நடிகர், நடிகைகள் :
பரத் – காளிதாஸ்
அஜய் கார்த்தி – ஸ்டீபன்
சங்கீதா – ரூபா சுந்தரி
பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி
அபர்ணதி – சஞ்சு
அனந்த் நாக் – கோகுல்
பிரகாஷ் ராஜ் – வழக்கறிஞர் நட்ராஜ்
கிஷோர் – பாண்டியா
தொழில்நுட்ப குழு
எழுத்து & இயக்கம் – ஸ்ரீ செந்தில்
திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த்
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்)
இசை – சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜி.துரைராஜ்
ஒலி வடிவமைப்பாளர் – தபஸ் நாயக்
கலை இயக்குனர் – கலியுக ஏ.ராஜா
சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர் – டோரதி ஜெய் (டிஜே)
பாடல் வரிகள் – மோகன்ராஜ்
நடனம் – பாபி
விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்
பேனர் – ஸ்கை பிக்சர்ஸ்
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்
2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைத் தொட்டது என்பதனால் அந்தத் தலைப்பை வைத்துக் கொண்டு அதே மாதிரியான கான்செப்ட்டில் வந்திருக்கிறது இந்த காளிதாஸ்–2 திரைப்படம்.
இன்ஸ்பெக்டர் பரத்தின் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் இருக்கும் ஒரு மிகப் பெரிய அப்பார்ட்மெண்டில் மித்ரன் என்ற நான்கு வயது பெண் குழந்தை காணாமல் போகிறது.
அந்தக் குழந்தையை தேடும் பணியில் படத்தின் ஹீரோவான இன்ஸ்பெக்டர் பரத் தன்னுடைய நான்கு பேர் கொண்ட காவல் துறையினருடன் இணைந்து தேடுகிறார். ஆனால் இந்த தேடுதலில் போலீஸ் உயரதிகாரிகள் அந்த பகுதியின் துணை கமிஷனரான பவானிஸ்ரீயையும் மேற்பார்வையிட சொல்கிறார்கள்.
இதனால் பவானிஸ்ரீ அங்கே விசாரணைக்கு வருகிறார். அவருக்கும், பரத்துக்கும் துவக்கத்திலேயே முட்டல், மோதல் ஏற்படுகிறது இந்த நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலேயே கண்டெடுக்கப்படுகிறது.
இதையடுத்து அந்தக் குடியிருப்பில் இருக்கும் சந்தேகத்திற்கு உள்ளானவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது காவல்துறை. அப்போது வழக்கறிஞரான அஜய் கார்த்தியும் விசாரிக்கப்படுகிறார்.
அவர்தான் அந்த கொலையாளியோ என்ற அனைவரும் நினைக்கும் நேரத்தில் மூத்த வழக்கறிஞரான பிரகாஷ்ராஜ் இடையில் வந்து அஜய் கார்த்திக் அப்படிப்பட்டவர் அல்ல.. அவர் மீது எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்று சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார்.
இருந்த ஒரேயொரு சந்தேகப் பேர்வழியும் போய்விட.. அடுத்து யாரைப் பிடித்து விசாரிப்பது என்று பவானியும், பரத்தும் யோசித்து வரும் நேரத்தில் இன்னொரு சிறுமியும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
இப்போது குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் ஒரு பயம் ஏற்படுகிறது. யாரோ ஒரு தொடர் கொலைகாரன் அந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கிறான் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பவானிஸ்ரீயும், பரத்தும் கருத்தொற்றுமையாக இல்லை என்றாலும் இந்த வழக்கில் எப்படியாவது துப்பு துலக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். இதன் பின்பு என்ன நடந்தது… இந்த மரணங்கள் யாரால் ஏற்பட்டது… உண்மையான குற்றவாளி யார்… எப்படி அதை போலீசார் கண்டுபிடித்தார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரைக்கதையில் பரபர வேகத்தில் சொல்லி இருக்கிறது இந்த காளிதாஸ்–2 என்ற திரைப்படம்.
சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுக்காத பரத், இந்தப் படம் தனக்கு ஒரு வெற்றி வாயிலை திறந்து வைக்கும் என்று நினைத்ததால் இந்தப் படத்துக்காக நிறையவே உழைத்திருக்கிறார். அந்த உழைப்பின் விளைவு படத்தில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஒரு இன்ஸ்பெக்டராக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார் பரத். அதே சமயம் தன்னைவிட வயது குறைந்த பவானிஸ்ரீ அசிஸ்டன்ட் கமிஷனர் என்பதால் அவருக்கான மரியாதையும் கொடுத்து அதை போல் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் அவரிடம் சொல்லி அவருக்கு புரிய வைக்கும் முயற்சியில் தோற்று தோற்று மறுபடியும் சொல்லிக் கொடுக்கும் ஒரு பொறுப்பான இன்ஸ்பெக்டராக தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார் பரத்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. காமெடி காட்சிகள் இல்லை. காதல் ரொமான்ஸ்களும் இல்லையென்றாலும் படம் முழுவதும் கடைசி வரையில் ஒரு புலனாய்வு திரைப்படமாகவே நமக்கு காட்டப்பட்டிருக்கிறது.
இன்னொரு நாயகனாக அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடித்திருக்கிறார். இவருக்கு அதிகமாக பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும் சந்தேகப்படும்படியான ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்து அசத்தியிருக்கிறார் அஜய் கார்த்தி.
அவருடைய அமைதியான முகம் ஆனாலும் சந்தேகப்படும்படியான முகபாவனைகளோடு கடைசிவரையிலும் அவர் ஏற்றிருந்த அந்த ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தை நச் என்று செய்து தன்னுடைய அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். உண்மையில் இந்தப் படத்தின் முடிச்சு இவரிடம்தான் உடைபடுகிறது. அந்தக் கடைசி காட்சியில் இவருடைய நடிப்பும், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்த தோற்றமுமே இந்தப் படத்தின் கிளைமாக்ஸை நமக்கு சொல்கிறது அந்த வகையில் அமைதியாக இருந்து மிக அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் சங்கீதா.
அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கும் பவானிஸ்ரீ தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தவில்லை என்றாலும் தான் ஒரு உயர் அதிகாரி என்பதால் தான் செய்வது மட்டும்தான் இங்கு நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு அதிகாரியாக தன்னுடைய நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பிலும் தன் பதவிக்கான கௌரவத்தை நிலை நிறுத்தி இருக்கிறார்.
மகளை இழந்து வாடும் தாய் கதாபாத்திரத்தில் அபர்ணதி அழகாகவே நடித்திருக்கிறார். அவருடைய பரிதவிப்பும், படபடப்பும், அழுகையும் ஒருவித சோகத்தை படம் முழுவதும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. இதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார் அபர்ணதி. இவருடைய கணவராக நடித்திருக்கும் ஆனந்த்நாக், மூத்த வழக்கறிஞராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சந்தேகப்படும்படியான ஒரு தலைவனாக நடித்திருக்கும் கிஷோர் ஆகியோரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்திற்கு என்ன மாதிரியான ஒளிப்பதிவு வேண்டுமோ அதை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. படம் முழுவதும் அந்தக் குடியிருப்பிலேயே சுற்றி சுற்றி வருவதால் ஒவ்வொரு முறையும், வித்தியாசமான கோணத்தில் காட்சிகளை படமாக்கி நமக்கு போர் அடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். சில டிரோன் ஷாட்டுகளை பார்க்கும்பொழுது கொள்ளை அழகு என்று சொல்ல தோன்றுகிறது. திரைக்கதை பரபரப்பாக போகும்பொழுது, இன்னும் கூடுதலாக பரபரக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளையும், நடிப்பையும் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பின்னணி இசைக்கென்று அவதாரம் எடுத்து பிறந்து வந்திருக்கும் இசையமைப்பாளர் சாம், இந்தப் படத்தின் பாடல்களை விட்டுவிட்டு பின்னணி இசையில் அட்டகாசம் செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் இசையை மெளனிக்க வைத்து அந்த இடத்தில் நடிகர்களின் நடிப்பையும், காட்சியின் போக்கையும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் ஒரு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இருந்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும், பேசப்படும் என்பதுபோல இந்தப் படத்தின் ஒரு காட்சியைக்கூட நாம் பார்க்க மறந்துவிட்டால் அவ்வளவுதான்… படத்தின் முடிவு நமக்கு புரியாமல் போய்விடும் என்று சொல்லும்விதமாக திரைக்கதை அமைத்திருப்பதால் படத்தை எடிட்டிங் செய்திருக்கும் படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தை பக்குவமாக படத் தொகுப்பு செய்திருக்கிறார். இதனாலையே நாமும் இந்தப் படத்துடன் கடைசி வரையில் ஓட வேண்டி இருக்கிறது.
