இந்தப் படத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், ஜரினா வஹாப், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி, சத்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை மற்றும் பின்னணி இசை – தமன், ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி, சண்டைக்காட்சிகள் – ராம்-லக்ஷ்மன், கிங் சாலமன், படத்தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், தயாரிப்பு – பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர்கள்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா, எழுதி இயக்கியவர் – மாருதி, பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம்.
ராஜூ என்ற பிரபாஸ் தன்னுடைய பாட்டியான கங்கம்மாவுடன் ஆந்திராவின் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். கங்கம்மா ஒரு மிகப் பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இப்போது அல்சைமர் நோயாளி பாதிக்கப்பட்டு தன்னுடைய பேரனுடன் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
கங்கம்மா தூங்கும்பொழுது அடிக்கடி கனவு காண்கிறார். அந்தக் கனவில் அவருடைய காணாமல் போன கணவர் உயிருடன் இருப்பதுபோல கனவுகள் வருகின்றன. இதனால் தன்னுடைய பேரனிடம் சொல்லி எப்படியாவது கணவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டே இருக்கிறார்
20 வருடங்களுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டு இன்னமும் பிரபாஸின் தாத்தாவை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் தற்செயலாக ஒரு வீடியோவில் அவருடைய தாத்தாவைப் போன்ற ஒருவரை பார்க்கிறார் பிரபாஸ். உடனடியாக ஹைதராபாத்துக்கு சென்று தன்னுடைய தாத்தாவை கண்டுபிடிக்க கிளம்புகிறார் பிரபாஸ்.
ஹைதராபாத்துக்கு வந்த இடத்தில் கன்னியாஸ்திரியாக இருக்கும் நிதி அகர்வாலை சந்திக்கிறார் பிரபாஸ். பார்த்த மாத்திரத்திலேயே நிதி அகர்வாலை அவருக்கு மிகவும் பிடித்துப் போக வந்த வேலையை விட்டுவிட்டு காதலிக்கும் வேலையை தொடர்கிறார்.
தன்னைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி தன்னுடைய கண்ணில்படுவதுபோல காதல் சேட்டைகளை செய்யும் பிரபாஸை, நிதி அகர்வாலும் கண்டு கொள்கிறார்.
இந்த நேரத்தில் ‘பைரவி’ என்ற மாளவிகா மோகனும் பிரபாஸின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். தன்னுடைய தாத்தா ‘நர்சாபூர்’ என்கின்ற காட்டில் இருக்கும் அரண்மனையில் வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் ஜமீன்தார் அரண்மனையில் முக்கியஸ்தராக இருந்த சமுத்திரக்கனி மூலமாக பிரபாஸூக்குத் தெரிய வருகிறது.
இதையடுத்து அந்த ‘நர்சாபூர்’ காட்டில் இருக்கும் அரண்மனைக்கு பிரபாஸ் தன்னுடைய குழுவினருடன் தன்னுடைய தாத்தாவை தேடி செல்கிறார்.
ஆனால் அங்கே போன பின்புதான் தாத்தா எப்பொழுதோ இறந்துவிட்டதும், அவருடைய ஆவி அந்த அரண்மனையில் சுற்றிக் கொண்டு இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் பிரபாஸ். மேலும் அவருடைய தாத்தா இப்போது கெட்ட ஆவியாக மாறி அந்த அரண்மனைக்குள் வருபவர்களை தொல்லை செய்து கொண்டிருக்கிறார்.
தாத்தாவை உயிருடன் கொண்டு போய் காட்ட முடியாது என்பது தெரிந்தவுடன் பிரபாஸ் எப்படியாவது அந்த வீட்டில் இருந்தாவது தப்பித்து செல்லலாம் என்று நினைக்கிறார். ஆனால், அது சாத்தியமே இல்லை என்பது போல உள்ளே இருக்கும் பிரபாஸின் தாத்தா வெறிகொண்டு ஆடுகிறார்.
இறுதியில் என்ன நடந்தது? ராஜு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாரா? உள்ளே பேயிடம் சிக்கியவர்கள் எல்லாம் காப்பாற்றப்பட்டார்களா? ராஜுவின் வாழ்க்கையில் மூன்று பெண்கள் சேர்ந்து இருக்க.. அவர் கடைசியாக யாரை திருமணம் செய்தார்? என்கின்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி!
தற்போது பிரபாஸ் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்துவிட்டார். அவருக்கு அனைத்து மொழிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் அவருக்கு கதை சொல்பவர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக காசை கொட்டி எடுக்கப்படும் படங்களாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் இந்தப் படமும் ஒன்று.
இந்தப் படத்தில் தன்னுடைய கெத்தான நடிப்போடு கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையும் கலந்து கொடுப்பது போல நடித்திருக்கிறார். பிரபாஸிடம் அவ்வப்பொழுது நகைச்சுவை துணுக்குகளும் வெளி வருகின்றன என்பதே ஒரு ஆச்சரியம்தான்! அந்த அளவுக்கு நிஜமாகவே நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
வழக்கமான தெலுங்கு ஹீரோக்கள் போலவே மூன்று காதலிகளுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் திரைக்கதையும் இப்படத்தில் பிரபாஸுக்கு வைத்திருக்கிறார்கள். கெத்தான கமர்சியல் ஹீரோ என்கின்ற வகையில் சண்டை காட்சிகளில் எப்படியெல்லாம் வித்தை கட்ட முடியுமோ, அப்படியெல்லாம் வித்தைக்காட்டி அவரது ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார் பிரபாஸ்.
