full screen background image

பைசன் – சினிமா விமர்சனம்

பைசன் – சினிமா விமர்சனம்

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமாக இந்த “பைசன்” திரைப்படம் உருவாகியுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்கிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இப்படம் அமைந்துள்ளது.

தமிழகத்தில் இரு பெரிய திராவிட கட்சிகளுக்கு இடையேயான ஆட்சிக்கு வருவது, அதிகாரத்தில் அமர்வது, கோடி கோடியாய் கொள்ளை அடிப்பது போன்ற பிரச்சனைகள் மட்டுமே… பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.  தமிழகத்தின் பல உள் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தினம் தோறும் நடைபெறும் அநீதியும், அக்கிரமங்களும் அதிகமாக வெளியில் தெரிவதில்லை.

இந்த 2-கே யுகத்திலும் youtube-களின் அசுர வளர்ச்சியில் சாதிய மனப்பான்மையோடு எழுதுபவர்களும், பேசுபவர்களும் அதிகம் வந்து கொண்டிருக்க…. அந்த சாதிய படிக்கட்டுகளை நீக்கிவிட்டு அனைவரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறையிடம் சொல்வதற்காக சில இயக்குர்கள் மட்டுமே இப்போதுவரையிலும் தமிழ்த் திரை உலகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குர் பா.ரஞ்சித்தும், அவரது சீடரான மாரி செல்வராஜூம் மிக மிக முக்கியமானவர்கள்.

தன்னுடைய பரியேறும் பெருமாள், ‘கர்ணன், ‘மாமன்னன்’, ‘வாழை ஆகிய சிறப்புமிகு திரைப்படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பரிதாப வாழ்க்கையை ஒரு பக்கம் சொல்லி இன்னொரு பக்கம் திரை சினிமாவின் புதிய கதை சொல்லும் யுக்தியை வெளிப்படுத்திய இயக்குர் மாரி செல்வராஜின் அடுத்தப் படமான இந்த பைசன் இன்னும் ஒரு அவலக் கதையைச் சொல்கிறது.

‘மணத்தி கணேசன்’ என்ற தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனா விருது பெற்ற ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்தும், பல புனைவு கதைகளையும் இணைத்து உருவானதுதான் இந்த ‘பைசன்’ திரைப்படம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வனத்தி என்ற கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிட்டான் என்ற ஒரு இளைஞனின் கதைதான் இந்தப் படம்.

சின்ன வயதில் இருந்து பெரிய கபடி வீரனாக வேண்டும் என்கின்ற வெறியில் படிப்பைகூட பின்னால் வைத்துவிட்டு விளையாட்டை முன்னிறுத்தியே உழைத்து ஓடிக் கொண்டிருக்கும் கிட்டானுக்கு அவனுடைய சொந்த ஊரிலேயே அவனுடைய நெருங்கிய உறவுக்காரரே தடை போடுகிறார். சொந்த ஊரில் இருக்கும் தன் சாதியைச் சார்ந்த கபடி குழுவில் இடம் பிடிக்க முடியாத கிட்டானை அவன் படிக்கும் பள்ளியின் பி.டி.ஆசிரியர் கை கொடுத்து தூக்கிவிட்டு தன்னுடைய பள்ளி டீமில் சேர்த்து விளையாட விடுகிறார்.

தன்னுடைய ஒரே மகனான கிட்டான் மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கும் அவனுடைய அப்பாவான பசுபதி, “கிட்டானுக்கு கபடி தேவையே இல்லை என்று சொல்லி ஆசிரியரிடம் சண்டை இடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பசுபதியும் ஒரு கபடி வீரனாக அதே ஊரில் வாழ்ந்தவர்தான். ஆனால் அப்போது பசுபதிக்கே ஹீரோவாக தெரிந்த அவருடைய இனத்தைச் சேர்ந்த ஒரு கபடி வீரனை ஆதிக்க சாதியினர் படுகொலை செய்ததை நேரில் பார்த்ததிலிருந்து தன் மகனுக்கும் அந்த நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே பசுபதி அழுது மன்றாடி கேட்கிறார்.

