’பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்து வந்திருப்பதுதான் இந்த ‘டீசல்’ திரைப்படம்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி. சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்.பி.சங்கர் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த ’டீசல்’ படத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, பி. சாய்குமார், கருணாஸ், வினய் ராய், அனன்யா, ஜாகீர் உசேன், சச்சின் கெடேகர், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, தீனா, தங்கதுரை கே, லட்சுமி சங்கர், எஸ். தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். எஸ், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பேனர் – தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் – எம்.தேவராஜுலு, எழுத்து, இயக்கம் – சண்முகம் முத்துசாமி, இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ்.பிரபு, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – ரெம்பன், சண்டை இயக்கம் – செல்வா மற்றும் ராஜசேகர், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, ஷெரீப், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், தயாரிப்பு – எஸ்.பி.சினிமாஸ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா-டி ஒன்.
ஹரிஷ் கல்யாணின் கேரியரில் முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்தே இந்த ’டீசல்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவரையிலும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பல கோடி பெறுமானமுள்ள கச்சா எண்ணெய்யை திருடும் மாஃபியா கும்பல் பற்றிய உண்மை சம்பவங்கள்தான் இந்த ‘டீசல்’ படத்தின் மையக் கரு.
தற்போது இந்த திருட்டு செயல் தடுக்கப்பட்டுள்ளது என்றாலும், கடந்த 2014-ம் ஆண்டுவரை, சென்னை துறைமுகப் பகுதியிலும், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சம்பவத்தை கருவாகக் கொண்டு, இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்த கச்சா எண்ணெய் திருட்டு என்பது சென்னையில் மட்டும் நடக்கவில்லை. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடந்து வந்த மிகப் பெரிய கடத்தல் தொழில். இது சாதாரண பிரச்சனை அல்ல. சர்வதேச அளவிலான பிரச்சனையும்கூட. இந்தப் பிரச்சனை 2014-ம் ஆண்டோடு முடிந்துவிட்டது.
அதனால் இந்தப் படத்தின் கதையும் அந்தக் காலக்கட்டத்தில் நடப்பது போலத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. காரணம், டீசல் என்பது நம் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை வைத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது என்பது இப்போதைய 2கே கிட்ஸ் மக்களுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும்.
தமிழகத்திற்கு பெட்ரோல், டீசலின் மூலம் பொருளான குரூட் ஆயில் ரயில் மூலமாகத்தான் இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை வந்து சேரும் அந்தக் குரூட் ஆயிலை மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்துதான் பெட்ரோல், டீசலாக அந்த குரூட் ஆயில் பிரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது.
அப்போது ரயில் போக்குவரத்தை இன்னமும் சீராக்க நினைத்தது மத்திய அரசு. மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலமாக குரூட் ஆயிலை அனுப்பினால் நிறைய செலவுகள் குறையும். லாரிகளை தேவையும் இருக்காது என்பதை உணர்ந்த மத்திய அரசு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மணலிக்கு தனியாக குழாய் அமைத்து, அதன் மூலமாக குரூட் ஆயிலை அனுப்பலாம் என்று தீர்மானித்தது.
அந்த குழாய்கள் அனைத்துமே செல்கின்ற பாதையில் பல மீனவர் குடியிருப்புகள் இருந்தன. இந்த்த் திட்டத்திற்காகவே அந்தப் பகுதியில் இருந்த பல மீனவ கிராமங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் குடியிருந்த மீனவர்கள் இந்தக் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தங்களுடைய கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.
அரசுகளை எதிர்த்து போராட்டமும் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை மீனவர் குடும்பத்தில் பிறந்திருந்த மனோகர் என்ற சாய்குமார் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் இணைந்து முன்னெடுத்து நடத்தினார். ஆனால் அந்தப் போராட்டத்தில் மனோகரனின் நண்பர்கள் இறந்துவிட்டனர். அப்போது வாசுதேவன் என்கின்ற ஒரு சிறுவன் மட்டும் தன்னுடைய தாய், தந்தையை இழந்து தவித்துக் கொண்டிருந்தபொழுது சாய்குமார் அந்த வாசுதேவனை தானே வளர்த்தெடுத்தார்.
