full screen background image

மை லார்ட் – சினிமா விமர்சனம்

மை லார்ட் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார்.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம்.ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி.சி.ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். 

அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை இத்திரைப்படம்  உணர்வுபூர்வமாக விவரித்துள்ளது.

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்…  இப்படம் பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

கிட்னி திருட்டு பற்றி அவ்வப்பொழுது தமிழகத்தில் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் 1980, 90களில் மிகப் பெரிய அளவுக்கு இதில் மோசடியும் நடந்தது.

கிட்னியை தானமாகத்தான் தர வேண்டும். பணத்திற்காக விற்கக் கூடாது என்பது மருத்துவத் துறையின் சட்டம். ஆனால் ஏழை, எளிய மக்களின் பொருளாதார சிக்கலை, அவர்களின் வறுமையை பயன்படுத்தி பல ஊர்களில், பல மருத்துவமனைகளில் இந்த கிட்னி சூரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு பிரச்சனையை முன் வைத்துதான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை என்று இப்பொழுதும் படப்படும் ஐயா வள்ளலாரின் பெயரில் ஒரு அனாதை விடுதி உள்ளது.ந்த விடுதியில் வளர்ந்தவர் படத்தின் ஹீரோவான சசிக்குமார் என்ற முத்து சிற்பி.

இவர் மிகச் சிறிய வயதிலேயே இந்த அனாதை ஆசிரமத்தை நடத்தி வந்தவரிடம் அடைக்கலமானவர். அந்த ஆசிரமத்தை நடத்தி வந்தவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. அவர்தான் படத்தின் நாயகி சுசீலா. அந்தப் பெரியவர் மரணமடையும் சூழலில் முத்துச் சிற்பியிடம் சுசிலாவை பத்திரமாக பார்த்துக் கொள்.. நீதான் அவது கார்டியன் என்று சொல்லிவிட்டு இறக்கிறார்.

இப்போது இருவருமே வாலிப வயதில் இருக்கிறார்கள். சுசிலா தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு பல மாப்பிள்ளைகளையும் பார்த்து தருகிறார் முத்து சிற்பி. ஆனால், அனைவரையுமே தட்டிக் கழிக்கிறாள் சுசிலா. காரணம் அவள் முத்து சிற்பியை விரும்புவதுதான்.

இப்பொழுது அந்த ஆசிரமத்தை நடத்தி வருபவர் சுசிலாவை திருமணம் செய்து கொண்டு தனியாக ரேஷன் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறும்படி அழுத்தம் கொடுக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் முத்து சிற்பி, சுசிலாவை திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் ரேஷன் கார்டும் கிடைக்கிறது.

இனி அமைதியான முறையில் மனம் போல் மாங்கல்யமாக வாழ்க்கையை வாழலாம் என்று நடித்த சுசிலாவின் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. அவருக்கு ஒரு தீராத நோய் ஒன்று இருப்பதை இப்பொழுதுதான் கண்டறிகிறார்கள்.

மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்தாலும் பெரிய தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் மிக எளிதாக சரி செய்து விடலாம் என்று முத்துச்சிற்பியிடம் கிட்னி புரோக்கர் சொல்கிறார்.

இவருடைய ஆசை வார்த்தையில் சிக்கிய முத்து சிற்பி எப்படியாவது சுசிலாவை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறார். இதனால் சிகிச்சைக்கு பணம் வேண்டுமே என்பதால் கந்து வட்டிக்கு கடன் தரும் வசுமித்ராவிடம் முத்து சிற்பியை அழைத்துச் செல்கிறார் புரோக்கர்.

மனைவியின் மருத்துவச் செலவுக்காக இவரிடம் கடன் வாங்கும், முத்துச்சிற்பி அதற்குப் பிறகு புரோக்கரின் தூண்டுதலால் ஒவ்வொரு மருத்துவமனையாக மாற்றி மாற்றி சுசிலாவை அழைத்துச் செல்ல.. இதற்காக வட்டிக் கடைக்காரனிடம் திரும்பத் திரும்ப கடன் வாங்குகிறார். கடன் வட்டி மேல் வட்டி போட்டு அது குட்டியும் போட்டு இன்றைக்கு முத்துச்சிற்பியின் கழுத்தில் இருக்கிறது.

இந்தக் கடனிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரே வழிஉன் கிட்னியை விற்றுவிடு “என்கிறார் புரோக்கர். வட்டிக்கடைக்காரர் வசுமித்ராவும் இதையே சொல்ல..

