full screen background image

லீடர் – சினிமா விமர்சனம்

லீடர் – சினிமா விமர்சனம்

இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளது.

இந்த ‘லீடர்’ திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்திருக்கிறார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ.ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது.

இப்போது தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கும் முன்னணி ஹீரோக்கள் எல்லாம் தங்களுடைய ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதே தெரியாமல் தங்களுக்குப் பொருத்தமில்லாத கதையைத் தேர்வு செய்து தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எதைப் பற்றியும் கவலையில்லை. நான் ஒரு கமர்சியல் ஹீரோ. எனக்கேற்ற கதை இதுதான். எனக்கேற்ற தம் இதுதான்.. களமும் இதுதான் என்று சொல்லி துணிந்து அடித்திருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன்.

இந்த படத்தின் கதைக் களம் தூத்துக்குடியும், அதன் துறைமுகமும்தான்.

தூத்துக்குடியில் விடிவி கணேஷ் நடத்தும் கார் ஒர்க் ஷாப்பில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் படத்தின் ஹீரோவான சரவணன்.

அவருடைய வீட்டில் அவரும், அவருடைய 10 வயதான மகளும்தான் இருக்கிறார்கள். மகள் காது கேளாத மாற்றுத் திறனாளி. இதனால் அவள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் சரவணன் ஒர்க் ஷாப்பில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதும், மறுபடியும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதுமாக அந்த வேலையை மட்டும் சரியாகச் செய்து வருகிறார் சரவணன்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக பல தடை செய்யப்பட்ட பொருட்களையும், போதை மருந்துகளையும் கடத்தி பெரும் பணம் பார்த்து வருகிறது ஒரு சர்வதேச கும்பல்.

அந்தக் கும்பலின் லோக்கல் தலைவனாக இருப்பவர் பாகுபலி பிரபாகரன். இவருக்கு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பது மெயின் வில்லனான சந்தோஷ் பிரதாப்.

இந்த நேரத்தில் ஒரு கண்டெய்னர் முழுவதும் அமோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த வெடிபொருளை தூத்துக்குடிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று பாகுபலி பிரபாகரன் துடித்துக் கொண்டிருக்கிறார்.

லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆண்ட்ரியா இதைப் பற்றி கேள்விப்பட்டு அந்த கண்டெய்னரை முடக்கவும், அந்தக் கொள்ளை கும்பலை கைது செய்யவும் துடியாய் துடிக்கிறார்.

ஆனால், பணத்தை வீசி அடிசினல் டிஜிபி வரையிலும் பாகுபலி பிரபாகன் ஆள் பிடித்து வைத்திருப்பதால் ஆண்ட்ரியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் தடை வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் தூத்துக்குடியின் புதிய எஸ்பியாக பதவி ஏற்கிறார் ஷாம். அவருக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையில் முதலில் நட்பு ஏற்படவில்லை. ஒரு கசப்புணர்வால் இருவரும் விலகியே இருக்கிறார்கள். அதே சமயம் ஆண்ட்ரியாவின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே வருகிறார் ஷாம்.

இந்த நேரத்தில் அந்த வெடி மருந்து இருக்கும் கண்டெய்னரை ஷாம் கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனில் வைக்கிறார். இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அந்தக் கண்டெய்னரை கடத்துவதற்கு ஒரு பிளான் போடுகிறார் ஆண்ட்ரியா. சரவணனின் மகளை கடத்தி வந்து ஒளித்து வைத்துவிட்டு அவளை பாகுபலி பிரபாகர்தான் கடத்தி இருக்கிறார்கள் என்ற ஒரு பொய்யை சொல்லி சரவணன் தூண்டிவிட்டு அந்த கண்டெய்னரை வெளியில் எடுக்க வைக்கிறார் ஆண்ட்ரியா.

இன்னொரு பக்கம் ஷாம் கடத்தலுக்கு உள்ளாகும் அந்த கண்டெய்னரை மீட்க பெரும் முயற்சி செய்கிறார். ஆனால் சரவணனோ இந்தத் திட்டத்தில் இடையில் நுழைந்து ஜெயிப்பதோடு ஆண்ட்ரியா, ஷாம் இருவரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுகிறார்.