இப்போது அந்த சிறுவன் 25 வயது இளைஞனாக இருக்கிறான். அவன்தான் இந்தப் படத்தின் கதாநாயகனான ஹரிஷ் கல்யாண். இவனுக்கு டீசல் என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு.
குழாய் பதிப்பதை தடுக்கவே முடியாத மீனவர் குடும்ப மக்கள் அதற்கு பிறகு அரசு கொடுத்த நிலத்தில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நேரத்தில் அரசுகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் தோல்வி அடைந்த மனோகர் அந்தக் குழாயில் இருக்கும் குரூட் ஆயிலை திருடி அதை மும்பையில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்து பெரும் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக சாய்குமார் இதை ஒரு மிகப் பெரிய கடத்தல் தொழிலாகவே நடத்தி வந்தார். இதற்காக அரசு அதிகாரிகள், காவல் துறையினர் இருவருக்கும் தனியாக கட்டிங் கொடுத்து அவர்களை அமைதியாக்கி வைத்திருக்கிறார். இப்பொழுது கெமிக்கல் என்ஜீனியரிங் படித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் அந்தக் தொழிலை டேக் ஓவர் எடுப்பதற்காக அவரும் இந்தத் கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நேரத்தில் மும்பையில் இருக்கும் மிகப் பெரிய தொழிலதிபரான சச்சின் கடெகர் சென்னையில் இருந்து சாய்குமார் அனுப்பும் குரூட் ஆயிலை வாங்கி அதை சுத்திகரித்து பெட்ரோல் டீசல் ஆக மாற்றி விற்பனை செய்து பெரும் கோடீஸ்வரராக இருக்கிறார்.
சென்னையில் இருந்து குரூட் ஆயில் லாரிகளில் ஏற்றி மும்பைக்கு அனுப்பப்படுகிறது. இது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம் என்பதால் அதை சென்னையிலேயே செய்யலாம் என்று நினைக்கும் சச்சின் கடெகர், நமக்கென்று ஒரு தனி துறைமுகம் இருந்தால் தாராளமாக இதை செய்து முடித்து இதைவிட அதிகமாகவே பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் திட்டுகிறார்.
இதற்காக மீனவ குடும்பங்கள் இருக்கும் மொத்த கிராமங்களையும் அழித்துவிட்டு அந்த இடத்தில் புது துறைமுகம் கட்டுவதற்கான வேலைகளை மத்திய அரசில் இருக்கும் சில அமைச்சர்களை கையில் வைத்துக் கொண்டு திட்டம் தீட்டுகிறார் சச்சின் கெடகர்.
அதேநேரம் பாலமுருகன் என்ற விவேக் பிரசன்னாவும் இப்போது இந்த குரூட் ஆயிலை கடத்தும் தொழிலில் கால் வைக்கிறார். அவருக்கு வடசென்னை பகுதிக்கு அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கும் மாயவேல் என்ற வினய் கை கொடுக்கிறார். இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து சாய்குமாரிடம் இருக்கும் கடத்தல் தொழிலின் தலைமை பதவியை பாலமுருகனுக்கு விட்டுத் தரும்படி மாயவேல் கேட்கிறார்.
ஆனால் அதை கொடுக்க மறுத்த ஹரிஷ் கல்யாண் இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வினய்யை அடித்து விடுகிறார். மேலும் வினய் மிகப் பெரிய அளவுக்கு காயப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இப்பொழுது போலீஸ் ஒரு காவல்துறையின் உயர் அதிகாரியான வினய் மீது கை வைத்துவிட்ட ஹரிஷ் கல்யாணை வலை வீசி தேடுகிறது. இன்னொரு பக்கம் சாய்குமாரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
அதே நேரம் அங்கே இருக்கின்ற மீனவ குடும்பங்களை அவருடைய தலைவர் சாய்குமார் சிறையில் இருப்பதால் அவருடைய தலைவர் சாய்குமார் சிறையில் இருப்பதால் அந்த மீனவர்கள் அத்தனை பேரையுமே அந்த இடத்தில் இருந்த அகற்றிவிட்டு உடனடியாக புதிய துறைமுகம் கட்டும் பணியைத் தொடங்கும்படி சச்சின் மத்திய அரசு மூலமாக மாநில அரசுக்கும், காவல் துறைக்கும் பிரஷ்ஷர் கொடுக்கிறார்.