இது மொத்தமாக சங்கிலி தொடராக அமைக்கப்பட்ட ஒரு திருட்டு வழி திருடர்களின் நெட்வொர்க் என்பது தெரியாத படிப்பறிவு இல்லாத முத்துச் சிற்பி இந்த சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

இதிலிருந்து தப்பிக்க நினைத்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு ஓடுகிறார் முத்துச்சிற்பி.

ந்த ஒரு கிட்னியை வைத்து லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று நினைத்திருந்த வசுமித்ரா, முத்துச் சிற்பியை கண்டறிய முடியாமல் வேறொரு வழியைக் கையாள்கிறார்.

சுசீலா வேலை பார்த்த தீப்பட்டி தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் முத்துச்சிற்பியும், சுசீலாவும் இறந்து விட்டதாக பொய்யான தகவலை கொடுத்து அரசு தரப்பில் கொடுக்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகையையும் அவரே பெற்றுக் கொள்கிறார். இதனால் முத்து சிற்பி, சுசிலா தம்பதியரின் ரேஷன் கார்டும் செல்லாததாகி விடுகிறது.

திருப்பூரில் பணம் சம்பாதித்து அதை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் முத்துச் சிற்பிக்கும் சுசீலாவுக்கும் பிரச்சனை பூதாகரமாக உள்ளது.

அவர்கள் இறந்துவிட்டதாக பதிவாகியிருப்பதால் மறுபடியும் ரேஷன் கார்டு தர முடியாது என்கிறார்கள் அதிகாரிகள். இதனால் இப்போது ரேஷன் கார்டு கேட்டு மிகப் பெரிய அளவுக்கு கவன ர்ப்பு போராட்டம் எல்லாம் நடத்துகிறார் சசிகுமார். ஆனால் பலன் இல்லை. இப்போது இவருக்கு உள்ளூரில் இருக்கும் பத்திரிகையாளர் குரு சோமசுந்தரம் மட்டுமே உதவி செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கும் ஆஷா ரத்துக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். அவருடைய ரத்தம் அருகிலும் அரிதான வகையைச் சேர்ந்தது என்பதால் அது போன்ற ரத்த வகை உள்ள கிட்னி டோனர்களை தேடி இந்தியா முழுவதும் வேட்டை நடக்கிறது.

கடைசியாக பீகாரில் இருக்கும் ஒருவரும், சிவகாசியில் இருக்கும் முத்து சிற்பியும் இந்த அரிய வகை ரத்த உள்ளவர்கள் என்பது தெரிய வருகிறது. இப்பொழுது மத்திய அமைச்சரின் உயிரை காப்பாற்ற முத்து சிற்பியை தேடி ஓடி வருகிறார்கள் அமைச்சரின் ஆட்கள்.

அமைச்சரின் ஆட்கள் முத்து சிற்பியிடம் வந்து கிட்னியை கேட்கிறார்கள். கிட்னியை தர சம்மதிக்கும் முத்துச்சிற்பி, “எனக்கு ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தால் அதைத் தருகிறேன் என்கிறார். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சொன்னால் எந்த சட்டமும் வளையுமே! ஒரே நாளில் ரேஷன் கார்டு முத்துச்சிற்பியின் கைக்கு வருகிறது.

சந்தோஷமாக கிட்னியை கொடுத்து விடலாம் என்று நினைத்து அவர்களுடன் சென்ற முத்து சிற்பிக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன?.. அதற்குப் பிறகு நடந்தது என்ன?.. முத்துச்சிற்பி கிட்னியை தாம் கொடுத்தாரா? இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கடந்த சில வருடங்களாக விளிம்பு நிலை மனிதர்களின் எளிய வாழ்க்கையை சொல்லும் திரைப்படங்களும், அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு அப்பாவி மக்களை துன்புறுத்தி சட்டத்தின் பார்வையில் இருந்து மறைத்து விடும் அராஜக அதிகாரங்கள் பற்றியும் பல திரைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால், இந்தப் படங்களை தொடர்ச்சியாக நமக்கு கொடுத்து வருபவர்கள் அனைவருமே பத்திரிக்கை துறையில் இருந்து இயக்குநரான திறமைசாலிகள் என்பதுதான் உண்மை.

அந்த வகையில் வட்டியும் முதலும் என்கின்ற ஒரு புத்தகத்தை எழுதியது மூலமாக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பத்திரிகையாளர் ராஜூ முருகன் குக்கூ, ஜோக்கர் என்ற திரைப்படங்கள் மூலமாக தேசிய அளவில் பாராட்டை பெற்றார். இப்பொழுது இந்த மை லார்ட் திரைப்படத்தின் மூலமாக இன்னும் ஒரு பாராட்டையும் பெற்று இருக்கிறார்.

