இப்போதெல்லாம் OTT தளங்களில் கோர்ட்டு டிராமா தொடர்பான வெப் சீரிஸ்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஒரு புதுமையான கதைக் களத்தில் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது இந்தச் சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸ்.
எத்தனையோ வழக்கறிஞர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு வராமல் அவர்களும் சாதாரணமான ஒரு எளிய முறையில் அந்த தொழிலை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர்கள் பலரையும் நாம் எப்போதும் பல்வேறு நீதிமன்றங்களில் நீதிமன்ற வாசலிலேயே சந்திக்க நேரும். அப்படிப்பட்ட ஒரு வழக்கறிஞர்தான் சுந்தரமூர்த்தி என்ற சரவணன். இப்போது நோட்டரி பப்ளிக்காக இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற காம்பவுண்டில் தனியாக ஒரு சேர் டேபிள் போட்டு அமர்ந்து நோட்டரி பப்ளிக்கான வேலையை செய்து வருகிறார் சுந்தரமூர்த்தி. அவர் நீதிமன்றத்திற்குள் கால் வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அங்கே வரும் பல வழக்கறிஞர்களும் அவரை கிண்டல் செய்து கொண்டு போகிறார்கள்.
அவருடைய வீட்டிலும் அவருடைய மகனும் இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை மதிக்கவே மறுக்கிறான். பிளஸ் டூ முடித்துவிட்டு வழக்கறிஞருக்குப் படிக்கப் போகிறேன் என்று சிறு வயதில் சொன்னவன், இப்பொழுது “அது வேண்டாம்.. நான் பொறியியல் படிக்கப் போகிறேன்” என்கிறான்.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட நிலையில் தன் மகனை தன்னை மதிக்க மறுக்கிறானே என்பதைவிட தான் நேசிக்கும் வழக்கறிஞர் தொழிலை அவன் ஏற்க மறுக்கிறான் என்கிற வருத்தம்தான் சுந்தரமூர்த்திக்கு அதிகமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் நாயகி அருணா பி.எல்.படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு பெரிய வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு சிபாரிசு கடிதத்தை சுந்தரமூர்த்திதான் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் சுந்தரமூர்த்தியின் சிபாரிசு கடிதத்தை பார்த்த உடனேயே பலரும் அவரை வேலைக்கு சேர்க்க மறுக்கிறார்கள்.
போகின்ற இடங்களில் எல்லாம் கதவடைப்பு செய்யப்பட்டுவிட்டதால் அருணா திரும்பவும் யூ டர்ன் போட்டு சுந்தரமூர்த்தியிடமே வருகிறார். “நான் உங்களிடமே ஜூனியராக இருக்கிறேன்..” என்கிறார். சுந்தரமூர்த்தியோ அதை மறுத்து “இன்னொரு முறை முயற்சி செய்து வேறு யாரிடமாவது சேர்ந்து கொள்..” என்கிறார்.
இந்த நேரத்தில்தான் குப்புசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். தன்னுடைய மகளைக் காணவில்லை என்று தான் கொடுத்த புகாரை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கவே இல்லை என்றும், தன் மகள் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும், தன் மகளை போலீஸார் தேடவும் இல்லை என்கின்ற வருத்தத்தில், சோகத்திலும் வந்த குப்புசாமி தன்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படியாக நீதிமன்றத்தில் தீக்குளித்துவிட்டு கவனயீர்ப்பு செய்திருக்கிறார்.
குப்புசாமியின் இந்த மரணம் சுந்தரமூர்த்தியை மிகவும் பாதிக்கிறது. இந்த வழக்கை தான் எடுத்து நடத்தினால் என்ன.. என்று யோசித்தவர், குப்புசாமியின் புகாரில் உள்ள உண்மையை விசாரிக்க வேண்டும் என்று ஒரு பொது நலன் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்கிறார் சுந்தரமூர்த்தி. இந்த வழக்கு விசாரணைக்காக தனக்கு உதவியாக இருக்கும்படி அருணாவையும் கேட்டுக் கொள்கிறார்.
இந்த வழக்கின் முதல் விசாரணையிலேயே இந்த வழக்கின் தன்மை மாற்றப்பட்டு ஹேபியஸ் கார்பஸ் வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை தீவிரமாக விசாரித்து அவருடைய மகளை நீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயம் வருகிறது.