அப்போதுதான் சரவணனுக்கும் அந்தக் கொள்ளை கும்பலுக்கும், கண்டெய்னர் கடத்தலுக்கும்… அவர் அடிக்கடி துறைமுகத்துக்குள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வந்து போகும் ரகசியமும் தெரிய வருகிறது.

சரவணனின் பின்னால் இருக்கும் ஒரு உண்மையை தேடுகிறார்கள் ஷாமும் ஆண்ட்ரியாவும்.. அந்த உண்மையை இருவரும் கண்டறிந்தார்களா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை, திரைக்கதை, வசனம்… இது எல்லாவற்றையும் தாண்டி இயக்கம் என்பதும் ஒரு காரணமாகத்தான் இருக்கும். எவ்வளவு மொக்கையான கதையை கொடுத்தாலும் பார்க்க வைப்பது போல இயக்கம் செய்து விடுவார்கள் சில இயக்குநர்கள்.

அதே சமயம் மிகச் சிறந்த இயக்குநராக இருந்தாலும் கதை சரியாக இல்லை என்றாலும் படத்தை ஒரு முறையேனும் பார்க்க வைத்து விடுவார்கள். அந்தவகையில் இந்தப் படத்தை தனது மிகச் சிறந்த திரைக்கதை ஆக்கத்தினால் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரையிலும் இமை கொட்டாமல் திரையை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில் குமார். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

லெஜன்ட்’ படத்திலேயே சரவணன் தனக்கு எது வரும்? எது வராது? தன்னால் எப்படி நடிக்க முடியும்? என்பதையெல்லாம் காட்டியிருந்ததால் அதில் கொஞ்சமும் மிஸ் ஆகாமல் இந்தப் படத்திலும் தன்னுடைய நடிப்பை ஒரு லெவலில் வைத்து காட்டி இருக்கிறார்.

தன் மகள் மீது அவர் காட்டுகின்ற பாசம்.. அந்த மகளுக்காக “என் குழந்தையை ஸ்கூல்ல இருந்து கூப்பிட போகணும்” என்று அவர் அடிக்கடி பேசுகின்ற அந்த வசனமும், அதை உச்சரிக்கும்விதமும் அந்த இடத்தில் அவருடைய முகத்தில் காட்டும் நடிப்பும் மிக சாதாரணமானதுதான். ஆனால் உண்மையானது.

பாயல் ராஜ்புத் என்ற பேரழகியின் முன்பு சரவணன் எதுவுமே இல்லை என்றாலும் படத்தின் ஹீரோ என்பதால் காதலிப்பதற்காக அவர் மொக்கை காதல் கவிதைகளை எல்லாம் பேசாமல் “கடைசிவரையில் நாம் இப்படியே அருகருகே இருந்துவிடலாமா?” என்று சுஜாதா பணியில் ஒரு கொக்கியை போட்டு பாயிலை கவருகிறார் சரவணன். இது நம்மையும் கவர்கிறது.

சண்டைக் காட்சிகளில் இப்போதைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் அடித்து அடி இருக்கிறார் சரவணன். உண்மையில் ஜவான் படத்தின் சண்டை காட்சிகளைப்போல இந்தப் படத்திலும் ஷாருக்கானுக்கு சவால் விடும் வகையிலும் ரயிலுக்குள் நடக்கும் அந்த சண்டைக் காட்சியை படமாக்கி இருக்கிறார். அவ்வளவு வேகத்தோடு நடித்தும் இருக்கிறார் சரவணன். சில செண்டிமெண்ட் காட்சிகளில் கண்ணீர்விட்டு அழுது தன்னால் முடிந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அண்ணாச்சி. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

வட்ட வடிவமான முகத்தில் ஒரு பக்கம் ஜெயப்பிரதாவையும் இன்னொரு பக்கம் பழைய பிளாக் அண்ட் ஒயிட் தேவிகாவையும் ஞாபகப்படுத்தும் வகையில் இருக்கும் நாயகி பாயல் ராஜ்புத், தன்னுடைய முக பாவனைகளிலேயே ரசிகர்களைச் சொக்க வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு ஹீரோயினை கொடுத்து ஒரே ஒரு டூயட் பாடலிலும் அத்துமீறாமல், எல்லை மீறாமல் ஹீரோவை நடிக்க வைத்திருக்கும் இயக்குநரை என்னவென்று சொல்வது? பரவாயில்லை? பாயலின் அழகோடு சரவணனையும் சேர்த்து வைத்து, நம்மையும் பொறாமைப்பட வைத்திருக்கிறார் இயக்குநர்.