படத்தில் முத்துச்சிற்பியாக நடித்திருக்கும் சசிகுமார் ஒரு அப்பாவி.. ஏழை, எளிய மனிதனாக தோற்றத்தில் மட்டுமல்ல.. தன்னுடைய பேச்சில், உடல் மொழியில், நடத்தையில்.. என்று அத்தனையிலும் ஒரு அழகான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

இந்த நடிப்புக்கு அவருடைய குரலும் ஒரு வகையில் ஒத்துப் போயிருக்கிறது. முத்துச்சிற்பி என்ற மிக அழகான பெயரை இப்படி ஒரு அப்பாவி மனிதருக்கு வைத்திருக்கும் இயக்குரின் நோக்கம் என்னவென்று படம் பார்க்கும் பொழுதே நமக்கு தெரிகின்றது

அறிமுகக் காட்சிகளிலேயே மிக அழகான நடனத்தோடு, இசைக்கும் இசையோடு, ஒலிக்கும் பாடலோடு… அந்தப் பாடல் வரிகளிலேயே தன்னுடைய கதையையும் சொல்லி அரசுகளின் ஏமாற்று வேலையையும் சொல்லி, அதிகாரத்தின் வேட்கையையும் சொல்லி… மிக அழகாக நடனமும் ஆடி, மிகப் பெரிய ஒரு எதிர்பார்ப்பை படத்தை துவக்கத்திலேயே கொடுத்துவிட்டார் முத்துச்சிற்பியான சசிகுமார்.

சுசிலா தன்னைத்தான் காதலிக்கிறாள் என்கின்ற அந்த உணர்வுகூட தெரியாமல் “நம்மை விரும்புகிறாள்.. அதனால் திருமணம் செய்து கொள்வோம்…” என்கின்ற ஒரு சராசரி சாதாரண மனிதனின் மன ஓட்டத்தில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதும், அதற்கு பிறகு அந்த சுசீலாவை தன்னுடைய தாய் போல் பாவித்து பேசுகின்றவிதமும் அரவணைக்கின்ற காட்சிகளிலும் நம்மை பெரிதும் கவர்கிறார் சசிக்குமார்.

போலீஸிடம் தர்ம அடி வாங்கும்பொழுது தன்னுடைய கோரிக்கையை விடாமல் சொல்வதும்.. கிட்னியை பற்றி கவலை இல்லை. ஆனால் ரேஷன் கார்டுதான் வேண்டும் என்று ஒரு எளிய மனிதன் எப்படி கெஞ்சுவனோ அதுபோல பேசும்போது, அந்த நடிப்பின் மூலம் மிகப் பெரிய ஆதரவைப் பெறுகிறார் சசிகுமார்.

வந்திருப்பது பெரிய இடம் என்று தெரிந்து, தான் என்ன கேட்டாலும் செய்து தருவார்கள் என்பதையும் உணர்ந்ததால்… போகின்ற வழியில் ஜெயிலுக்குள்ளே நுழைந்து தன் மனைவி முன்பாகவே தன்னை அடித்தது அவமானப்படுத்திய வசமித்ராவை அடிக்கின்ற காட்சியில் கொஞ்சம் காமெடியையும் கலந்து இயக்குநர் கொடுத்திருப்பதால் சசிகுமார், சுசிலா ஜோடியின் நடிப்பை நம்மால் பெரிதும் ரசிக்க முடிகிறது.

சுசிலாவாக நடித்திருக்கும் சைத்ரா, இயக்குநரின் திறமையான இயக்கத்தினால் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார். இவருடைய முகம் திரைப்படத்திற்கு ஏற்ற முகமல்ல. ஆனால் ஏழை பெண்ணாக அந்த வட்டாரத்தில் இருக்கும் முகப்பாவனையோடு இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மிக அழகாகவும் நடித்திருக்கிறார். நோயின் தாக்கத்தால் அவர் படும் அவஸ்தையும் வேதனையும் நமக்கே பாவம் என்கின்ற ஒரு பாவத்தை ஏற்படுத்திவிட்டது.

கிட்னி புரோக்கராக நடித்திருக்கும் மூத்தப் பத்திரிகையாளரான அருள் எழிலன் இது மாதிரியான புரோக்கர் வேலை செய்பவர்கள் தங்களுடைய நாக்கில் தேன் கலந்ததுபோல… எவ்வளவு இனிமையாக பேசி, எவ்வளவு அழகாக கவர்ந்து, அப்பாவி மக்களை மடக்குவார்கள்.. மயக்குவார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தன்னுடைய நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார். மிகப் பெரிய பாராட்டுக்கள் அருள் எழிலனுக்கு.

