத்தை மையமாக வைத்துதான் இருக்கும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து கடன் வாங்குவதால்தான் இன்றைக்கு இந்தியா என்ற ஒரு பெரிய நாடே துணிச்சலாக கடன் வாங்கி நம்மை 160 லட்சம் கோடிக்கு கடனாளியாக்கி இருக்கிறது. இந்தக் கடன் பிரச்சனையை விஸ்தாரமாக வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையும் எழுதப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி எப்போதுமே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பிரதிநிதியாகத்தான் திரை ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். அவருக்கு கிடைக்கின்ற வேடங்கள் அனைத்துமே ஒரு எளிய மனிதனுக்கானது.

எந்த ஒரு மனிதன் தன்னையும் தனது குடும்பத்தையும் உயர்த்துவதற்காக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி ஒரு உழைப்பாளியின் தோற்றமும், முகமும்தான் சமுத்திரக்கனிக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது இந்தப் படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசித்து ருசித்து செய்திருக்கிறார் கனி.

மைத்துனரிடம் அவமானம்.. தங்கையிடம் அவமானம்.. மனைவியிடம் அவமானம்.. வெளியிடங்களில் அவமானம்.. என்று போகின்ற இடங்களில் எல்லாம் அவமானத்தையே சுமந்து கொண்டு தன்னுடைய மகனின் மகிழ்ச்சியை மட்டுமே பெரிதாக நினைத்து வாழும் ஒரு எளிய அப்பாவின் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

அவருடைய மகன் அடிக்கடி அவரிடம் “அப்பா நீ பெரிய அறிவாளிப்பா” என்று சொல்லும் பொழுதெல்லாம் ஒரு மிகப் பெரிய விருது கிடைத்தது போல சந்தோஷப்படும் கனியை ந்த ஒரு நிமிட சந்தோஷம்தான்… இன்றைக்கும் உலகம் முழுவதும் இருக்கும் பல வீடுகளில் அப்பாக்களுக்கு கிடைக்கும் விலையில்லாத விருதுகள்.

அதேபோல் தன்னுடைய மகனுக்காகவே ஒரு வீடு கட்டி அதையும் ஒரு ரசனையோடு கட்டிக் கொடுத்து மகனை சந்தோஷப்படுத்தும்  இடங்களில், இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டார் கனி.

கௌதம் மேனனிடம் தான் செய்த ஒரு தவறை சொல்லுவதற்கு மிகவும் திக்கி திணறி சொல்லும்பொழுது, கௌதம் மேனன், “இது எனக்கு முன்னாடியே தெரியும்” என்று அசால்டாக சொல்லிவிட்டு போகும்போது கனியின் நன்றி உணர்வுக்கான நடிப்பு உண்மையில் சிறப்புதான்.

ஒரு மிடில் கிளாஸ் மனைவி எப்படி இருப்பாரோ அப்படியே வாழ்ந்திருக்கிறார் லட்சுமி பிரியா. வீடு வாங்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்தான். ஆனால், அதை கடன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என்றோ எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று சண்டையிடும் கட்சியில் உண்மையில் சபாஷ் போட வைத்திருக்கிறார் லட்சுமி பிரியா.

படம் முழுவதும் அவர் காட்டுகின்ற நடிப்பு இந்தப் பெண்ணிற்கு ஏன் தமிழ் சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை என்ற ஒரு கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

ஜென்டில்மேன் என்ற கேரக்டருக்கு பொருத்தமான வகையில் கௌதம் மேனன் கடைசிவரையிலும் மிக அழகாக நடித்திருக்கிறார். தன்னுடைய மனைவியும், மகனும் தனக்குத் தெரியாமல் செய்கின்ற சேட்டையை ரசிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் ரகமாகத்தான் இருக்கிறது.

அவருடைய மனைவியாக நடித்த அபிநயா சிறிது நேரமே திரையில் வந்திருந்தாலும் ஒரு அழகான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

படத்தில் இருக்கும் மற்றைய கதாபாத்திரங்கள் அனைத்துமே திரைக்கதைக்கு மிகவும் தேவையானவர்களாகவே நடித்திருக்கிறார்கள்.

சின்ன பட்ஜெட் படம், ஒரு சின்ன கதை, அதிகமான இடங்களில் இல்லை என்றாலும் காட்சிகள் அனைத்திலுமே ஒரு கலை நயம் இருக்கிறது. சமுத்திரகனியின் வீட்டின் அமைப்பே ஒரு வித்தியாசமாக இருக்கிறது.

உண்மையில் இது போன்ற கதைகளில் ஏதாவது ஒரு தமிழ்நாடு அரசின் குடியிருப்பில் காட்டுவார்கள் நெரிசல் நெருக்கடியும் உள்ள அந்த இடமே அந்தக் குடும்பத்தின் நிலைமையை சொல்லிவிடும். ஆனால் இதில் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக ஒரு இடமாக காட்டி அதிலேயே முழு படத்தையும் முடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் அந்த வீட்டை வடிவமைத்து கொடுத்த கலை இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

காட்சிகள் முழுவதையும் மிக அழகான ஒளிப்பதிவின் மூலம் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் யுவராஜூக்கு நமது நன்றி.

இந்தப் படத்தின் இசையை ஒரு தனி நபராக இல்லாமல் மியூசிக் லவ் ஸ்டுடியோஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் மூலம் இசையை அமைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பாடல்களும் இந்தப் படத்துக்கு ஒரு பலம்தான். பின்னணி இசையிலும் அதிகமாக சோகத்தை இழுக்காமல் இசைத்திருக்கிறார்கள்.

பதட்டத்தை உருவாக்கும் சில காட்சிகளில் மட்டும் அனைவரும் பரபரப்பாக ஓட படமும் கொஞ்சம் மெதுவாகத்தான் சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு குடும்ப கதை என்கின்ற அளவுக்கு படத்தினை படத் தொகுப்பு செய்திருக்கும் தொகுப்பாளர்கள் ஜெகன் மற்றும் தினேஷ் இருவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அனைவருக்கும் எல்லையற்ற ஆசைகள் இருக்கலாம். ஆனால் எது சாத்தியமோ அதற்குத்தான் ஆசைப்பட வேண்டும். முடியாத ஒன்றுக்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் சென்று மாட்டிக்கொண்டு முழிப்பது குடும்பத்திற்கு வீழ்ச்சியைத்தான் தரும்.

மிடில் கிளாஸ் குடும்பங்கள் பலவும் சீரழிந்ததற்கு காரணமே அவர்களுடைய அளவுக்கு அதிகமான ஆசைகள்தான். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை தான் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் தினம்தோறும் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம். அதைத்தான் இந்த படத்தின் இயக்குநரான ராம் சக்ரியும் சொல்லி இருக்கிறார்.

மற்றைய கமர்சியல் படங்களைப் போன்று எந்த ஒரு ஜிகினாவும் இந்த படத்தில் இல்லை என்றாலும் நாடகத் தன்மையில் திரைக்கதை இருந்தாலும், விறுவிறுப்பாக இல்லாமல் மெதுவாக திரைக்கதை நகர்ந்தாலும்… ஒரு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கின்ற காரணத்தினால் இந்தப் படத்தை நிச்சயமாக தமிழக ரசிகர்கள் குடும்பத்தோடு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 4 / 5

Our Score