கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம். தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி தயாரிப்பாளர்களும், நட்சத்திர நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும், விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ”பொதுவாகவே மேடையில் பேசுவது என்றால் சிறிது அச்சமும், தயக்கமும் இருக்கும். அதிலும் இங்கு எனக்கு முன்னால் சிற்பிகளும், பிரம்மாக்களும் அமர்ந்திருக்கிறார்கள்.
திரைத்துறையை பொறுத்தவரை நான் சின்னவன்தான். பிசினஸ் என்றால் தலைக்கனத்துடன் பேசுவேன். ஆனால் சினிமா என்றால் நான் எல்கேஜிதான்.
சினிமாவிற்கு திரையுலகினர் – ஊடகங்கள் – மக்கள் – ரசிகர்கள்- ஆகியோரின் ஆதரவும், ஆசியும் தேவை.
இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக திகழும் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இவ்வளவு விரைவாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன்.
அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறமையான பெண். இவ்வளவு அன்பாகவும், கனிவாகவும் இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. அதற்கு என் வாழ்த்துக்கள்.
இந்த ‘டெக்ஸ்லா’ படமும் சிறப்பாக வரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக என்னுடைய சகோதரர் சுராஜ். சிறந்த கலைஞர். அவருடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு தவறியது. இந்தப் படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் சிறந்த நண்பர். கலைஞர்.
ஜெய், அனிருத் உள்ளிட்ட இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணம் தொடரும்” என்றார்.