கந்து வட்டி கொடுமைக்காரராக நடித்திருக்கும் எழுத்தாளர் வசுமித்ரா… கடன் கொடுக்கும் பொழுதெல்லாம் கர்ணனாக அமைதியாக பேசி கடன் தலைக்கு மேல் போனவுடன் திருப்பி வசூலிக்க வேண்டிய கட்டாயம் வந்தவுடன் நரகாசுரனாக மாறி முத்துச்சிற்பியின் கழுத்தைப் பிடிக்கும் பொழுது இப்படிப்பட்டவர்களெல்லாம் எப்படி தமிழ்நாட்டில் பிறந்தார்கள் என்று ஒரு சந்தேகத்தையே நமக்குள் ஏற்படுத்திவிட்டது. அப்படி ஒரு கொலைகார கூட்டத்தின் முகவராக காட்சியளிக்கிறார் வசுமித்ரா. சிறப்பான நடிப்பு. பாராட்டுக்கள்.

இந்தப் படத்தில் இதுவரையிலும் இல்லாத வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதியை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர். நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பிரச்சனையின் மூலத்தை தெரிந்து கொண்டு முத்துச்சிற்பியையும், சுசிலாவையும் காப்பாற்ற நினைக்கும் அந்த தருணத்தில் மிகப் பெரிய பாராட்டையும் பெறுகிறார்.

முத்துச்சிற்பிக்கு உதவி செய்து வரும் உள்ளூர் பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் ஒரு அழகான கேரக்டர் ஸ்கெட்ச்சில்.. எப்பொழுதும் கெத்தாக தெரியக் கூடிய ஒரு உடல் மொழியில்… முத்துச்சிற்பியின் கதையை கொஞ்சம், கொஞ்சமாக அவர் சொல்லும்பொழுது மிக அழகாக நடித்திருக்கிறார்.

கோடி கணக்கில் பணம் இருக்கிறது. மத்திய அமைச்சர் என்ற அதிகாரம் இருக்கிறது. இந்தியாவின் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி அமைச்சராக நடித்திருக்கும் ஆஷா சரத் தன்னுடைய நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவருக்கு கிட்னி தேவை என்றாலும் அதைக் கொடுப்பதற்கு அவர் பெற்ற மகனும், மகளும் முன் வராமல்… அம்மாவை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற ஒரே ஒரு கொள்கையில் இருக்கும் அவருடைய குடும்பத்தையும் அக்குவேறு ஆணிவேராக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இறுதியில் ஆஷா சரத் செய்யும் அந்த ஒரு ஒரே ஒரு நல்ல காரியத்தினால் அவர் கடைசியாக நம்மிடம் இருந்து பாராட்டை பெற்றிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் நிறம் மாறாத வகையில் படப் பதிவு செய்திருக்கும் நீரவ்ஷாவின் கேமராவிற்கு நமது பாராட்டுக்கள். அவ்வளவு அழகாக சிவகாசி பகுதிகளின் சுற்றுப்புறத்தையும், ஆஷா சரத்தின் வீட்டில் நடக்கின்ற காட்சிகள்… மற்றும் மருத்துவமனை காட்சிகளையும் கொஞ்சமும் சலிப்பு தட்டாத வகையில் வேறு வேறு கோணத்தில் படமாக்கி இருக்கிறார். பாராட்டுக்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். மிக எளிய வார்த்தைகளில் படத்தின் கதையேயே சொல்லும்படியாக பாடல்களை எழுதியிருக்கும் யுக பாரதிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். பின்னணி இசையில் நாடகத் தன்மையும் இல்லாமல் நவீனமும் இல்லாமல் எளிமையாக நம் மனதை தூண்டிவிடும் வகையில் கடைசிவரையில் இந்த படத்தை நீங்கள் பார்த்துதான் ஆக வேண்டும் என்பது மாதிரியான ஒரு சூழலுக்கு நம்மை தள்ளி நம்மை அழகாக அழைத்துச் செல்கிறது ஷான் ரோல்டின் பின்னணி இசை.

படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் வேறு வேறு இடங்களில் இருந்து காட்டப்படுவதை நாம் உணரும் வகையில் பட தொகுப்பாளர் தன்னுடைய வித்தையை அழகாக காட்டி படத் தொகுப்பினை செய்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு படத் தொகுப்பும் மிகச் சிறந்த ஒரு உதவியாக அமைந்துள்ளது.

இன்றைய நவீன இந்தியாவில் ஒரு எளிய மனிதர்… அரசு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய கோரிக்கையை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வது என்பது சாத்தியமில்லாதது என்பதை அரசு அலுவலகம் எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.