இதற்கு மேல் என்ன ஆனது?.. அந்த துறைமுகம் உருவாக்கப்பட்டதா?.. சாய்குமார் சிறையில் இருந்து வெளியில் வந்தாரா?.. ஹரிஷ் கல்யாணுக்கும், வினய்க்கும் நடந்த போர் முடிந்ததா? இல்லையா?.. என்பதுதான் இந்த ‘டீசல்’ என்ற படத்தின் திரைக்கதை.
குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாக ஹரிஷ் கல்யாணின் தலையில் மிகப் பெரிய ரவுடி கும்பலின் தலைவன் என்று சற்று பொருந்தாத ஒரு வேடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
ஹரிஷூம் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார், ஆனால் ஒரு மாபியா தலைவன், ஒரு கடத்தல் கும்பலின் தலைவன், ஒரு தாதா என்கின்ற மூன்று அடையாளங்களையும் தன்னிடம் வைத்துக் கொண்டு ஹரிஷ் கல்யாண் பேசும் பல ஆவேச பேச்சுக்கள், கோப பேச்சுக்கள், மிரட்டல்கள் அனைத்துமே ஒரு சின்ன பையன் சுத்தியலை வைத்துக் கொண்டு பொட்டு வெடியை வெடிப்பது போல இருக்கிறது.
இதில் கூடவே அதுல்யா ரவி என்ற வழக்கறிஞரையும் காதலிக்கிறார் ஹரிஷ் கல்யாண். அந்த காதலிலாவது ஏதாவது ஒரு புதிய ஹரிஷை பார்க்கலாம் என்று நினைத்தால் அதுவும் இல்லை. அந்த காதலில் ஒரு நேர்மையும் இல்லை. ஒரு ரசனையும் இல்லை. ரசிப்பும் இல்லை. உண்மையாக சொல்லப் போனால் இந்தப் படத்தின் காதல் போர்ஷனே, இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பேக் டிராப்பாக அமைந்திருக்கிறது.
போலீஸ் துணை கமிஷனர் மாயவேலாக நடித்த வினய், இந்தப் படத்தில் ஒரு உண்மையான வில்லனாகவே நடித்திருக்கிறார். ஹரிஷ் கல்யாணையும், சாய்குமாரையும் தொழிலில் இருந்து விலகும்படி பஞ்சாயத்து மீட்டிங்கில் அவர் பேசுகின்ற தோரணையும், பேச்சும் ஒரு அழகான வில்லனை அடையாளம் காட்டி இருக்கிறது.
ஒரு சாதாரண கமர்சியல் படம் போல கிளைமாக்ஸில் உண்மை தெரிந்து திடீரென்று வினயும் நல்லவனாகிவிட படத்தின் திரைக்கதை அங்கேயே சுருண்டு படுத்துவிட்டது.
மனோகரனாக நடித்திருக்கும் சாய்குமார் ஒரு கெத்தான தாதாவாக தலைகாட்டி இருக்கிறார். உண்மையில் ஹரிஷ் கல்யாணுக்கும் சேர்த்து நடித்திருப்பது சாய்குமார்தான். வாழ்க்கை அனுபவம் இல்லாத மகன் கோபக்காரனாக இருப்பதும் சூழ்நிலை புரியாமல் கை நீட்டுபவனாகவும் இருக்க… அவனுக்கு அறிவுரை சொல்லியே டயர்டாகி போகிறார் சாய்குமார். இவருடைய முடிவும் ஒரு சோகத்தைத் தருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபராக மறைமுகமாக அதானி வேடத்தில் நடித்திருக்கும் சச்சின் கெடாகர் முழுக்க முழுக்க வசனத்தாலே தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் அவரை நடிக்க வைத்திருக்கலாம்.
