full screen background image

ட்ரெண்டிங் – சினிமா விமர்சனம்

ட்ரெண்டிங் – சினிமா விமர்சனம்

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வார்த்தை ட்ரெண்டிங். மார்க்கெட்டிங் தத்துவத்தின் கடவுளாகவே டிரெண்டிங் என்ற சொல் கருதப்படுகிறது.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் இப்போது வீட்டு கிச்சன்வரைக்கும் பரவி விட்டதால் இன்றைக்கு ஏதாவது ஒன்றை செய்து பிரபலமாக வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைவருமே இந்த ட்ரெண்டிங் மோகத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். அப்படி ஒரு ட்ரெண்டிங் என்ற பேராசையில் சிக்கி சின்னா பின்னமாகும் ஒரு காதல் தம்பதிகளின் கதைதான் இந்த ட்ரெண்டிங் திரைப்படம்.

அர்ஜுன். மீரா என்ற தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான தம்பதிகள். தினமும் தங்களைப் பற்றிய வீடியோக்களை அப்லோடு செய்து கொண்டே இருப்பார்கள். 5 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் இருப்பதால் நிறைய பணமும் வந்து கொட்டுகிறது. இந்தப் பணம் நிரந்தரமாக தொடர்ந்து வரும் என்று நினைத்து மிகப் பெரிய அளவுக்கு கடன் வாங்கி ஒரு அழகான வீட்டையும் வாங்கிவிட்டார்கள். தங்களுடைய வாழ்க்கையையும் ஒரு லக்சரி லைஃபாகவும் மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இந்த நேரத்தில் திடீரென்று ஒரு நாள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கப்பட்டு விடுகிறது. இவை சற்றும் எதிர்பாராத தம்பதிகள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதிலிருந்து கிடைக்கின்ற பணத்தை வைத்துதான் மாதா, மாதம் அவர்கள் வாழ்ந்து வருவதால் உடனடியாக இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள்.

புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்தாலும் அது முன்பு போல மிக வேகமாக பாலோயர்ஸை கொண்டு வரவில்லை என்பதால் கொஞ்சம் துவண்டு  போகிறார்கள்.

தொடர்ந்து வீடு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்பதால் சில ரவுடிகள் வீடு தேடி வந்து மிரட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

 

இந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு அனாமதேய அழைப்பில் இருந்து அழைக்கும் ஒரு குரல் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவதாக சொல்லி ஒரு கேம் விளையாடுவதற்காக அழைக்கிறார்கள்.

முதலில் சின்ன, சின்ன கேம்களை கொடுத்துவிட்டு லட்சக்கணக்கில் பணத்தையும் கொடுக்க கணவன் மனைவி இருவருமே திகைத்துப் போகிறார்கள்.

இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி பணம் சம்பாதிப்பதுதான். அந்த பணத்தையும் உடனுக்குடன் மிகப் பெரிய அளவுக்கு சம்பாதிப்பது என்றால் இந்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதால் இந்த விளையாட்டில் இறங்குகிறார்கள்.

முதலில் சின்ன சின்ன விளையாட்டாக துவங்கும் இந்த கேம் பின்பு அவர்களது உள்ளத்தை, மன வலிமையை அடித்து போடுகிறது. தம்பதியர்களின் ஒற்றுமையை சிதைக்கிறது. அவர்களிடையே கருத்து வேறுபாட்டை ஊக்குவிக்கிறது. ஒருவருக்கொருவர் பொய் சொல்ல வைக்கிறது. திருட வைக்கிறது. ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ள வைக்கிறது இப்படி அந்த தம்பதிகள் ஒருவரை கொலை செய்யும் அளவுக்கான ஒரு பிரச்சனையை அந்த கேம் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வேண்டுமென்றால் அந்த கேமில் இருந்து மீள வேண்டும் என்று நினைத்து அதில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுக்கும் தருணத்தில் ஹீரோவின் அண்ணன் அருண் அந்த வீட்டுக்கு உதவி கேட்டு வருகிறார்

அவருடைய குழந்தை மிகவும் சீரியஸ் ஆக மருத்துவமனையில் இருப்பதால், மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவை. தன்னிடம் பணம் இல்லை என்பதால் வைர நெக்லஸை கொடுத்து பணத்தை எங்காவது புரட்டி தரும்படி கேட்கிறார்.

