full screen background image

ஹரிஹர வீரமல்லு – சினிமா விமர்சனம்

ஹரிஹர வீரமல்லு – சினிமா விமர்சனம்

கிபி 1658 முதல் 1707 வரையிலும் இந்தியாவை ஆண்ட முகலாய சக்கரவர்த்தியான அவுரங்கசீப் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதைதான் இத்திரைப்படம்.

ஆந்திராவின் மசூலிப்பட்டினம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்தணர் சத்தியராஜ். இவரது மனைவி ஈஸ்வரி ராவ். இவர்கள் தினந்தோறும் வணங்கும் கோவிலின் அருகே இருக்கும் ஆற்றில் ஒரு குழந்தை தனியே விடப்பட்டு இவர்கள் பார்வையில் படுகிறது. அந்தக் குழந்தையை சத்யராஜ், ஈஸ்வரி ராவ் தம்பதிகள் எடுத்து வளர்க்கிறார்கள்.

இதற்கு பிறகு சரியாக 25 ஆண்டுகள் கழித்து இந்தக் கதை தொடர்கிறது.

ஆந்திரா முழுவதிலும் சுரங்கம் அமைத்து வைரங்களை தேடி வருகிறார்கள் கிழக்கிந்திய கம்பெனியர். கிடைத்த வைரங்களை மசூலிப்பட்டினம் கடற்கரையில் இருந்து கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள் கிழக்கு இந்திய கம்பெனியினர்.

அப்பொழுது சத்யராஜ் வளர்த்த அந்த மகன் இப்போது ‘வீரமல்லு’ என்கின்ற பெயருடன் மிகப் பெரிய ராபின்கூட்டாக வளர்ந்து இருக்கிறார்.

“எங்களுடைய நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்படும் செல்வங்களை எந்த நாட்டுக்கும் அனுப்ப விடமாட்டோம். அந்த வைரங்கள் எல்லாம் எங்களுடைய மக்களுக்கே சொந்தம்” என்று சொல்லும் வீரமல்லு அந்த வைரங்கள் முழுவதையும் கைப்பற்றி விடுகிறார்.

பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு குறுநில மன்னரின் அரண்மனைக்கு வந்து அங்கேயும் சண்டையிட்டு அங்கே இருக்கின்ற மக்களுக்கும் நெல் மூட்டைகளையும் பரிசாகப் பெற்றுத் தருகிறார்.

அதோடு அந்த ராஜாவை இவர்கள் யாருமே ஒரு முறைகூட தலை நிமிர்ந்து பார்த்ததே இல்லையாம். அந்த நிலைமையை ஒரே நிமிடத்தில் அடியோடு மாற்றி “நாங்கள் இனி எப்போதும் தலை நிமிர்ந்துதான் நடப்போம்” என்று அரசரிடம் உத்தரவாதம் வாங்கியும் தருகிறார்.

இந்த அரசரின் வருங்கால மனைவியான நிதி அகர்வால் வீரமல்லுவைக் காதலிக்க…. இருவரும் நன்கு திட்டமிட்டு அரசரின் அரண்மனையில் இருந்து தப்பித்து செல்கிறார்கள். ஆனால் நிதி அகர்வால் கடைசி நேரத்தில் வீர மல்லுவை ஏமாற்றிவிட்டு வைரங்களுடன் தப்பியோடுகிறார்.

இந்த நேரத்தில் வீரமல்லுவை அழைக்கும் கோல்கோண்டா மன்னர் தங்களுடைய விலை மதிப்பில்லாத கோகினூர் வைரம் இப்போது டெல்லியிலே ஆளும் அவுரங்கசீப் அமர்ந்திருக்கும் தர்பார் பீடத்தின் உச்சத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை எப்படியாவது கொள்ளையடித்துக் கொண்டு வரும்படி சொல்கிறார். இதற்கு வீர மல்லுவும் ஒத்துக் கொள்கிறார்.

தன்னுடன் சில நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கோகினூர் வைரத்தை மீட்க புறப்படும் வீர மல்லுவின் திட்டம் வெற்றி அடைந்ததா?இல்லையா? நிதி அகர்வாலின் நிலைமை என்ன ஆனது..? வைரத்தை அவரிடமிருந்து வீர மல்லு கைப்பற்றினாரா?… என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

நன்கு திட்டமிட்டு இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டிய படம் என்பதால், முதல் பாகத்தின் முடிவு இரண்டாம் பாகத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் கச்சிதமாக அமைத்திருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் ‘பவர் ஸ்டாரான’ பவன் கல்யாண், ‘ஹரிஹர வீர மல்லு’வாக வீர ஆவேசம் கொண்டு நடித்திருக்கிறார்.

