full screen background image

பூகம்பம் – சினிமா விமர்சனம்

பூகம்பம் – சினிமா விமர்சனம்

நடிகர்கள் – : இஷாக் உசைனி, ஹேமா, பிரியா
இசை – : சதாசிவ ஜெயராமன்
ஒளிப்பதிவு – : தயாள் ஓஷோ & தேவராஜ்
இயக்கம் : இஷாக் உசைனி
தயாரிப்பு : ஐ இண்டர்நேஷ்னல் இஷாக் உசைனி

இது ஒரு அண்ணன், தம்பி கதை. அண்ணனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார் தம்பி. இன்னொரு பக்கம் கொரோனா காலத்தில் தன்னை விட்டு பிரிந்து போன அப்பாவையும், தம்பியையும் கண்டுபிடித்து அவர்களை கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் அண்ணன்.

இதில் அண்ணன் கொற்கை பாண்டியன் என்ற இஷாக் இப்போது ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். இது தேர்தல் நேரம். தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு நாட்கள் குறைவாக இருக்கும் சமயம்.

போலத்தில் இருக்கும் தம்பியான பிரபாகரன் மேலே படிக்கவும், அண்ணனை எப்படியாவது கண்டுபிடித்து பார்த்துவிடலாம் என்பதற்காகவும் சென்னைக்கு வருகிறார்.

இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்க உடன் படிக்கும் இரண்டு ஹீரோயின்களும் இவரை காதலிக்கிறார்கள். ஆனால் பிரபாகரன் பிரியா மீது மட்டுமே காதல் கொள்கிறார். அதே சமயம் அண்ணன் பொற்கை பாண்டியன் பிரியாவையை காதலிப்பதோடு அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்குகிறார்.

இந்த தேர்தலில் நேர்மையான ஒருவரை போட்டியிட வைக்க நினைக்கும் தம்பி பிரபாகரன் அதற்கான வேலைகளையும் செய்து முடிக்கிறார். எப்போதும் அன்னபோஸ்டாக வெற்றி பெறலாம் என்று நினைக்ரும் அண்ணன் கொற்கை பாண்டியன் தனக்கு எதிராக வலை விரித்திருக்கும் பிரபாகரன் தன்னுடைய சொந்த தம்பி என்பதை அறியாமலேயே அவருடன் மோதுகிறார்.

பிரபாகரன் இருக்கும் கல்லூரிக்கும் அடியாட்களை அனுப்பி அவரை கொலை செய்ய முயல்கிறார் அண்ணன். இதனால் கல்லூரியை சுற்றி வளைத்து தன்னுடைய அடியாட்களை நிறுத்தி வைத்திருக்கிறார். இந்தப் பிரச்சனையில் மாணவ, மாணவிகளை காக்க வேண்டிய பொறுப்பு தம்பி பிரபாகரனுக்கு வர அவரும் அந்த செயலில் இறங்குகிறார்.

இறுதியில் இவர்கள் இருவரில் எண்ணத்தில் யார் வெற்றி பெற்றது? அண்ணன், தம்பி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?… இல்லையா?… தேர்தல் நடத்ததா? இல்லையா?அண்ணன் கொற்கைப் பாண்டியன் தேர்தலில் வெற்றி பெற்றாரா?.. இல்லையா? என்பதுதான் இந்தப் பூகம்பம் படத்தின் மீதி கதை.

ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் இஷாக் ஹூசைனி தம்பி பிரபாகரன், அண்ணன் கொற்கை பாண்டியன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இருவருக்கும் இடையில் உள்ள முக ஒற்றுமையில் கொஞ்சம் சேதாரத்தை செய்து இருவரும் வேறு வேறு கேரக்டர்கள் என்பதை நம்பச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அரசியல்வாதியாக கொற்கை பாண்டியன் தன்னால் முடிந்த அளவுக்கு அனைவரையும் விரட்டுகிறார். மிரட்டுகிறார். அதற்கு மேல் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்னொரு பக்கம் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் பிரபாகரன் கல்லூரி பேராசிரியர் போன்ற தோற்றத்தில் இருந்து கொண்டு நான் ஒரு கல்லூரி மாணவன் என்று அடித்து நம்மை நம்பச் சொல்கிறார்.

ரொமான்ஸ் சீன்ஸ். காதலனாக நடிப்பது.. நடனம்.. ஆக்சன் என்று அத்தனைகளுமே தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்து இருக்கிறார் ஹீசைனி. பார்த்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள். பார்க்காதவர்களுக்கு பாராட்டுக்கள் என்று சொல்லும்படியாகத்தான் இந்தப் படத்தின் இயக்கம் அமைந்துள்ளது.

தில்சானா, ஹேமா என்ற இரண்டு நாயகிகளும் ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள். சாத்தானை வழிபடும் நபராக நடித்திருக்கும் நபர் இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி இப்படி ஒரு நடிப்பை எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்க முடியுமா என்று நமது சவால் விடுவதைப் போல நடித்திருக்கிறார்.

மேலும் படத்தில் உடன் நடித்த சக கல்லூரி மாணவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என்று அத்தனை பேருமே சுமாரான டைரக்ஷனுக்கு சுமாராக நடித்துள்ளனர்.

டைரக்ஷன், நடிப்புதான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் தொழில் நுட்பமும் இதே நிலைமைதான். தயாள் ஓஷோ, தேவராஜ் என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். எப்படி செய்துள்ளார்கள் என்பதை பார்க்க தைரியம் இருந்தால் நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

கேமரா கோணங்களை மாற்றி, மாற்றி வைத்து படம் எடுக்கிறோம் என்ற பெயரில் அத்தனை நடிகர்களின் வாய்களுக்கும் குளோசப் ஷாட் வைத்திருக்கும் இந்த ஒளிப்பதிவாளர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

சதாசிவ ஜெயராமனின் இசையில் ஏதோ போனால் போகிறது என்று பாடல்கள் ஒலிக்கின்றன. பின்னணி இசையில் தூங்கிக் கொண்டிருந்ததை எழுப்பி விடுவது போல டம் டம் என்ற சப்தத்தை எழுப்பி தூங்குபவர்களையும் டிஸ்டர்ப் செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.

ஹீரோவின் கண்களுக்கு மட்டும் குளோசப்பாக வைத்து தள்ளி இருக்கும் ஒளிப்பதிவாளர்கள் அவர் நடிப்பை காண்பிப்பார் என்று யோசித்து யோசித்து ஏமாந்து போயிருக்கிறார்கள் போலும்.

ஏதோ தன்னிடமிருக்கும் பணத்தை வைத்து.. முடிந்த ஹீரோயின்களை வைத்துஇந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் என்று தயாரிப்பாளரும், நடிகருமான, இயக்குநருமான இஷாக் ஹூசைனி சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பு என்பது தனி மனித உரிமை என்பதால் இப்படி படம் எடுப்பவர்களை நம்மால் எதுவும் சொல்ல முடியாது.

ஆனாலும், இவ்வளவு தைரியமாக இந்தப் படத்தை தீபாவளி ரேஸில் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளரின் தைரியத்துக்காக மட்டுமே நமது பாராட்டுக்கள்.

Our Score