எம்.எல்.புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆறுமுகம் மதப்பன் தயாரித்திருக்கும் இந்த ‘வசூல் மன்னன்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வேல் குமரேசன்.
இந்தப் படத்தில் ஸ்ரீதேவா, நிவேதா, வேல ராமமூர்த்தி, சரவண சுப்பையா, சரவண சக்தி, ரிந்து ரவி, நவீன் கிருஷ்ணா, வைகுண்ட செல்வன், விஜயன், திவ்யா, ஜெயந்தி, சிந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு : ஆர்.என். சிவகுமார், இசை : பரணி சாமையா, படத்தொகுப்பு : சுரேஷ் அர்ஸ், கலை : சரவணன், தயாரிப்பு நிர்வாகம்:ஜவகர் மாரிமுத்து, அசோசியேட் –பாண்டிச்செல்வம், மு.காந்தி, ஜவகர் மாரிமுத்து, பத்திரிக்கை தொடர்பு–விஜயமுரளி, கிளாமர் சத்யா
லாஜிக் எல்லாம் பார்க்காமல் இரண்டு மணி நேரம் சிரிப்பு வரவில்லை என்றாலும் அமைதியாக அமர்ந்து பார்த்துவிட்டு வருவதற்கு ஏற்ற திரைப்படம் இது!
கிராமத்தில் வசிக்கும் ஹீரோ மதன் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்தவர். அவருடைய தங்கைக்கு திருமணம் செய்து வைக்க அந்த ஊரில் இருக்கும் பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் இப்போது அந்த பணத்தை திருப்பி கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
பி.இ., இன்ஜினியரிங் படித்த மதன் அதற்கேற்ற வேலைக்கு போகாமல் உள்ளூரிலேயே இருந்து கிடைக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எங்கே வேலை பார்த்தாலும் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் திருப்பி திருப்பி வந்து அவரிடம் கடன் கேட்பதால் ஏற்படும் பிரச்சனையினால் எந்த வேலையிலும் அவரால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை.
இதனால் சின்ன சின்ன ஏமாற்று வேலைகளை தன்னுடைய மாமா சரவணன் சக்தியுடன் இணைந்து செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
கடன் கொடுத்தவர்களை சமாளிக்க வேண்டி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து தனக்காக ஒரு போலீஸ்காரரை பாதுகாப்புக்கும் வைத்திருக்கிறார் ஹீரோ.
இந்த நேரத்தில் அதே ஊரில் பெரிய பணக்காரரான வேல ராமமூர்த்தியின் ஒரே மகளான நிவேதா எப்படியாவது தான் போலீஸ் ஆகிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய போலீஸ் கனவை தெரிந்து கொண்ட ஹீரோ ஸ்ரீதேவா, பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக நிவேதாவிடம் பொய் சொல்கிறார்.
இதை நம்பும் நிவேதாவும் 10 லட்ச ரூபாயை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு ஸ்ரீதேவாவிடம் கொடுப்பதற்காக ஓடி வருகிறார்.
அந்த நேரத்தில் விதி விளையாண்டு ஸ்ரீதேவா பெரிய கடன்காரர். இப்பொழுது சின்ன சின்ன பொய்களை சொல்லி, ஏமாற்று வேலைகளை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற உண்மை நிவேதாவுக்கு தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த நிவேதா இப்பொழுது நம்மால் ஒன்று செய்ய முடியாது. ஆனால் போலீஸானால் ஸ்ரீதேவா மாதிரியான ஆட்களை பிடித்து உள்ளே வைக்கலாம் என்று நினைத்து போலீஸ் வேலைக்கு மிக நியாயமான முறையில் தேர்வு எழுதி பாஸாகி சப்–இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார்.
அதே ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக அமரும் ஹீரோயின் நிவேதா, ஹீரோவை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்துவிடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால், அப்போதுதான் ஹீரோ எதனால் இப்படி ஒரு சிக்கலுக்கு உள்ளானார்? எப்படி தங்கையின் கல்யாணத்தை நடத்தினார்? எதனால் இப்படி கடனாளி ஆனார்? என்கின்ற தகவல்கள் நிவேதாவுக்கு தெரிய வர… வழக்கமான திரைப்படம்போல் ஹீரோயினுக்கு ஹீரோ மீது இருந்த கோவம் எல்லாம் போய் பரிதாபம் ஏற்பட்டு அது காதலில் போய் முடிகிறது.
அந்த நேரத்தில்தான் ஹீரோயினின் அப்பாவான வேல ராமமூர்த்தி செய்த ஒரு கொலை பற்றிய ஆதாரம் ஹீரோவுக்குக் கிடைக்க அவர் அதைப் பயன்படுத்தி வேல ராமமூர்த்தியை மாட்டிவிட நினைக்கிறார். இப்பொழுது ஹீரோவை போட்டு தள்ளவும் ஆட்கள் ரெடியாக இருக்க.. இந்தப் பிரச்சனையிலிருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.
சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகன் ஸ்ரீதேவா இந்தப் படத்தில் முதல்முறையாக நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
கடன் சுமையால் ஒவ்வொரு கடன் கொடுத்தவரையும் பார்த்தாலே ஓடி ஓளிகின்ற காட்சிகளில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்து இருந்தாலும் அவருடைய நடிப்பு அந்த இடத்தில் இன்னும் பெட்டராக வந்திருக்க வேண்டும்.