ஆனால் மகனின் அந்த கபடி விளையாட்டு மீதான வெறி கடைசியாக அவரையும் அறியாமலேயே அந்த விளையாட்டுக் களத்திற்குள் இழுத்துப் போடுகிறது.

தே தூத்துக்குடி மாவட்டத்தில் கந்தசாமி என்ற ஆதிக்க சாதியின் ஒரு தலைவருக்கும். பாண்டியராஜா என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு அமைப்பின் தலைவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முட்டல், மோதல்கள். இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரத்தம் சிதறி இருக்கிறது. ஒருவரை ஒருவர் போட்டு தள்ள திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் கிட்டானின் கபடி விளையாட்டு திறமையை பார்த்த கந்தசாமி தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் கபடி குழுவில் கிட்டானை சேர்த்து விளையாட வைக்கிறார். இது கந்தசாமி சார்ந்த சாதியினர் மத்தியிலேயே, அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்த அது இன்னும் ஒரு சாதி சண்டையாகவே உருவெடுக்கிறது. இந்த நேரத்தில் முதல் பலியாக பாண்டியராஜா கொலை செய்யப்பட இரண்டாவதாக கந்தசாமியும் போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறார்.

இந்த நேரத்தில் கிட்டானுக்கு தேசிய அணியிலும் இடம் கிடைத்து இப்போது ஜப்பான் குரோஷிமாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஜப்பான் சென்று இருக்கிறார். ஆனால் அங்கேயும் நடக்கும் ஒரு உள் குத்தில் களத்தில் இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

ங்கே வனத்தி கிராமத்திலோ அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் காலம் காலமாக அடிமையாகவே வாழ்ந்து வந்த அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், இந்திய நாட்டுக்கே பிரதிநிதியாக கபடியில் விளையாடி ஜெயிக்கப் போகிறான் என்று கிராமமே ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

வனத்தியின் மைந்தன் கிட்டான் இந்திய அணியில் விளையாடினானா இந்திய அணி கோப்பையை வென்றதா வனத்தி கிராமத்து மக்களின் மனநிலை என்ன பசுபதி தன் வாழ்க்கையில் முதல்முறையாக சந்தோஷப்பட்டாரா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த பைசன்திரைப்படம்.

கிட்டானாக நடித்திருக்கும் துருவ் விக்ரமுக்கு நிச்சயமாக இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம். ஒரு அழகான சிற்பியிடம் களிமண் கிடைத்துவிட்டால் அந்த களிமண்ணை வைத்து அவன் செய்து காட்டுகின்ற அந்த சிலைதான் அந்தக் களி மண்ணின் பெருமையைச் சொல்லும். அதுபோலத்தான் துருவ் விக்ரம் என்ற இந்த நடிகரை மாரி செல்வராஜ் என்ற கலைஞன் தன்னால் என்னென்ன செய்து எப்படியெல்லாம் நடிக்க வைத்து அவரது நடிப்பை வெளி கொணர முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் காட்சியே ஜப்பானில் நடக்கும் அந்த கபடி போட்டியைக் காட்டி சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக ஏக்கப் பெருமூச்சுடன் காத்துக் கொண்டிருக்கும் கிட்டானை காட்டும்பொழுது நமக்கு ஆகா இன்றைக்கு நல்ல விருந்துதான் போலிருக்கிறது என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

தன்னுடைய அப்பாவின் எதிர்ப்பையும் மீறி கபடி விளையாட ஆர்வத்துடன் இருக்கும் துருவா தன்னுடைய அப்பாவை அடித்துவிட்டான் என்பதற்காக அந்த வேகத்திலேயே எதிரிகளுடன் சண்டையிடும் கோபத்தை காட்டும்போது இப்படி ஒரு துடிப்பான இளைஞன் வேறென்ன செய்வான் என்ற கேள்விதான் எழுகிறது.