நடிப்பு என்று பார்க்கப் போனால் படத்தின் இரண்டாம் பாதியில் தன்னுடைய தாத்தா கனகராஜூவின் திட்டமிட்ட ஏமாற்று வேலைகளையெல்லாம் புரிந்து கொண்டு தாத்தாவின் ஆவியை மேலுலத்திற்கு அனுப்புவதற்காக அவர் செய்கின்ற செயல்களும் படும் பாடும் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறது.
மருத்துவமனையில் தன்னுடைய பாட்டிக்குத் தானே கொள்ளி வைப்பது போல தன்னுடைய தாத்தாவே தனக்குள் புகுந்து ஆட்டி வைக்கிறார் என்பதை அவர் உணர்ந்து கொண்டு அதற்கு பின்பு மன்னிப்பு கேட்டு அழுகின்ற அந்தக் காட்சியில் ஓஹோ பரவாயில்லையே என்றும் சொல்ல வைத்திருக்கிறார்.
பிரபாஸின் தாத்தாவான கனகராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத் தன்னுடைய வில்லத்தனத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பின்புதான் அவர் தோன்றுகிறார் என்றாலும் அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய நடிப்பின் மூலமாக! சஞ்சய் தத்துக்கு நமது பாராட்டுக்கள்.
பிரபாஸின் பாட்டி கங்கம்மாவாக நடித்திருக்கும் ஜரினா வகாப் ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் ஒரு நோயாளியாக 2 நிமிடத்திற்கு முன்பு பேசிய கதையை தலைகீழாக மாற்றி “நீ யார்” என்றெல்லாம் திருப்பி கேட்டு ஒரு பரிதாப உணர்வை வரவழைத்து இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடியனாக இருக்கும் சதீஷ், அவ்வப்பொழுது பிரபாஸின் வசனங்களுக்கு எடுத்துக் கொடுப்பதை போல ஒரு காமெடியை செய்திருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ரித்தி குமார், நிதி அகர்வால், மாளவிகா மோகன் மூவரும் தங்களால் முடிந்த அளவுக்கான நடிப்பையும் அதிக அளவான கவர்ச்சியை காட்டியும் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் வி.டி.வி.கணேஷ், பிரபாஸ் சீனு இருவரும் சேர்ந்து படத்தின் திரைக்கதை நகர்த்துவதற்கு பெரிது உதவி இருக்கிறார்கள்.
பிரபல ஹிந்தி நடிகர் போமன் இரணி இந்தப் படத்தில் மனோதத்துவ மருத்துவர் கதாப்பாத்திரத்தில் தன்னுடைய பங்களிப்பை செய்து படத்தின் கதை நகர்வதற்கும் பெரிது உதவி செய்திருக்கிறார்.
மேலும் சமுத்திரகனி படத்தின் டர்னிங் பாயிண்டுக்கு காரணமாக இருப்பது போல நடித்திருக்கிறார். இவரை இன்னும் நன்றாக நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், இயக்குநர் போதுமே என்று நினைத்து விட்டார் போலும்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய பக்க பலமாக அமைந்திருக்கிறது. காட்டுக்குள் இருக்கும் அந்த அரண்மனை செட்டை அழகாக வடிவமைத்துக் கொடுத்த கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். அந்த வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமான கோணங்களில் படமாக்கி நம்மை பார்க்க வைத்திருக்கிறார். அதோடு மூன்று நாயகிகளையும் அழகாகவே காட்டி அவர்களுக்காகவே படம் பார்க்க வரும் ரசிகர்களின் மனதை குளிர வைத்திருக்கிறார்.
தமணின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடலைவிடவும், பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும் அதற்குக் கொடுத்திருக்கும் நடன இயக்கமும் அழகு என்றே சொல்லலாம்.
படத் தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வராவ் கொஞ்சம் மனம் வைத்து போரடிக்கின்ற சில பகுதிகளை படத்திலிருந்து நீக்கி இருந்தால் நிச்சயமாக இந்த படத்தை இன்னும் ஆழமாக நாம் ரசித்திருக்கலாம். ஆனால், மூன்று மணி பத்து நிமிடம் என்பது மிகப் பெரிய கொடுமை. இரண்டு மணி 25 நிமிடம் அளவுக்கு இந்தப் படத்தை கொடுத்து இருந்தால் நிச்சயமாக நன்கு ரசித்திருக்கலாம்.
வி.எப்.எக்ஸ். கிராபிக்ஸ் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்கள். பேய் வடிவ காட்சிகளையும் ஒவ்வொரு முறையும் பேய் உள்ளே வந்து இவர்களை இழுத்துச் செல்வதை போன்ற காட்சிகளையும் படமாக்கியவிதம் ஒரு வித்தை போல தெரிந்தாலும் நம்மை கவரவில்லை என்பதுதான் சோகமான ஒரு விஷயம்.
படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு ஏற்றார் போல் கதையும், திரைக்கதையும், அழுத்தமான இயக்கமும் இருந்திருக்க வேண்டும்.
இந்தப் படத்தில் ஓரளவு சஸ்பென்ஸ், திரில்லராகவும், இன்னொரு பக்கம் காமெடி கலந்த கமர்சியல் படமாகவும் இரண்டு கதையையும் ஒன்றாக்கி கொடுத்திருக்கிறார்கள். இதனாலேயே இது பேய் படம் போலவும் நமக்குத் தெரியவில்லை. காமெடி படம் என்று சொல்லவும் முடியவில்லை. முதலில் இது எந்தக் காலத்தில் நடக்கிறது என்பதற்கான தெளிவும் இல்லை.
இப்படி பல இல்லைகள் இந்தப் படத்தில் இருப்பதால் படம் மிகச் சிறப்பு என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனால், நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்பதில் சந்தேகமும் இல்லை.
RATING : 3 / 5









