தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் பற்றிய திரைப்படம் இது.
நடிகர்கள் :
ஷர்வானந்த் – விகாஸ் நாராயன்
டாக்டர் ராஜசேகர் – புல்லட் சுனில்
மாளவிகா நாயர் –அனன்யா
நிரூப் – அன்வர்
மாஸ்டர் சௌர்யா – இஷான் நாராயன்
அதுல் குல்கர்னி, சஷாங்க், மற்றும் பலர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்:
எழுத்து – இயக்கம் : அபிலாஷ் ரெட்டி
வழங்குபவர்: விக்ரம் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி
இசை: ஜிப்ரான் வைபோதா
பேனர்: ருஏ கிரியேஷன்ஸ்
ஓளிப்பதிவு: ஜே யுவராஜ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்
எடிட்டிங் : அனில் பசாலா
கலை இயக்குனர்: ஏ பன்னீர் செல்வம்
எழுத்தாளர்கள்: எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மாதால
சண்டை பயிற்சி இயக்கம் : திலிப் சுப்பராயன்
நடன இயக்குநர்கள்: ராஜு சுந்தரம், சேகர் விஜே, விஸ்வ ரகு
ஆடை வடிவமைப்பாளர்கள்: தோட்டா விஜய பாஸ்கர், ரஜினி, ரேகா பொக்கரபு,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெகதீஷ் தலசிலா
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
சென்ற தலைமுறையில் இந்தியாவில் மிகப் பெரிய பைக் ரேசராக இருந்தவர் ராஜசேகர். அவருடைய மகன்தான் ஹீரோ சர்வானந்த். தன்னைப் போலவே தன்னுடைய மகனையும் பைக் ரேசராக உருவாக்க நினைக்கிறார் அப்பா ராஜசேகர்.
மகனும் அப்பாவிடம் அந்த விளையாட்டை கற்றுக் கொண்டு அப்பா போலவே பல ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார். தன் மகனின் வளர்ச்சியை கண்டு பூரித்துப் போகிறார் ராஜசேகர். சர்வானந்தம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான திறமைகளை வளர்த்துக் கொண்டு இந்த ரேசில் தன்னை மிஞ்ச இப்போதைக்கு இங்கு யாரும் இல்லை என்கின்ற ஒரு அடையாளத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அப்பா ராஜசேகருக்கும், சர்வானந்துக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் எழுகிறது. சர்வானந்தின் காதலை அவருடைய அப்பா ஏற்காமல் போக, அப்பாவும், மகனும் பிரிகிறார்கள்.
இப்பொழுது சர்வானந்துக்கு ஒரு மகன் பிறந்து அவனும் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. மற்றைய திறமைகளில் அவன் திறன் வாய்ந்தவனாக இருக்கிறான்.
இப்படியொரு சூழலில் ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காரணத்தினால் சர்வானந்தின் அப்பா ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
இப்போது அவருடைய அப்பாவை காப்பாற்ற ஒரே வழி சர்வானந்த் மீண்டும் ரேஸில் கலந்து கொண்டால் மட்டும்தான் என தெரிகிறது. எதனால் தன்னுடைய அப்பாவை தேடி மீண்டும் கோவைக்கு வருகிறார் சர்வானந்த். அவருடைய அப்பாவோ இப்பவும் அவரை விரும்பாமல் இருக்கிறார். ஆனாலும் நான் நிச்சயம் இந்தப் போட்டியில் ஜெயிப்பேன் என்கிறார் சர்வானந்த்.
இதற்கு மேல் என்ன நடந்தது? போட்டியில் சர்வானந்த் வெற்றி பெற்றாரா? இல்லையா.. அப்பாவும் மகனும் இணைந்தார்களா?… இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தின் முதல் ஹீரோ யார் என்றால் நிச்சயமாக அது பைக் ரேஸ்தான். பைக் ரேஸ் பற்றிய திரைப்படங்கள் இங்கே அதிகமாக வரவில்லை. இதுதான் முதல்முறை என்றுகூட நாம் சொல்லலாம்.