அவருடைய இப்போதைய அரசியல் கொள்கைக்கு ஏற்ற வகையில் இந்தப் படத்தின் கதையும் அமைந்திருப்பதால் சரளமாக வசனம் பேசி நடித்து தன்னுடைய அரசியல் பிரச்சாரத்திற்கும் இப்படத்தை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.

சண்டைக் காட்சிகளிலும், ஸ்டைல் காட்டும் காட்சிகளிலும் வீர ஆவேச வசனங்களை பேசுகின்ற காட்சிகளிலும் வழக்கமான தெலுங்கு மாஸ் மசாலா ரசிகர்களுக்கு எந்த மாதிரி பிடிக்குமோ அந்த மாதிரி எல்லாம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் பவன் கல்யாண்.

நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தாலும் மிக அதிகமான காட்சிகள் அவருக்கு இல்லை. ஆனால் அதே சமயம் இத்திரைப்படம் ஒவ்வொரு வருடமாக விட்டுவிட்டு படமாக்கப்பட்டு இருப்பதால் அந்த கால ஓட்டத்தின் விளைவாக நிதி அகர்வாலின் முகமும், உடலும் காட்சிக்கு காட்சி மாறி இருப்பதையும் நம் பார்க்க முடிகிறது.

இரண்டு பாடல் காட்சிகளில் தன்னுடைய நடன திறமையை காட்டி இருக்கும் நிதி அகர்வாலுக்கு நடிப்பு திறமையை காட்டும்படியான காட்சிகள் இதில் இல்லை என்பதால் அவருடைய நடிப்பு பற்றி நாம் எதுவும் சொல்ல முடியவில்லை.

அவுரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் ஒரு வெறித்தனத்தைக் காட்டி இருக்கிறார். உண்மையில் அவுரங்கசீப் இப்படித்தான் இருந்தாரா என்றால் யாராலும் சொல்ல முடியாது.

ஆனாலும் தங்களுக்கு இருக்கும் சக்தி’யை வைத்து இந்தப் படத்தின் கதாசிரியரும், இயக்குநரும் அவரைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை இந்தப் படத்தின் மூலமாக இந்திய மக்களுக்கு எடுத்து வைத்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.

தன்னுடைய இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு அவுரங்கசீப்பை கொடுமையானவனாக காட்டியிருக்கும் பாபி தியோலின் நடிப்பு, இந்தப் படத்தை பொருத்தவரையில் ஓகே என்றுதான் சொல்ல வேண்டும்.

நிஜத்தில் நாத்திகரான சத்யராஜ் இந்தப் படத்தில் ஆத்திய பழமாக தோன்றி பக்திப் பரவசத்தை கொடுத்திருக்கிறார்.

மோகன்பாபு, சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

படத்திற்கு பவர் ஸ்டாரைவிடவும் அதிகமான விளம்பரத்தை கொடுத்திருப்பது கீரவாணியின் இசைதான். இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வரலாற்று கதைக்குரிய பின்னணி இசையையும், அந்த காலத்திய இசையையும் கொடுத்து ரசிகர்களை கவனத்தில் ஈர்க்க வைத்திருக்கிறார் கீரவாணி.

ஒளிப்பதிவாளர்கள் குணசேகர் மற்றும் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பட்ஜெட் படம் இது என்பதை பறை சாற்றியிருக்கிறது.

ஆனாலும் போடப்பட்டிருக்கும் ராஜா காலத்து செட்டுகளும், சில கிராபிக்ஸ் காட்சிகளும் நம்முடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்.. இதைவிடவும் சிறப்பாக செய்திருக்கலாம்.. செய்யாமல்விட்டது ஏன் என்று தெரியவில்லை.

கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பில் படம் ரன் பாஸ்டாக ஓடுகிறது என்பது மட்டும் உண்மை.

படத்தின் ஆடை வடிவமைப்பாளரையும் நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். அந்தக் காலத்திய ஆடைகளை படித்துப் பார்த்து, தெரிந்து, ஆராய்ந்து, ஆடைகளை வடிவமைத்து இருக்கிறார். மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர்.