இப்பொழுது இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கத் துவங்குகிறார்கள் சுந்தரமூர்த்தியும், அருணாவும். முதலில் குப்புசாமி ஒரு மனநோயாளி என்பது தெரிய வருகிறது. அதன் பிறகு அவருடைய மகள் சிறு வயதில் ஏற்கனவே காணாமல் போய் அதன் பிறகு மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார் என்பது தெரிய வருகிறது.
இந்த பிரச்சனையில் ஒரு நாள் சுந்தரமூர்த்திக்கு சாதகமாக வந்தாலும் மறுநாள் அவருக்கு எதிர்ப்பாக பல ஆதாரங்களும் கிடைக்கின்றன. இடையில் சுந்தரமூர்த்திக்கும், அருணாவுக்கும் அனாமதேய போன் கால் மூலமாக மிரட்டல்களும் வருகின்றன.
இதனாலேயே இந்த வழக்கில் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட சுந்தரமூர்த்தியும் அருணாவும் இந்த வழக்கினை துப்பு துலக்க பெரும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றதா?… இல்லையா?… உண்மையில் குப்புசாமியின் மகளை யார் கடத்தினார்கள்?.. அவருடைய மகள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்?… நீதிமன்ற விசாரணையின் முடிவு எப்படி இருக்கும் எப்படி இருந்தது?… என்பதுதான் இந்த வெப் சீரிசின் சுவாரசியமான திரைக்கதை.
தன்னால் ஒரு அப்பாவியை காப்பாற்ற முடியவில்லை என்கின்ற வருத்தத்தில் இனிமேல் நீதிமன்றத்தில் வாதாட மாட்டேன் என்று தனக்குள் ஒரு வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன்படியே தான் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும் என்கின்ற ஒரு மன நிலையில் வாழ்ந்து வரும் சுந்தரமூர்த்தி என்ற இந்தக் கதாபாத்திரத்திற்கு ‘பருத்தி வீரன்’ சரவணன் என்ற ‘சித்தப்பு’ ஓரளவுக்கு நியாயமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
முதல் சில காட்சிகளில் அவருடைய நடிப்பு செயற்கையாக தென்பட்டாலும், அதற்கு பிறகு போக போக “எப்படியாவது ஜெயிச்சிருங்க சுந்தரமூர்த்தி..” என்று சீரிஸை பார்க்கும் ரசிகர்களும் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு நம்மை கவர்ந்துவிட்டது.
நீதிமன்றத்தில் வாதாடுகையில் ஏற்படும் பல்வேறு குழப்பங்களை அந்தந்த நேரத்தில் சமாளிக்கும்விதமும், வழக்கின் முக்கியமான திருப்பங்களை அவர் வெளிப்படுத்தும் இடங்களிலும் அவருடைய நடிப்பும் அபாரம் என்றே சொல்லலாம்.
தன் குடும்ப பிரச்சனைகள் ஒரு பக்கம் அழுந்த… இன்னொரு பக்கம் போலீசின் அலட்சியத்தால் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதும், கடைசியாக போலீசிடமே கைதியாக சிக்குவது என்று பல்வேறு திரைக்கதைகளில் சரவணன் நடிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது.
கிளைமாக்ஸில் நீதிமன்றத்தில் கடைசி உண்மையையும் உடைத்துவிட்டு மெதுவாக நீதிமன்றத்திற்கு வெளியே வந்து நிற்கின்ற அந்த ஒரு காட்சியில் “சிம்ப்ளி சூப்பர் சித்தப்பு” என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
ஜூனியராக வேலை செய்யும் அருணா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் நம்ரீதாவின் நடிப்பும் ஓஹோ ராகம்தான். அவருடைய பல குளோசப் காட்சிகள் அவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அவர் பேசுகின்ற வசனங்களையும், நடிப்பையும் பார்க்க வைத்திருக்கிறது.
குப்புசாமியாக நடித்தவர் ஒட்டு மொத்தமாக நம்முடைய பரிதாப உணர்வை பெற்றுக் கொண்டுவிட்டார். மகளை காணவில்லை என்கின்ற வருத்தமும், பேச்சும்… ஒரு மனநோயாளிக்கான மன நிலையில் அவர் பேசுகிறார் என்பதால் அது ஓவர் டோசாக இல்லை. அது ஒரு நோயாளியின் பொருளாகவே நமக்கு தெரிகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பைக் கொடுத்திருக்கிறார் குப்புச்சாமியாக நடித்தவர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
சரவணனின் மனைவியாக நடித்தவர், அவருடைய மகனாக நடித்தவர், மகளாக நடித்தவர்கள் என்று அனைவருமே மிக அளவோடு நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் நடக்கும் உட்கட்சிப் பூசல் பற்றிய விஷயங்களும் நம்மை கவர்கின்றன. மகள் வெண்ணிலாவாக நடித்தவரும் கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
குப்புசாமியின் மனைவி வள்ளியாக நடித்தவர் மிகவும் செயற்கையாக நடித்திருக்கிறார். மற்றவர்களை நடிக்க வைத்த இயக்குநர் இவரிடத்தில் மட்டும் ஏன் தோற்றுப் போனார் என்று தெரியவில்லை.
கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இந்த வெப் சீரிஸை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல பார்க்க வைத்திருக்கிறது. வெறும் 13 நாட்களில் இந்த வெப் சீரிஸை படமாக்கி இருப்பதால் நிச்சயம் ஒளிப்பதிவாளரின் பணி கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். அதையும் தாண்டி பல காட்சிகளில் கோணங்களை மாற்றி மாற்றி எடுக்காமல் ஒரே கோணத்தில் எடுத்தும் காட்சிகளை பாஸ் செய்ய வைத்திருக்கிறார்ஒளிப்பதிவாளர்.
பாடல்களில் டைட்டில் சாங்கும், வெப் சீரிஸின் முடிவில் வரும் பாடலும் கேட்கும் ரகம். அந்தந்த சூழலுக்கு ஏற்ப அவைகள் நம் மனதை தொட்டு இருக்கின்றன.
ஆனால் விபின் பாஸ்கரின் பின்னணி இசை கொஞ்சம் நாடகத்தனமாக அமைந்திருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி அமைத்திருக்கலாம்.
நான் லீனியர் முறையில் இந்தக் கதை சொல்லப்படுவதால் அதற்கேற்றவாறு கொஞ்சமும் குழப்பம் இல்லாமல் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ராவணன். நிகழ் காலம், கடந்த காலத்திற்கான காட்சிகளை அடுத்தடுத்து வழங்கும்பொழுது அதற்கான அறிகுறிகளையும் படத்தில் இணைத்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு பாராட்டு.
ஒரு தோல்வி அடைந்த வழக்கறிஞரின் இன்றைய நிலைமையையும் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கையையும் சொல்லி இருக்கும் இந்த வெப் சீரிஸ் இந்த ஓடிடி தளத்துக்கு நிச்சயம் புதுமையானதுதான். கோர்ட் டிராமாவில் நிறைய சட்ட பிரிவுகள், சட்டங்கள், அவை அமல்படுத்தப்படும் விதம் இதையெல்லாம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கிளைமாக்ஸில் சரவணன் தலை குனிய போகிறார் என்ற நினைத்த நேரத்தில் ஓடி வந்து காப்பாற்றும் வள்ளியின் அந்த முடிவு சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு நமக்கு ஓபன் ஆகும்போது கை தட்ட வைத்திருக்கிறது.
ஆனாலும் சீரிஸில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. ஒட்டுமொத்தமாய் பார்க்கப் போனால் இந்த வெப் சீரியஸ் வெறும் 13 நாட்களில் அவசர, அவசரமாக எடுக்கப்பட்டது போலத்தான் தோன்றுகிறது இடையிடையே காட்சிகளை இணைக்கும்விதமாக அமைய வேண்டிய காட்சி கோர்வைகள் இந்த வெப் சீரிஸில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
சரவணனின் நடிப்பில் ஆங்காங்கே தென்படும் சில சறுக்கல்களும், மற்றைய நடிகர்களின் நடிப்பில் இருந்திருக்க வேண்டிய கவன ஈர்ப்பும் குறைவாக இருப்பதால் இயக்குநருக்கு மொத்தமாய் சபாஷ் போட முடியவில்லை.
குப்புசாமி ஓவராய் ஒரு பக்கம் அழுதாலும் இன்னொரு பக்கம் வள்ளியின் போதாமையான நடிப்பும் அவருடைய இரண்டாவது கணவரின் எதார்த்தம் இல்லாத பேச்சும், காவல் துறையினரின் சவுடால்தனமும்… வள்ளி எதற்காக இப்படியொரு தடம் புரண்ட வாழ்க்கையை தொட்டார் என்பது பற்றிய ஒரு விளக்கமும் சொல்லப்படாததால் நம்முடைய பரிதாப உணர்வு வள்ளிமீது ஏற்படவே இல்லை.
ஆனாலும், ஒரு கோர்ட்டு டிராமாவை ஒரு புதிய அனுபவமாகப் பார்க்க வைத்திருக்கும் ஜீ 5 மற்றும் படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.