சின்ன வில்லனாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர் சில இடங்களில் சிறந்த இயக்கத்தின் காரணமாக வில்லத்தனமான நடிப்பில் நம்மை கவர்கிறார். குணச்சித்திர நடிப்பில் லால் போட்டி போடுவதுபோல தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார். கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைத்தும் புன்னகைக்க வைத்திருக்கிறார் விடிவி கணேஷ்.

இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் அமிர்தா ஐயர் படத்தின் கதை, திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் மகளாக நடித்திருக்கும் இயல் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பின் மூலம் நம்மை கவர்கிறார். தன்னுடைய அப்பாவை ஏன் பிடிக்காது என்பதற்கு அவர் சொல்லுகின்ற நியாயமான காரணமும், அவருடைய காது கேளாத தன்மையை வைத்து திரைக்கதையில் மூன்று இடங்களில் ஒரு டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார் இயக்குநர். சிறுமி இயலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படவே வேண்டாம் என்பதுதான் இந்தப் படத்தின் இயக்குநருக்கு முதல் சந்திப்பிலேயே சொல்லப்பட்ட உத்தரவாதம். அதனால் இந்தப் படத்தின் தொழில் நுட்பமும் ஆஹா, ஓஹோ ரகமாகத்தான் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் இந்தப் படத்தை முதலிலிருந்து கடைசிவரையிலும் எந்த அளவுக்கு ரிச்சாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகள் அனைத்திலுமே அனல் பறக்கிறது. ட்ரெயினுக்குள் நடைபெறுகின்ற கடைசி சண்டை காட்சி அட்டகாசம் என்று சொல்லலாம். சில காட்சிகளை வெளிநாடு சென்று படம் ஆக்கி இருக்கிறார்கள். அந்த ஒரு கட்சிக்காக வெளிநாடா என்று நாம் ஜெர்க் ஆனால், சரவணா ஸ்டோர்ஸ் லோகோவை பார்த்துவிட்டு நாம் அமைதி ஆகிவிட வேண்டியதுதான்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். இதையும் தாண்டி பின்னணி இசையில் மனிதர் அடித்து அடி இருக்கிறார். திரைக்கதையின் வேக வேகமான ஓட்டத்துக்கு துணை நிற்கிறது பின்னணி இசை. ஆக்சன் காட்சிகளில் அதிகம் காதுகளை சேதப்படுத்தாத வண்ணம் அமைத்திருக்கிறார் ஜிப்ரான்.

இடைவேளைக்குப் பின்பு ஒன் டே மேட்ச் என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையில் மாற்றம் இருப்பதால் அதையெல்லாம் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் அழகாக படத் தொகுப்பினை செய்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரதீப் .

இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் எந்த ஒரு காட்சியும் மூன்று நிமிடத்திற்கு மேல் இல்லை என்பதுதான். அடுத்தடுத்த காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டே செல்வதால் படம் பரபரப்பாக தீயாகப் பறக்கிறது. இதற்கு பெரும் உதவி செய்திருக்கும் படத் தொகுப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

ஒரு பக்கம் இது ஆக்சன் படமாக காட்டப்பட்டு இருந்தாலும் இடையில் அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகளையும்… மனைவியை தன் கையாலே சுட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் சிக்கும் கணவனின் நிலைமையை காட்டும் காட்சிகளையும் நம் மனதை தொடும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குநர். இதனாலேயே இந்த படத்தின் திரைக்கதை நமக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.

அண்ணாச்சியின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் கொஞ்சம் சஸ்பென்ஸ் இருப்பதாக சொல்லி கொஞ்சம், கொஞ்சமாக அதை உடைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் துரை.செந்தில்குமார். இதனாலையே இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமாக வெளிவந்திருக்கிறது.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு வெற்றிகரமான கமர்சியல் திரைப்படம்தான். ஒரு படத்துக்கு போகணும். கடைசிவரைக்கும் ஜாலியா பார்க்கணும் என்ற நினைப்பில் இருந்தால் நிச்சயமாக நீங்கள் போக வேண்டிய இடம் இந்த படம் ஓடும் தியேட்டர்தான்.

இந்த லீடர்’ நிச்சயமாக அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

RATING – 4 / 5

Our Score