படம் சாதாரண கமர்சியல் படம்தான் என்றாலும் சில காட்சிகளில் ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அழுத்தமாக பதிய வைக்கும் அளவுக்கு நடித்திருக்க வேண்டும். ஆனால் படத்தின் இயக்குனர் அனைத்தையுமே காமெடியாகவே நினைத்துவிட்டதால் ஹீரோவும் அனைத்துக் காட்சிகளிலுமே எந்த ஒரு சென்டிமென்ட் உணர்வுகளுக்கும் ஆளாகாமல் எப்போது சிரித்த முகத்துடனே வலம் வந்திருக்கிறார்.
நாயகி நிவேதா போலீஸ் வேலையின் மீது இருந்த வெறித்தனத்தை தன்னுடைய நடிப்பில் காட்டியிருக்கிறார். எப்படியாவது ஹீரோவை சிறையில் வைத்துவிட வேண்டும் என்று அவர் செய்கின்ற திரைக்கதையும் ரசிப்பதாக இருந்தாலும் முடிவு எப்படியும் இப்படித்தான் இருக்கும் என்ற நம்முடைய அவதானிப்பின் காரணமாக அதையும் ரொம்பவே ரசிக்க முடியவில்லை. ஆனாலும் பாடல் காட்சிகளில் மிக மிக அழகாக தெரிகிறார். ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் நிவேதாவின் அழகு படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கிறது.
ஹீரோவின் மாமாவாக நடித்திருக்கும் சரவணா சக்தி சிற் சில பிரச்சனைகளில் தன்னுடைய மாப்பிள்ளையை காப்பாற்றும்விதமாக பேசி திரைக்கதைக்கு உதவி செய்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் அந்த ஊரில் நடந்த ஒரு படுகொலையை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டரான சரவணன் சுப்பையா, ஊர்ப் பெரிய மனிதரான வேல ராமமூர்த்தி இருவரும் தங்களுடைய சிறந்த நடிப்பையே காண்பித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி இன்னும் எத்தனை நாளைக்கு இதே மாதிரியான தன்னுடைய முறைப்பையே கோப நடிப்பாக காட்டுவார் என்று தெரியவில்லை.
மேலும் படத்தில் ஹீரோவின் அம்மாவாக நடித்தவர், ஹீரோயினின் அம்மாக நடித்த சிந்துஜா, வைகுண்ட செல்வன், நவீன் கிருஷ்ணா, வைகுண்ட செல்வன், தங்கையாக நடித்த திவ்யா போன்றோரும் அளவோடு நடித்து தங்களுடைய வேலையை முடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் இசையும், பாடல்களும்தான்! இசையமைப்பாளர் பரணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துமுத்தாக இருக்கின்றன. அனைத்து பாடல் வரிகளும் மிக எளிமையான தமிழில் நாம் கேட்கும் வகையில் இசையை கொஞ்சமாக வைத்து பாடகர்களின் குரலை உயர்த்தி வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கிறார். இதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.
படம் முழுவதும் கிராமப்புறத்திலும், அதை ஒட்டிய நகரங்களிலுமே நடப்பதால் சுற்றி சுற்றி அந்த ஏரியாவில் படத்தை படமாக்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் தன்னுடைய சீரான ஒளிப்பதிவில் சின்ன பட்ஜெட் படம் என்பதையும் உணர்த்தும் வகையில் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
இடைவேளைக்கு பின்னான காட்சிகளை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் ஒரு சாதாரண கமர்சியல் படம். ஆனாலும் பார்க்க முடியும் என்கின்ற ஒரு தோரணையில் படத்திற்கு மிக அழகாக எடிட்டிங் செய்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ்.
ஹீரோ பி.இ. படித்திருந்தாலும் ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவது, செய்வது என்கின்ற நோக்கமெல்லாம் இல்லாமல் போகிறபோக்கில் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் கடன்காரன் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரு வழியும் தேடாமல்.. ஜாலியாக இருக்கும் ஹீரோவின் கதையாகவே இந்தப் படத்தை கடைசிவரையிலும் கொடுத்திருக்கிறார். இயக்குநர்.
இது காமெடி படம்தான் என்றாலும் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இதே ஃபீலிங் நிச்சயம் இருந்திருக்கும். அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுவது போலவோ அல்லது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஊட்டுவது போலவோ திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தங்கையின் திருமணத்திற்காக மட்டுமே இவ்வளவு பணத்தை கடனாக வாங்கி திருப்பி கட்ட முடியாமல் தவிக்கும் இவரது செயலை முட்டாள்தனம் என்றாவது யாராவது ஒரு கேரக்டரை வைத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் சொல்லாமல், செய்யாமல்.. ஹீரோவின் தப்பியோடலை பரிதாப உணர்ச்சியாக நமக்கு மாற்ற முனைந்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அது கடைசியில் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.
அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது. சம்பாதிப்புக்கு ஏற்றவாறுதான் செலவு செய்ய வேண்டும். தகுதி மீறி விழாக்களையும் நடத்தக் கூடாது என்கின்ற நம்முடைய மூதாதையர் சொன்ன கருத்துக்கு விரோதமாக இந்தபி படத்தின் ஹீரோ நடந்து கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கிறார்.
இதைத்தான் நாம் இந்த படத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அளவோடு ஆசைப்படுங்கள். தகுதிக்கு மீறி செலவு செய்யாதீர்கள். இதுதான் இந்தப் படத்தின் மூலமாக நாம் தெரிந்து கொண்டது.
RATING : 3 / 5