முதல் பாதியில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வதுபோல நமக்கு தோன்றினாலும் போகப் போக படத்தின் ஓட்டம் அதிகரிக்க அதிகரிக்க… இடைவேளைக்கு பின்பு பூஸ்டாக மாறி, நம்மை கொஞ்சமும் கவனம் தொலைக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறார் இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.
காவல்துறையின் உயர் மட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள், வயது குறைவான மேல் அதிகாரிகள் சொல்வதை வயது அதிகமான கீழ் அதிகாரிகள் எப்படி ஏற்பார்கள்? அவர்கள் மனதுக்குள் ஏற்படும் சஞ்சலம்? நான் சொல்வதுதான் சரி என்று நினைக்கும் அதிகாரிகளின் மலட்டுத்தனம்?.. இதுவெல்லாம் இப்போதும் காவல்துறையில் நீடித்து நிலைத்திருக்கும் பிரச்சினைகள். இதையெல்லாம் இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.
படத்தின் துவக்கத்திலேயே ஒரு குற்றச் செயல் நடப்பதுபோல கதை நகர்ந்து… காணாமல் போன பெண் குழந்தையை தேடும் பணியில் இறங்கி அடுத்தடுத்த காட்சிகளில் திடுக் திருப்பங்களாக கொண்டு சென்று இறுதியில் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத ஒருவர்தான் காரணகர்த்தா என்று இயக்குநர் சொல்லும்போது “அட இப்படியுமா நடக்கும்?” என்று படம் பார்த்த ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துவிட்டார் இயக்குநர் செந்தில்.
படத்தில் சில அல்லவைகளும் இல்லாமல் இல்லை. 2-வதாக ஒரு சிறுமி இறந்தவுடன் ஓடி வரும் காவல் துறையினரை உள்ளே வரக் கூடாது என்று அந்த அபார்ட்மெண்ட்வாசி கதவைப் பூட்டிக் கொண்டு தடுப்பதெல்லாம் சற்றே ஓவரான திரைக்கதை இயக்குநரே.. அவர் தடுக்கிறார் என்பதோடு அவரிடத்தில் போலீஸார் கெஞ்சுவது போல காட்சி வைத்திருப்பதும் படு அபத்தம்.
அதேபோல் கடைசியாக கொலையாளி இவர்தான் என்று நினைத்து சங்கீதாவைத் தேடி ஓடும் பரத்துக்கு அந்த சந்தேகம் எப்படி வந்தது என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளது. இந்த விளக்கத்தை ஒரு வசனத்தின் மூலமாகவாவது சொல்லியிருக்க வேண்டும். இயக்குநர் இதை சொல்லாதது அவர் செய்த பெரும் தவறு.
கடைசியாக இந்த ‘காளிதாஸ்–2’ படத்தின் அடுத்த பாகமும் வந்தாலும் வரலாம் என்பதுபோல் படத்தை முடித்திருப்பது எதிர்பாராதது.
நிச்சயம் இதுபோன்ற சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளோடு, மிகச் சிறந்த இயக்கமும் இணைந்தால் இது மாதிரியான படங்கள், எத்தனை பாகங்கள் வந்தாலும் நிச்சயமாக ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். படம் நிச்சயமாக வெற்றி பெறும்.
இந்த ‘காளிதாஸ்-2’ திரைப்படம், சினிமா ரசிகர்களையும் தாண்டி காவல் துறையினரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.
RATING : 4 / 5