படத்தில் நாம் மிகப் பெரிய குறையாக பார்ப்பது சிஜி என்ற கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணியைத்தான். இதைவிடவும் சிறப்பான கிராபிக்ஸ்களை நாம் முன்பே பல திரைப்படங்களில் பார்த்துவிட்டதால் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் நமக்கு கொஞ்சம் பின்னடைவாகத்தான் தெரிகிறது. இதைவிடவும் சிறப்பாக செய்திருக்கலாம்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா அவுரங்கசீப் மற்றும் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை மட்டும் உண்மையாக வைத்துக் கொண்டு மற்றக் கதைகளில் கற்பனையை அவிழ்த்துவிட்டு திரைக்கதை அமைத்து படத்தை இயக்கிக் கொடுத்திருக்கிறார்.

இது போன்ற வரலாற்று கதைகளை படம் பார்க்கும்போது நிச்சயமாக அதில் சிறிதளவேனும் உண்மை இருந்தாக வேண்டும். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமை பரப்புவதை மட்டுமே அவர் குறிக்கோளாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை இப்போதைய பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்துதான் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அதற்கு முன்பு பிஜேபி ஆதரவு பெற்ற இயக்கங்கள்தான் இதையும் முன் வைத்துக் கொண்டே வந்தன. காரணம் அவர்களுடைய இஸ்லாமிய எதிர்ப்பு அஜென்டா. அந்த எதிர்ப்பு இந்தப் படத்தில் ஜோதி கிருஷ்ணன் இயக்கத்தில் இருப்பது நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.

பவன் கல்யாண் இதில் நடிப்பார் என்பது எதிர்பார்த்ததுதான். ஏனெனில், அவர் தற்போது பிஜேபி கூட்டணியிலேயே ஒரு மாநிலத்தின் துணை முதல்வராக அமர்ந்திருக்கும் நிலையினால் சினிமாவில் காட்டப்படும் மதத் துவேஷங்களுக்கு அவரும் துணை போயிருக்கிறார்.

இந்த படத்தில் பவன் கல்யாண் தன்னுடைய நடிப்பினால் இந்து, முஸ்லிம் இரு பிரிவினரிடையே பிணக்கு ஏற்படும் வகையில் மதத் துவேஷத்திற்கு உதவியிருக்கிறார் என்பது வருத்தமான ஒரு விஷயம்.

கலைஞர் என்பவன் காலத்தின் கண்ணாடி. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானவன். சினிமா தியேட்டருக்கு பல்வேறு மதத்தவர்களும், ஜாதியினரும் படம் பார்க்க வருகிறார்கள்.

அந்த வகையில் பெரும் திரளான பல்வேறு மதங்களைச் சேர்ந்த ரசிகர்களைக் கொண்டிருக்கும் பவன் கல்யாண், தான் இனிமேல் இந்து மதத்தில் ஒரு பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமே பவர் ஸ்டாராக இருந்து கொள்கிறேன் என்று இறங்கி வந்திருப்பது காலக் கொடுமை.

முன் காலத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்து வரக் கூடிய தலைமுறையினருக்கு சொல்லி வைத்து விட்டுப் போகும் ஆவணம் என்ற வகையில் இந்தப் படம் இந்து, முஸ்லிம் மக்களிடையே ஒரு மோதலையும், கோபத்தையும், பிரிவையும், பிளவையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

கோஹினூர் வைரம் எப்படி லண்டனுக்கு கொண்டு போகப்பட்டது என்பதை ஒரு படமாக உருவாக்கினால்கூட பரவாயில்லை. ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால் அப்போதைய ராஜாக்களின் காலகட்டத்தை, அவர்களுடைய நடத்தையை, அவர்களுடைய செயல்பாடுகளை, இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுவதும், தீர்ப்பளிப்பதும் நேர்மையற்ற செயல்.

அந்த வகையில் இந்தப் படத்தில் இருக்கும்  இந்து மத ஆதரவு, தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பு, இஸ்லாமிய மன்னர்களை கொடுங்கோலர்கள் என்று காட்டி இருப்பது போன்றவைகளை எல்லாம் நீக்கிவிட்டு எடுத்திருந்தால் இதுவொரு நல்ல முழு நீள எண்ட்டெர்டெயின்மெண்ட் திரைப்படமாக வந்திருக்கும்.

RATING : 2.5 / 5

 

Our Score