ஒரு பக்கம் சாதிய திமிரில் தங்களை அடக்கிக் கொண்டே இருக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்துப் பேச முடியாமல் ஒவ்வொரு முறையும் அடங்கி அடங்கிப் போவதை பார்த்து, “முடியலப்பா… சமாளிக்க முடியல… இதுக்கு மேல என்னால ஓட முடியல…” என்று கண் கலங்கி சொல்லுகின்ற பொழுது உண்மையாகவே நமக்கே அவ்வளவு கோபம் வருகிறது.

ஒரு இளைஞன், இந்திய இளைஞன், தமிழன்… மேலே வருவதை ஏன் இன்னொரு தமிழன் எதிர்க்கிறான் என்றுதான் நாம் கேட்க வேண்டும். ஆனால், அந்த சாதிக்காரர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று நம்மை கேட்க வைத்திருப்பதுதான் இந்த தமிழ் சமூகம் எந்த லட்சணத்தில் வளர்ந்து இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

தன்னைவிட வயதில் மூத்த அனுபவமாவை காதலிப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை சொல்லி தவிர்த்துக் கொண்டே போகும் கிட்டான், ஒரு கட்டத்தில் அத்துமீறலால் அந்தக் குட்டைக்குள் காதலில் விழுகின்ற அந்தக் காட்சி ஒரு கவிதை வடிவில் படமாக்கப்பட்டுள்ளது.

சண்டைக் காட்சிகளில் எவ்வளவு வெறித்தனத்தோடு, உண்மைத்தனமாகவும் காட்சிகளை வடிவமைத்திருந்தாலும் அதில் தான் காட்டும் ஆக்ரோஷத்திலேயே துருவ் விக்ரம் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்பா மீதான பாசம், பயம், மரியாதை… இதோடு அக்காவின் வார்த்தைக்கும் கட்டுப்படுவது என்று ஒரு குடும்பத்திற்குள் பொறுப்பான மகனாக வளர்ந்து இருக்கும் வாலிபனாக்க் காட்டும் துருவ்வின் இந்தக் கதாப்பாத்திரம் நிச்சயமாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.

மண்ணின் மைந்தனாகவே காட்சி அளிக்கும் பசுபதி ஒரு சிறந்த தந்தையாக நம் முன்னே தெரிகிறார். தன்னுடைய மகன் விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய பெருமையை பெற வேண்டும் என்பதைவிட அவன் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு அப்பாவி அப்பாவாக தன்னுடைய சீரிய நடிப்பினால் நம்மைப் பெரிதும் கவர்கிறார் பசுபதி.

“அவனுக்கு கபடி வேண்டாம் சார்…” என்று கோபத்தில் பி.டி.மாஸ்டரிடம் பசுபதி கெஞ்சுவது நமக்கு நியாயமானதாகவே உள்ளது. போகப் போக சாதிய எதிர்ப்புகளையும் தாண்டி சாதி ரீதியாக தன்னை தாக்கியவர்களையும் எதிர்கொண்டு தன்னுடைய மகன் பட்ட கஷ்டத்தை நினைத்து ஏதோ ஒரு விதத்தில் அவன் ஆதிக்க சாதியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து விடமாட்டானா என்று நினைப்பில் கடைசியாக கபடிக்கு ஓகே சொல்லுகின்ற அந்த இடத்தில், இப்படி ஒரு அப்பா யாருக்கு கிடைப்பார்கள் என்று சொல்ல வைத்திருக்கிறார் பசுபதி.

ஊருக்குள்ளயே தன்னுடைய சண்டைக்கார உறவினருடன் சண்டையிடும் காட்சிகளிலும், தன்னைவிட வயதில் குறைந்த கிட்டானை தன் தங்கை காதலிப்பது  தெரிந்து வந்து சண்டை இடும் காட்சியில் பசுபதியின் இயல்பான நடிப்பு நம்மைப் பெரிதும் கவர்கிறது.