ஹரிஷ் கல்யாணின் காதலியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி இந்தப் படத்தில் மேக்கப்பே இல்லாமல் இயல்பாக இருப்பது போலவே தோன்றுகிறார். காட்சி அளிக்கிறார். ரொமான்ஸில் அதிகமாக இவருக்கும் வேலை இல்லை என்பதால் தேமே என்று ஒலிக்கும் ஒரு டூயட் டை நாம் ரசிக்க வேண்டி இருக்கிறது.
மற்றும் கருணாஸ், போஸ் வெங்கட், மாரிமுத்து என்று ஒரு பெரும் கூட்டமும் தங்களுடைய கேரக்டர் என்ன சொன்னதோ அதை மட்டும் செய்திருக்கிறார்கள்.
ரமேஷ் திலக், காளி வெங்கட் இருவரும் பொருந்தாத மேக்கப்பில் 1980-களின் மனிதர்களைப் போல தலையில் விக்கு வைத்து நடித்திருப்பதைப் பார்த்தால் குபீர் என்று சிரிப்புதான் வந்தது.
எத்தனையோ படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இந்தப் படத்தில் வினய்யின் மனைவியாக நடித்துள்ளார். வினய்யை மருத்துவமனையில் வைத்து திட்டித் தீர்க்கும் காட்சியில் தனது நடிப்பை சரியாக செய்திருக்கிறார்.
ரிச்சர்டு எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு என்ற மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்களின் கூட்டணி இந்தப் படத்தின் பல காட்சிகளை பிரமாண்டமான காட்சிகளாக படமாக்கி இருக்கிறது. கடல் பகுதிகளில் படகுக்குள் நடக்கும் காட்சிகளையெல்லாம் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. சண்டை காட்சிகளை இவ்வளவு வலுவானதாக அமைத்திருக்கும் சண்டை இயக்குநருக்கு கொஞ்சமும் சிரமம் கொடுக்காமல், அதை அழகாக படமாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் “எம்மாடி எம்மாடி” பாடல் மட்டுமே கேட்கும் ரகமாக தெரிகிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசையிலும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் தாமஸ்.
படத்தொகுப்பு செய்திருக்கும் சான் லோகேஷ் இன்னமும் கொஞ்சம் மனம் வைத்து நிறைய காட்சிகளை கட் செய்து இருந்தால் படம் கிரிப்பாக வந்திருக்கும். பல காட்சிகள் நிச்சயமாக நீக்கப்பட வேண்டியவை. அவை படத்தின் வேகத்தை குறைத்து இருக்கின்றன.
சண்டைக் காட்சிகளை மிக வித்தியாசமான முறையில் படமாக்கி இருக்கும் ஸ்டண்ட் செல்வா மற்றும் ராஜசேகர் இருவருக்கும் நமது பாராட்டுக்கள்.
1980-களின் வடசென்னை பகுதிகள், மீனவ குடியிருப்புகள், குடிசைகள், இப்போதும் கண்காட்சி பொருளாக இருக்கும் அந்த ராட்சத குழாய்கள், அப்படியே நகல் எடுத்தது போல அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகள் என்று அத்தனைகளிலும் கலை இயக்கத்தை மிக அழகாக செய்து இருக்கிறார்கள் ஸ்கேர்க்ரோ குழுவினர்.
வசனம் மூலமாகவே பெரும்பாலான காட்சிகளை நகர்த்தியதற்குப் பதிலாக ஒன்று, இரண்டு சீன்களையாவது வைத்திருக்கலாம். மொத்தமாக வசனத்தின் மூலமாக சொல்லிவிட்டு போவதால் ரசிகனின் மனதிலும் அது அடுத்தடுத்த காட்சிகளாகப் போய் சேர்ந்துவிட்டது.