கிட்னி தானம், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை… இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? இதிலிருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அப்பாவி, எளிய மக்களை பணக்கார வர்க்கத்தினர் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்.. என்பதற்கான காரணத்தை எல்லாம் பல வசனங்கள் மூலமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். நிச்சயமாக இந்தப் படத்தை பார்க்கும் சினிமா ரசிகர்கள், கிட்னி திருட்டு பற்றிய ஒரு மிகப் பெரிய பொது அறிவினை நிச்சயம் கற்றுக் கொள்வார்கள்.

ஒரு நீதிபதியாக இருந்தும் வழக்கு தொடர்ந்திருக்கும் முத்துச்சிற்பியும், சுசிலாவும் நீதிமன்றத்தை விட்டு வெளியில் சென்றால் நிச்சயம் கொலை செய்யப்படுவார்கள் என்பதை யூகிக்கும் நீதிபதி அவர்களை கோர்ட்டிலேயே அமர வைத்து பாதுகாக்கின்ற அந்தக் காட்சி கொஞ்சம் லாஜிக் எல்லை மீறலாக இருந்தாலும், இந்தக் காட்சியை இணைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை சேர்க்காமல்விட்டதினால் இந்த பிரச்சனை வந்திருக்கிறது என்பதை இயக்குநர் மூலமாக தெரிந்து கொண்டோம். ஆகவே, இந்த ஒரு சிறிய தவறை நாம் கண்டுகொள்ளாமல் விடுவோம்.

படத்தின் பல காட்சிகளில் எளிய மக்கள் யார்… பணக்காரர்கள் யார்… படிக்காத ஏழைகள் யார்.. படித்த அதிகார வர்க்கத்தினர் யார்… என்பதெல்லாம் நமக்கு குறியீடுகளாக சொல்லப்பட்டிருக்கிறது.

மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள் தாங்கள் பணம் சம்பாதிக்க தங்களை கடவுளாக நினைத்து ஓடி வரும் நோயாளிகளை ஏமாற்றுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்றாலும், அவர்கள் எப்போது பணக்காரர்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என்பதை இதன் மூலமாக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

எவ்வளவு சொத்துக்கள் இருந்தும்… எவ்வளவு அதிகாரம் இருந்தும்… ஒரு நாளைக்கு 200 மில்லி தண்ணிதான் குடிக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்தில் இருக்கும் கிட்னி ஃபெயிலியர் பேஷண்ட்ஸ்… அவர்களுடைய பிரச்சினைகள்.. இதையெல்லாம் காட்டிய கையோடு, சுரண்டுவதற்காக அழைத்து வரப்பட்ட எளிய மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதுபோல… சசிக்குமார் சாப்பிடுகின்ற காட்சிகளை விஸ்தாரமாக காட்டி இருப்பது ஒரு அழகான ஒப்பீடு.

இந்தப் படத்தில் நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் இதுவரையிலும் இந்து மத கடவுள்களை தூக்கி பிடித்து இருக்கும் திரைப்படங்கள்தான் அதிகமாக வெளிவந்திருக்கின்றன.

ஆனால், இப்போதுதான் முதல்முறையாக அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்று உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்று அருளிய ஐயா வள்ளலாரின் கருத்துக்களை மக்கள் மனதில் பொருத்துவதுபோல இடையிடையே வள்ளலாரை ஞாபகப்படுத்திக் கொண்டே வந்ததும்… அவருடைய கருத்துக்களையும் சிறப்புக்களையும் ஆங்காங்கே திரைப் பதிவில் காண்பித்ததும் பாராட்டக் கூடியது.

வள்ளலார் பெயரில் அமைந்திருக்கும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்திருக்கும் முத்துச்சிற்பி என்ற சசிகுமார் நிச்சயமாக நல்ல மனிதராகத்தான் வளர்க்கப்பட்டிருப்பார் என்பது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

அதனால்தான் அவ்வளவு கஷ்டத்திலும் திருப்பூர் சென்று பணம் சம்பாதித்து மறுபடியும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக தேடி வந்து பணத்தை கொடுக்க முயலும் அந்த மனிதனின் மனம் முழுவதும் நிச்சயம் வள்ளலார்தான் நிரம்பியிருக்கிறார் என்று உறுதியாக சொல்லலாம்.

இந்தப் படம் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்.

பள்ளி, கல்லூரிகளில் கட்டப்படக் கூடிய திரைப்படம்.

குடும்பத்துடன் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும் கூட..!

மிஸ் பண்ணிடாதீங்க..

RATING : 4.5 / 5

Our Score