அதே சமயம் தன்னுடைய உறவினரிடம் இவ்வளவு வேகத்தையும் வீரத்தையும், காட்டும் பசுபதி ஆதிக்க சாதியினரிடத்தில் வம்பு தும்புக்கு போகாமல் ஒதுங்கிப் போக நினைக்கும் அந்த வித்தியாசத்தையும் இந்தப் படத்தில் அழகாக நடித்து காண்பித்து இருக்கிறார்.

பசுபதியின் ஒவ்வொரு நிமிட நடிப்பும் இந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம். அவரால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ன நிலைமையில் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்கள், வசிக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் தெரிகிறது.

பொறுப்பான அக்காவாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன் அப்பா பக்கமும் பேச முடியாமல், தம்பி பக்கமும் பேச முடியாமல் தத்தளித்து எப்படியாவது இவன் ஒருவனாவது பெரிய ஆளாக வந்து விட வேண்டுமே என்ற ஆசையில் தம்பியின் கபடி விளையாட்டுக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு பக்கபலமாக இருந்து உயர்த்தி விடும் அந்த அக்கா கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார்.

ஒரு லிப் டு லிப் காட்சி இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகவே அனுபமா பரமேஸ்வரன் இந்தப் படத்தில் கிட்டானுக்கு காதலியாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன் தான் நடித்த அனைத்து தெலுங்கு படங்களிலும், அத்தனை ஹீரோக்களுக்கும் தன்னுடைய உதட்டை கொடுத்திருக்கிறார். அதனால் இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சியை ஒரு உணர்ச்சிபூர்வமான ஒரு சம்பவம் நிகழும் இடத்தில் படபடப்பாக ரசிகர்கள் ஸ்கிரீனை புரிந்து கவனிக்கும் இடத்தில் வைத்து, அந்தப் புண்ணியத்தை தேடிக் கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.

கிட்டானைப் பார்த்தாலே அக்கா போல தெரிய வேண்டும் என்பதற்காகவே அனுபமா தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் உண்மையில் இருவரது வயது வித்தியாசமும் நமக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னுடைய காதலை அனுபவமா கிட்டானிடம் சொல்கின்ற இடத்திலும், விரட்டி விரட்டி கிட்டாநை வீழ்த்துகின்ற இடத்திலும் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பூஸ்ட்டுதான்.

ஆதிக்க சாதியின் தலைவர் கந்தசாமியாக நடித்திருக்கும் லால் தன்னுடைய அழுத்தமான நடிப்பை இந்தப் படத்திலும் காண்பித்து இருக்கிறார். தெற்கத்தி சீமை தமிழை அவர் பேசி இருப்பதால் கொஞ்சம் மாறுபட்டவிதமாக இந்தப் படத்தில் நமக்குத் தெரிந்திருக்கிறார். பாண்டியராஜா உடன் அவருக்கு இருக்கும் மோதல் எதனால், தான் ஏன் தலைவரானேன் என்பதை அவர் ஓரிடத்தில் சொல்லும்பொழுது தவறுகள் அவர்களிடத்தில் இல்லை. அவர்களை புரிந்து கொள்ளாத அவரது கூட்டாளிகள், தொண்டர்களிடத்தில்தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது.

“நம்ம ஒரு பத்து பேர் ஒண்ணா சேர்ந்து இருந்தோம்னாத்தான் நம்முடைய குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஆனா இப்ப எல்லாருமே குழுவா இருந்தாதான் பொழைக்க முடியும் என்கிற அளவுக்கு மாற்றி வைத்துவிட்டார்கள்” என்று தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்து கந்தசாமி சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

இதேபோல் பாண்டியராஜாவாக நடித்திருக்கும் அமீரும் இதைத்தான் சொல்கிறார். “நமக்கு ஒரு பாதுகாப்புக்காக நம்ம பசங்கள வெச்சி ஒரு டீமா போய்கிட்டிருக்கோம். இது நம்ம பாதுகாப்புக்காகத்தான் இருக்கணுமே ஒழிய, இன்னொருத்தனை அடிச்சு சண்டையை மூட்றதுக்காகன்னு இருக்கக் கூடாது..” என்று வருத்தப்படும்பொழுதும் நிச்சயமாக அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்கின்ற மாரி செல்வராஜின் ஆசையையும் காட்டுகிறது.

