இன்றைய சினிமாவில் ஆக்ஷன், பஞ்ச் டயலாக், பின்னணி இசை என எல்லாமே சத்தமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு வார்த்தை கூட இல்லாமல் அமைதியாக வந்து கவனத்தை ஈர்த்துள்ளது Zee Studios தயாரிப்பில் உருவாகியுள்ள “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர்.
டீசரில் எந்த வசனமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு மௌன இடைவெளியும் பல கேள்விகளை எழுப்புகிறது. “இந்த காந்தி யார்?”, “என்ன சொல்ல வருகிறார்?”, “எதை மறைத்து வைத்திருக்கிறது இந்த மௌனம்?” என்ற ஆர்வம் பார்வையாளர்களுக்குள் இயல்பாக உருவாகிறது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் வசனமின்றி கண்கள், உடல் மொழி, முகபாவனைகள் மூலம் கதையின் ஆழத்தை உணர்த்துகிறார்கள். இது நடிப்பு அல்ல… ஒரு உணர்வு அனுபவம் போலவே டீசர் நகர்கிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், மௌனத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி திரை மொழியில் புதிய முயற்சியை செய்திருக்கிறார். அதற்கு உயிர் ஊதுவது ஏ.ஆர். ரஹ்மானின் இசை. வார்த்தைகள் பேசாத இடத்தில், இசையே கதையின் குரலாக மாறுகிறது.
Zee Studios வழங்க, Kyoorius Digital, Pincmoon Meta Studios, Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள “காந்தி டாக்ஸ்” வழக்கமான பயோபிக் அல்லது அரசியல் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, உணர்ச்சியை மையமாகக் கொண்ட சினிமா அனுபவமாக உருவாகி வருவதை இந்த டீசர் உறுதி செய்கிறது.
2026 ஜனவரி 30 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் “காந்தி டாக்ஸ்”,சத்தமில்லாமல் வந்து, நீண்ட நாட்கள் மனதில் ஒலிக்கப் போகும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை டீசரே விதைத்திருக்கிறது.









