இந்தப் படத்தை எம்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் தேவ், தேவிகா சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே விக்கி, யுவராஜ் கணேசன், நிதி பிரதீப், பிரவின், கிரி துவாரகீஷ், சுப்புரு, கலைக்குமார், சுபாஷினி கண்ணன், சுவாதி நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – எஸ்.சாம், ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – சஜிஸ்னா, படத்தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், கதை – ராம்ஸ் முருகன், கலை இயக்கம் – எம்.தேவேந்திரன், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, திரைக்கதை – எஸ்.சாம், ராம்ஸ் முருகன், பி.பண்புசெல்வன், மகேஷ் செல்வராஜ், நடன இயக்கம் – கலைக்குமார், ரகு தாபா, பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுபு, சதீஷ்காந்த், உடை வடிவமைப்பு – மீனாட்சி தரன், பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம்.
படவா கோபியின் மகள் நாயகி தேவிகா. இவரை பெண் பார்க்க விஜே நிக்கியின் அக்காவும், அக்கா கணவரும் சேர்ந்து வருகிறார்கள்.
ஆனால், தேவிகாவை பார்த்தவுடன் விக்கியின் அக்கா இவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று சொல்லிவிட்டு இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆயிருச்சு. அவர் கணவரோடு ஒரு தடவை ஹனிமூன் வந்திருந்தார். நான் அங்கே பார்த்தேன் என்று அடித்துச் சொல்கிறார்.
ஆனால் தேவிகாவோ அவரது குடும்பத்தினரும் இதை மறுக்கிறார்கள். எங்க பொண்ணுக்கு கல்யாணமே ஆகல என்ற அடித்துச் சொல்கிறார் படவா கோபி. ஆனால் விக்கியின் அக்கா இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க… அந்த சம்பந்தம் அந்தப் பேச்சோடு முறிந்து போகிறது.
அதன் பின்பு தேவிகா தான் யாருடன் ஹனிமூனுக்கு வந்திருந்தேன் என்று தேடி கடைசியாக ஹீரோ தேவை கண்டுபிடிக்கிறார். அவரிடம் இது பற்றி கேட்க தேவுக்கும் ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி. அப்படி ஒன்று என் வாழ்க்கையில் நடக்கவே இல்லையே.. நான் இன்னும் கல்யாணமே பண்ணலையே என்கிறார்.
ஓகே.. இப்ப நம்மளைத் தேடி வந்திருக்கும் பிரச்சனையை விசாரிப்போம் என்று நினைத்து விசாரித்துக் கொண்டே போக அவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்திருப்பதும், அதில் அவர்களுடைய கையெழுத்து இருப்பதும், அவர்களின் ஆதார் அட்டை எல்லாம் இருப்பதைப் பார்த்து மயக்கம் போடாத குறையாக இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது எப்படி நடந்தது.. யார் செய்தது.. என்ற இருவரும் குழப்பமாகி நிற்கிறார்கள்.
இதன் பின்பு என்ன நடக்கிறது?.. உண்மையில் இவர்களுக்கு திருமண நடந்ததா?.. இல்லையா?.. இதற்கு பின்னணியில் இருக்கும் சஸ்பென்ஸ் என்ன?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் தேவுக்கு இது முதல் படம். பரவாயில்லாமல் நடிப்பை காண்பித்திருக்கிறார். பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு போல தெரிவதால் இந்தப் படத்தில் துணிந்து நாயகனாக நடித்துவிட்டார். அவருடைய உடல் தோற்றத்திற்கு ஆக்சன் படங்கள் நிச்சயம் செட் ஆகாது. இது மாதிரியான குடும்ப திரைப்படங்கள் மட்டும்தான் அவருக்கு செட் ஆகும். இது முதல் படம் என்பதால் அவருடைய நடிப்பு பற்றிய பேச்சை விட்டுவிடுவோம். அடுத்தடுத்த படங்களில் அவர் ஜொலிக்கட்டும்.
நாயகியாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் மிக அழகு. நல்லதொரு நடிப்பை படத்திலும் காண்பித்து இருக்கிறார். ஆனால், இயக்குநரின் போதாத இயக்கத்தினால் கோபப்பட வேண்டிய இடத்திலும் அமைதி காக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளிலும் கொஞ்சம் நம் மனதை தொடாத அளவுக்குத்தான் நடித்திருக்கிறார் அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
ஹீரோயின் என்றாலும் அவருக்கென்று ஒரு தனி ஸ்பெஷலாட்டியை படத்தில் காட்டினால்தான் தியேட்டருக்கு வரும் ஆண்கள் ஹீரோயினை ரசிப்பார்கள். அதில் இந்த இயக்குநர் எதையும் செய்யாமல்விட்டதனால் ஹீரோயின் மீதான ஈர்ப்பு யாருக்கும் வரவில்லை.
“கல்யாணமே ஆகியிருந்தாலும் பரவாயில்லை… டைவர்ஸ் பண்ணிட்டு வாங்க… இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவோம்..” என்று ஒரு கேனத்தனமான, கிறுக்குத்தனமான கேரக்டரில் விக்கி நடித்திருக்கிறார். எதற்கு இந்த கேரக்டர் என்றுதான் தெரியவில்லை. இவரைப் படத்தில் பார்க்கும்போதே நமக்கு கோபம்தான் வருகிறது. எரிச்சல்தான் வந்தது. இயக்குநரின் மிக மிக தவறான ஒரு கேரக்டர் இவர் மட்டும்தான்.
படத்தின் துவக்கத்திலேயே கதையை தொடங்கிவிட்டதால் அந்தக் கதை ஒரே சீராக போய்க் கொண்டே இருக்கிறது. இடைவேளை பிளாக்கில் வருகின்ற டிவிஸ்ட் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கு பின்பும் அந்தப் படம் மீண்டும் அதே களத்தை சுற்றி சுற்றி வருவது போல அமைந்திருப்பதுதான் சோகம்.
தொழில் நுட்பத்தில் எந்த குறையும் இல்லை. ஒளிப்பதிவு முதல் காட்சியிலிருந்து கடைசிவரையில் ஒன்று போலவே அமைந்திருந்தது. ஹீரோ, ஹீரோயின் இருவரையுமே பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு உந்துதலாக இல்லாமல் போய்விட்டது.
இறந்து போனவர்களின் ஆவி மற்றவர்களின் உடம்பில் ஏறிக்கொண்டு தாங்கள் திருமணம் செய்ய முடியாமல் போனதால் அந்த வருத்தத்தை, அந்த இயக்கத்தை இவர்களின் உடலில் புகுந்து கொண்டு செய்து காட்டியதாக இயக்குநர் அமைத்திருக்கும் கதையை இன்னமும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தமாகப் பார்க்க போனால் இந்த ‘யோலோ’ என்ற திரைப்படம், மந்தமான ஒரு திரைக்கதையினாலும் அழுத்தம் இல்லாத காட்சிகளாலும் பல லாஜிக் மிஸ்டேக்கினாலும் சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை.
ஆனாலும் ஒரு முறை நிச்சயமாகப் பார்க்கலாம். அவ்வளவுதான்.
RATING : 3 / 5