பசுபதி பாண்டியன் கேரக்டரில் நடித்திருக்கும் அமீர் நிறைய முறை சாவின் விளிம்புவரையிலும் சென்று வரும் காட்சியில் நமது பரிதாபத்தைப் பெறுகிறார். ஆனாலும் கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்ற முதுமொழிக்கேற்ப அவர் பலியாகும் காட்சியில் நமக்கு அவர் மீது ஒரு பரிதாபம் வரத்தான் செய்கிறது.

ஒரே ஒரு காட்சி என்றாலும் பாண்டியராஜாவை திட்டமிட்டு வீட்டுக்குள் அழைத்து பலிகடவாக்கும் அந்தக் காட்சியில் கட்டிலில் படுத்தபடியாக இருக்கும் அந்த முதியவர் எழுப்புகின்ற வினோதமான குரலும், அழுகையும் அந்தக் காட்சி முழுவதையும் பதைபதைப்போடு பார்க்க வைத்திருக்கிறது.

அதேநேரம் தான் சார்ந்த கட்சிக்காரனாகவே இருந்தாலும்… அது கிராமமாக இருந்தாலும் சரி.. பெண்ணோ, ஆணோ… விருப்பமில்லாமல் அவர்களிடையே கல்யாணம் நடக்கக் கூடாது என்று நினைக்கும் நல்லதொரு தலைவராக பாண்டியராஜைக் காட்டியிருப்பதும் சிறப்பதுதான்.

போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காரர்கள், கந்தசாமியின் உடன் இருக்கும் சாதிக்காரர்கள், பாண்டியராஜாவின் தொண்டர்கள் என்று அத்தனை பேருமே சிறப்பாய் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு படத்துக்கு சிறந்த இயக்குநர் கிடைத்துவிட்டால் நிச்சயமாக அனைத்துமே சிறப்பாக நடக்கும் என்பார்கள். அதுபோல தமிழ் சினிமாவில் இருக்கும் 23 கிராப்டுகளையும் இந்தப் படத்தில் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் மெகா இயக்குநர் மாரி செல்வராஜ்.

மேக்கப், காஸ்ட்யூம், சவுண்ட் டிசைன், ஆடியோகிராபி, நடன காட்சிகள், படத் தொகுப்பு, இசை, பாடல்கள் என்று அத்தனையிலும் இத்திரைப்படம் அத்தனை விருதுகளையும் வாங்கும் தகுதி படைத்தது.

மனிதர்களை மட்டுமல்ல படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும்கூட அழகுற படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் எழில் அரசு.

முதல் காட்சிகளிலிருந்து படத்தின் இறுதிவரையிலும் நாம் ஒரு திரைப்படத்தை மெய் மறந்து பார்க்கிறோம் என்ற ஒரு உணர்வை காட்சிக்கு காட்சி, ஷாட் பை ஷாட்டாக ஒரு அழகான ஓவியமாக இந்தப் படத்தில் வடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரத்த ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அந்தக் கிராமத்தின் பச்சை பசேல் புல்வெளிகளையும், ஆற்றையும், நீரையும், வயல்வெளிகளையும், கிராமத்து வீடுகளையும், அந்த வீட்டுக்குள் இருக்கும் எளிமையான வாழ்க்கைக்கான பொருட்களையும் இத்தனை அழகாக வடிவமைத்து சேர்த்து வைத்து படப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

அதிலும் சுற்றிலும் வயல் வெளிகளுக்கு நடுவில் ஒரு சின்ன சிறிய குளமாக இருக்கும் இடத்தில் அனுபமாவும், துருவ் விக்ரமும் தங்களை மறந்து காதலில் வீழ்ந்திருக்கும் அந்த சிங்கிள் ஷாட் அட்டகாசம், ஆசம் என்றே சொல்லலாம்.