ஹீரோ சர்வானந்த் இந்தப் படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு வீரராகவே வலம் வந்திருக்கிறார். இதற்காக அவர் காட்டுகின்ற முனைப்பு.. எடுக்கின்ற பயிற்சிகள்.. உடலை இளைத்து பின்பு உடலை கூட்டி என்று அவர் செய்திருக்கும் கடினமான பணிகள் என்று இந்தப் படத்திற்காக நிறையவே உழைத்திருக்கிறார் சர்வானந்த்.
இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பாவுடன் சரிக்கு சரி பேச முடியாமல் தவிப்பதும் ஒரு மரியாதைக்காக அப்பாவை எதிர்த்து பேச முடியாமல் நிலையில் இருப்பதும் தன்னை தேடி வரும் காதலியை மறக்கவே முடியாமல் மனைவியாக்கிக் கொள்வதுமாய் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மகனுக்காக பரிந்து பேச போய் பள்ளியில் அவர் வாங்கி கட்டிக் கொள்வதும், மகனுடன் சர்வானந்த் பேசுகின்ற சந்தோஷமான நிகழ்வுகளிலும் அழகாக நடித்திருக்கிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் ஆங்கிரி மேன் ராஜசேகர் எப்போதும் ஒரே மாதிரியாகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். விளையாட்டு விளையாட்டு என்று சொல்லும் அளவுக்கு அந்த பைக் ரேஸ் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாதவராக தன்னுடைய மகன் தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு குருவாகவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்.
மிக அதிகமான குளோசப் காட்சிகள் இவருக்குத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. தன்னுடைய பேரனை முதன்முதலில் அவர் சந்திக்கும் இடத்திலும் பேரனின் வாய்ப் பேச்சில் ஸ்தம்பித்து போய் நிற்பதும் அவனுடன் பேசும்பொழுது அவர் முகத்தில் காட்டுகின்ற அந்த பாசத்தையும் ஒரு அழகாக காட்டியிருக்கிறார் ராஜசேகர். அவரிடம் இருந்து இப்படியொரு நடிப்பை வரவழைத்த இயக்குநரையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.
சர்வானந்தின் மனைவியாக நடித்திருக்கும் மாளவிகா நாயர் அவ்வளவு அழகாக ஸ்கிரீனில் தெரிகிறார். ஒரு பாடல் காட்சியில் மிக அசத்தலாக நடனமும் பாடியிருக்கிறார். காதலிக்கும் பொழுது பிரமிப்பாக இருந்த சர்வானந்த், பைக் ரேஸ்சில் இறங்கிய உடனே கணவருக்கு ஏதும் ஆகி விடுமோ என்று தவியாய் தவிக்கின்ற இடத்திலும் ஒரு மனைவியாகவும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
இவர்களுடைய மகனாக நடித்த அந்த சின்னப் பையனும் வயதுக்கு மீறிய பேச்சுகளை பேசினாலும் அதை ரசிக்கும்விதமாக அழகாக நடித்திருக்கிறான்.
இப்போதைக்கு இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் அனைத்து வகையான விளையாட்டுக்களையும் மேலாண்மை செய்கின்றன. அந்த வகையில் தன்னுடைய நிர்வாகத்தின் மூலமாக ராஜசேகர் மற்றும் அவரது மகன் சர்வானந்தின் விளையாட்டு வாழ்க்கையை அழிக்க நினைக்கும் ஒரு வில்லனாக நடித்திருக்கும் அது குல்கர்னி தன்னுடைய வில்லத்தனத்தை வெறும் முக நடிப்பிலேயே காட்டி அசத்தியிருக்கிறார்.