பூர்வகுடி மீனவர்கள் வெளியேற்றப்பட்டது. அவர்களுடைய நிலத்தை அரசு கையகப்படுத்தியது.. எதிர்த்துப் போராட்டம் நடத்திய மீனவர்களை குருவி போல சுட்டு தள்ளியது என்று மாநில அரசு செய்த அந்த சதி வேலையினால் உருவான புத்தம் புதிய குற்றவாளிகள், தாதாக்கள், மாஃபியாக்கள் என்று அனைத்தையுமே இந்தப் படத்தில் வசனமாகவே சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் துவக்கத்திலேயே இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன் தன்னுடைய குரலில் சொல்கிறார். இந்தப் பிரச்சனை எப்போது ஆரம்பித்தது..? எப்படி ஆரம்பித்தது/ யாரால் ஆரம்பிக்கப்பட்டது? என்பதையெல்லாம் வசனத்தின் மூலமாகவே அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே போவதால் நம் மனதில் அது சட்டென நிற்கவில்லை என்பதுதான் உண்மை.
குழாய் அமைப்பதற்காக மொத்தமாக மீனவர் குடியிருப்பையே அழித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு வேறொரு இடத்தை கை காட்டி “முடிந்தால்.. அங்கே செல்லுங்கள்.. இல்லாவிட்டால் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள்” என்று அதிகார வர்க்கம் தன் கையை விரித்து சொன்னதை இந்தப் படத்தின் காட்சியாகவே அமைத்திருக்கலாம்.
அதுல்யா ரவி அடிக்கடி கனவு கண்டு ஒரு கடல் கன்னி தன்னை தண்ணிக்குள் இழுத்து விடுவதைப்போல அவர் நினைத்து பார்க்கும் அந்தக் காட்சியை எதற்காக படத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அதனால் ஒரு மீட்டர்கூட கதை நகரவில்லை என்பதுதான் உண்மை.
முதல் பாதியில் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையாக நகரும் படம், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த திரைக்கதைகளை நாமே ஊகித்துக் கொள்ளலாம் அளவுக்கு இருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
இரண்டாம் பாதியில் குரூட் ஆயில் எங்கே, எப்படி கொண்டு போகப்பட்டது என்பதை நேர்த்தியாக சொல்லி இருந்தாலும் அந்த குரூட் ஆயில் எங்கே இருக்கிறது என்பது எனக்கு தெரியும் என்று ஹரீஸ் சொல்லி போலீசாரை ஏமாற்றிக் கொண்டே இருப்பதெல்லாம் கொஞ்சம் போர் அடித்த கதை.
முதலிலேயே இதை போலீஸிடம் சொல்லியிருந்தால் மீனவப் பெண்களும், ஆண்களும் கொஞ்சம் தப்பித்திருப்பார்களே..? இப்போது இயக்குநரின் இந்த திரைக்கதையினால் அவர்கள் படும்பாடு நமக்குத்தான் பாவமாக இருக்கிறது.
நல்லதொரு கருத்தினை சொல்ல வந்த இயக்குநர் கொஞ்சம் சொதப்பலான திரைக்கதையில் இந்தப் படத்தை கொடுத்திருப்பதால் டீசல் திருட்டு, குரூட் ஆயில் திருட்டு, பெட்ரோல் விலை ஏற்றம்.. இதன் பின்னணியில் இருக்கும் அரசுகள் அதிகார வர்க்கம் என்று பலரையும் வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு கதை மட்டுமே இந்தப் படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
எது எப்படியிருந்தாலும் நல்லதொரு இறுக்கமான இயக்கத்தினால் இந்தப் படத்தை கடைசிவரையிலும் பார்க்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி!
அந்த வகையில் இந்தப் படம் நிச்சயம் ஒருமுறை பார்க்கத் தகுந்ததுதான்!
RATING : 3 / 5