சண்டைக் காட்சிகளை படமாக்கி இருக்கும்விதத்தில் சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயனின் பணி மகத்தானது. பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளையும் வாத்தியாருடன் செல்லும்போது கிட்டான் ஆதிக்க சாதியினரால் தாக்கப்படும் காட்சிகளும், பாண்டியராஜா, கந்தசாமி இருவரின் கொலைகள் நடைபெறும் காட்சிகளிலும் ஒரு யதார்த்தமான சினிமாத்தனம் இல்லாத வகையில் காட்சிகளை படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் இருவரின் கூட்டு திறமையினால் கபடி போட்டிகள் அனைத்தும் ரசனையாக, உண்மையாக நடப்பதுபோல காட்டப்படுகிறது. இந்த விளையாட்டுக்காக எத்தனை தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.

இது ஒரு சினிமா என்ற சிந்தனையே வராத அளவுக்கு ஒவ்வொரு காட்சிகளும் இடம் பெறும் இடத்தையும், பயன்படுத்தும் பொருட்களையும் கச்சிதமாக நமக்கு கண்முன்னே காட்டி இருக்கும் கலை இயக்குநர் குமார் கங்கப்பனுக்கு நமது வாழ்த்துக்கள். அதோடு இந்தப் படம் கொஞ்சம் பீரியட் கலந்த திரைப்படம் என்பதால் அந்த பீரியடுக்கான சில காட்சிகளை வைப்பதற்காக மெனக்கட்டிருக்கும் கலை இயக்குநரையும் நம் பாராட்டுகிறோம்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் அழகான இசையில் பாடல்கள் ஒலிக்கும் பொழுது அப்படி ஒரு சந்தோஷ உணர்வை நமக்கு கொடுத்திருக்கின்றன. இதற்காக பாடல் வரிகளை எழுதிய மாரி செல்வராஜையும், அறிவையும் நாம் மனதாரப் பாராட்டுகிறோம்.

‘வாழை’ படத்தில் டீச்சருக்கும், மாணவனுக்குமான நட்பு எப்படியிருந்து என்பதை சொல்லப் போய் இனம் புரியாத காதலை அடையாளம் காட்டிய மாரி செல்வராஜ், இந்தப் படத்தில் தன்னைவிட வயது குறைந்த கிட்டானை காதலிப்பதும், சின்ன வயது அனுபமாவிற்கு, சின்ன வயது கிட்டான் முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகளை வைத்து பொறுப்புணர்வைத் தாண்டியிருக்கிறார் மாரி. இது மட்டும் தேவையில்லாதது என்றே நாம் நினைக்கிறோம்.

அதேபோல் அப்பாபோல் இருப்பவரை அனுபமாவின் அண்ணனாகக் காட்டியிருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. மகளாகவே காட்டியிருக்கலாமே.. என்ன குறைந்துவிடப் போகிறது..?

படத்தின் துவக்கத்திலேயே ஹீரோ கிட்டான் ஜப்பான்வரையிலும் சென்றுவிட்டான் என்பதை காட்டி இருக்கும் இயக்குநர், ஜப்பான் செல்லும் வரையிலான கிட்டானின் சோக வாழ்க்கையையும், அவனுடைய போராட்டத்தையும், அவன் சந்திக்கும் வழிகளையும் நிஜத்தில் நமக்கே நடந்ததுபோல தன்னுடைய இறுக்கமான இயக்கத்தினால் படமாக்கி தந்திருக்கிறார்.

ஜப்பானில் நடக்கும் கபடி போட்டி பைனலின்போது பாகிஸ்தானை மையமாக வைத்து இந்தியக் கபடி குழுவின் கோச் பேசும் பல வசனங்கள் இன்றைக்கும் அனைத்து விளையாட்டுக்களிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.

பாகிஸ்தான் நாட்டவருடன் கை குலுக்கினாலே அது தேசத் துரோகம் என்று நினைக்கும் அளவுக்கு இன்றைய இந்திய அரசியல்வியாதிகள் இந்திய மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அதேபோல் தமிழகம் என்றாலே வட நாட்டவருக்கு ஏற்படும் கசப்புணர்வையும் இந்தப் படத்தில் பொருத்தமான இடத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மாரி.