இந்தப் படம் பைக் ரேஸ் என்ற ஒரு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நிச்சயமாக பைக் ரேஸ் காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தக் காட்சிகளையெல்லாம் ஒளிப்பதிவாளர் எப்படித்தான் படமாக்கினாரோ தெரியவில்லை… தன்னுடைய கடினமான உழைப்பை இந்தப் படத்தில் போட்டுள்ளார் என்பது தெரிகிறது. கேமராவுக்கு பின்னால் உழைத்தவர்களின் கடின உழைப்பினால்தான் இத்திரைப்படம் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஒளிப்பதிவாளர் ஜே.யுவராஜ் தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து செய்திருக்கும் மேஜிக்தான் இந்த பைக் ரேஸ் திரைப்படம். இந்தக் குழுவினருக்கு நிச்சயமாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு கடின உழைப்பை உழைத்திருக்கிறார்கள்.
அதேபோல் படத்தில் இருக்கும் ஒரே ஒரு பாடல் காட்சியிலும் நடனத்தை மிக அழகாக வடிவமைத்திருக்கிற நடன இயக்குநருக்கும், இந்தப் பாடல் காட்சி முழுவதையும் படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நமது பாராட்டுக்கள்.
இதே பாடலை அழகான இசையில் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் நமது பாராட்டுக்கள். படத்தின் பின்னணி இசையும் அசத்தல். பைக் ரேஸ் காட்சிகளின்போது ஒலிக்கும் பின்னணி இசை நிச்சயமாக தியேட்டரில் ரசிகர்களை தூங்கவிடாது. அந்த அளவுக்கு நம்மைத் தூண்டிவிட்டிருக்கிறது பின்னணி இசை.
எவ்வளவு காட்சிகளை படமாக்கினாலும் அதைத் திரையில் நமக்கு பிடிக்கும் வகையில் தொகுத்து வழங்குவது ஒரு மிகப் பெரிய சாதனைதான். அந்த சாதனையை மிக அழகாக செய்திருக்கிறார் இந்த படத்தின் படத் தொகுப்பாளர் அனில்குமார் பலாசா.
பல கேமராக்கள் மூலமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த பைக் ரேஸ் காட்சிகளை எல்லாம் அழகாக ஒன்றுபின் ஒன்றாக நாம் பரபரப்பாக இருக்கும்வகையிலும், நாம் பரிதவிக்கும் வகையிலும், படபடக்கும் வகையிலும் நறுக்கி, வெட்டி, ஒட்டி கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அதற்கே அவரை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும்.
இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் திரைக்கதையை மெதுவாக நகராமல் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய வகையில் இருக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி. இதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.
அனைத்து ரேஸ் காட்சிகளும் ரசிகர்களை ஆர்வத்தை தூண்டிவிட்டு யார், எப்படி ஜெயிப்பார் என்று நம்மையும் கேட்க வைத்து இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த பைக் ரேஸ் காட்சிகளின் படமாக்கலும், ஆபத்தான அந்த வழிகளும் நம்மை பிரமிக்க வைத்திருக்கின்றன.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றினாலும் அதற்குப் பிறகு போக போக அந்த பைக் வேகம் போலவே படமும் வேகம் எடுத்து ஓடி இருக்கிறது. இதற்காக திரை கதையை அவ்வளவு அழகாக வடிவமைத்து கொடுத்திருக்கும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி, இந்தப் படத்தை மிக மிக தரமான ஒரு திரைப்படமாக நமக்கு கொடுத்திருக்கிறார்.
அதோடு தமிழ், தெலுங்கு இரண்டுக்கும் தனித்தனியாக காட்சிகளை வைத்து எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதற்கும் ஒரு பாராட்டு. இப்படியொரு சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்து சிறந்த நடிகர்களை வைத்து ஒரு சிறந்த தரமான விளையாட்டு திரைப்படத்தை கொடுத்திருக்கும் இந்தக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.
இந்த ‘பைக்கர்’ நிச்சயமாக ஒரு சாம்பியன்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
RATING : 3.5 / 5