அதுதான் ஜப்பான்வரைக்கும் போயிட்டானா என்று நாம் நினைக்கும் பொழுது அது அவ்வளவு சுலபமில்லை… இதன் பின்னால் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கிறது… எத்தனை பேர் இதன் பின்னணியில் இறந்து இருக்கிறார்கள்.. எத்தனை கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் இயக்குநர் பட்டியலிட்டு காட்டும்பொழுதுதான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த சமூகத்தில் மிகப் பெரிய இடத்திற்கு வந்துவிட்டால், அதன் பின்னணியில் எவ்வளவு சோகங்கள் இருந்திருக்கும் என்பதை நமக்கு இந்தப் படத்தின் மூலமாக உணர்த்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

இயக்குதல் என்பது ஒரு தனி கலை. அந்த கலையை முழுமையாக கற்றுக் கொண்டு வெளிப்படுத்து திறமை இருந்தால் அவர்கள் இயக்குநர்கள் என்ற தங்களை தங்களை சொல்லிக் கொள்ளலாம். இல்லை என்றால் காலம் அவர்களை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு பெரும் வெற்றியாளர்களை அழகாக மாலை மரியாதையுடன் ராஜபாட்டையில் பெருமிதமாய் அழைத்துப் போகும்.

வெறும் லைட்ஸ் ஆன், கேமரா, ஸ்டார்ட், ஆக்சன் என்று சொல்லத் தெரிந்தவர்கள் எல்லாம் இப்போது இயக்குநராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது எது இயக்கம்… இயக்கம் என்பது எப்படியிருக்க வேண்டும்… என்பதையெல்லாம் அவர்களுக்கு புரிய வைப்பதைபோல இந்தப் படத்தில் தன்னுடைய திறமைகள் அனைத்தையும் வைத்து வித்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் மாதிரி செல்வராஜ். தமிழ் சினிமாவுக்குள் நுழைய விரும்பும் புதிய இயக்குநர்கள் அனைவரும் நிச்சயமாக இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும்.

2004-ம் வருடம், அதற்கு முன்பு 1990களில் நடக்கும் பிரச்சனைகளை பேசும் கையோடு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதிய பிரச்சனைகளுக்கான காரணத்தையும் சொல்லி, அனைவரும் ஒன்றிணைவோம்… சாதிய மனப்பான்மை ஒழிப்போம் என்பதாக மாரி செல்வராஜ் வைத்திருக்கும் கந்தசாமி, பாண்டியராஜா கதாபாத்திரக் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

“என்னடா இது… எப்போது பார்த்தாலும் சாதி சாதிதானா?” என்று நினைத்து புலம்பும் நடுநிலை நடிக மக்கள்… தங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது தமிழகத்தின் உள் கிராமங்களுக்கு சென்று அங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் கொஞ்சம் பேசி, அவர்களுடன் இருந்து பார்த்தால்தான் அவர்களுடைய கஷ்டம் என்பது அவர்களுக்கு புரியும். சினிமாவில் வெறும் கொண்டாட்டத்தை மட்டுமே எதிர்பார்த்து வருபவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புரியாதுதான்.

ஆனால் ஒரு ஏழை குடியானவனின் கஷ்டம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். அதனால்தான் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் தாங்கள் இளம் வயதில் பட்ட கஷ்டத்தையெல்லாம் இப்போது தன்னுடைய படைப்பாற்றல் மூலமாக வெளிப்படுத்தி தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள். இதை நிச்சயமாக நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

ஏனெனில், இந்த இந்தியாவில் சாதி படிக்கட்டுகளை வைத்து ஒவ்வொரு படியாக அதில் ஏறி அனைவரும் சமம் என்ற முதல் படிக்கு வந்து நிற்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இத்திரைப்படம் தமிழ் சமூகத்துக்கு அவசியமான ஒரு திரைப்படம்தான். இத்திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், அவருடைய படக் குழுவினருக்கும் நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

RATING : 4.5 / 5

Our Score