இந்த நேரத்தில் அவரை வைத்தும் அந்த கேம் துவங்க… அவரை வெளியில் அனுப்ப முடியாமல் தவிக்கிறார்கள் கணவனும் மனைவியும். இதைத் தொடர்ந்து அந்த மூன்று பேருக்குள்ளவும் நடத்தும் ஒரு முக்கோணமான போட்டிதான் இந்த திரைப்படம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியை பார்த்தவுடன் இருக்கிறார்கள் பார்த்து கண்டித்தவர்களும் இருக்கிறார்கள்’ ரசித்தவர்களும் இருக்கிறார்கள்’ பார்க்கவே கூடாது என்று நினைத்தவர்களும் இருக்கிறார்கள்.

இதில் பார்க்கவே கூடாது என்று நினைத்தவர்கள் சொல்லுகின்ற முதல் வார்த்தையே இது மனிதர்களிடையே கோபம் பொறாமை ஆத்திரம் இவற்றை உண்டாக்குகிறது இது மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருப்பதே நம் மனதுக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.

அதேபோலத்தான் இந்தப் படத்தில் இந்தப் போட்டியை நடத்தும் பிக்பாஸ் என்ற அந்த முகமூடி மனிதன் மன உளவியல் முறையில் ஒருவரை அழிக்கும்விதமான போட்டிகளையே நடத்துகிறார்.

இப்படி ஒரு வித்தியாசமான கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள் என்றாலும் இந்த படம் நிச்சயமாக விஜய் தொலைக்காட்சியில் கட்டப்படும் பிக் பாஸை போலவே தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும் என்பதால் கண்டிக்கவும் செய்கிறோம்.

ஹீரோவாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது ஒரு வித்தியாசமான ஒரு வேடம். எதற்கும் கவலைப்படாத ஒரு கதாபாத்திரம்.

“மிகப் பிரபலமாக தங்கள் இருக்கிறோம். என்பதால் நிறைய பணம் கிடைக்கிறது என்பதால் வாழ்க்கை சொகுசாக அனுபவிக்க வேண்டும்…” என்று நினைக்கும் அந்த மனம்தான் இறுதியில் அவர்கள் செய்கின்ற அனைத்து தவறுகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.

மனைவி மீதான அந்த காதலை அவர் பாடல் காட்சிகளில் வெளிப்படுத்துகிறார் அதே சமயம் ஒவ்வொரு சிக்கலாக வந்து கொண்டே இருக்கும்பொழுது மனைவியை சந்தேகப்படும் அளவுக்கு சென்று கடைசியாக அவருக்குள்ளே இருக்கும் ஒரு சைத்தானும் வெளியில் வந்து இறுதிக் காட்சியில் அவருடைய நடிப்பின் மூலமாக இவனுக்கு இது தேவைதானா என்று நம்மையே சொல்ல வைத்திருக்கிறார் கலையரசன்.

டாஸ்க் என்பதை சொல்லாமலேயே சில இடங்களில் நாயகன், நாயகி இருவருமே நடித்திருப்பதால் நமக்கு அது டாஸ்கா அல்லது நிஜமாகவே அவர்கள் சண்டை எடுக்கிறார்களா என்கின்ற ஒரு சந்தேகமும் வருகிறது. அந்த அளவுக்கு தங்களுடைய இருக்கமான நடிப்பினால் நம்மை கவர்ந்து இருக்கிறார்கள் இருவரும்.

நாயகி பிரியாலயா கொள்ளை அழகு. பேரழகி. அவருடைய குளோசப் காட்சிகள் அனைத்திலும் லட்டு மாதிரியாக ஸ்கிரீனில் தெரிகிறார். நடிப்பும் பிரமாதம். பின்னி எடுத்து இருக்கிறார்.

இடைவேளை பிளாக்கில் அவர் இந்த பிரச்சினையிலிருந்து வெளியில் போய்விடலாம் என்று கணவரை வற்புறுத்தி அழைத்து வந்து உள்ளே நிறுத்துகின்ற வகையில் இது டாஸ்க் இல்லை என்றுதான் நாம் நினைத்திருந்தோம். அந்த அளவுக்கு தன்னுடைய தத்துவமாக நடிப்பில் நம்மைப் பெரிதும் கவர்ந்து விட்டார் பிரியாலயா.

அதேபோல் பிரேம்குமாரை அப்யூஸ் செய்வது போல ஒரு காட்சியில் அவர் படுகின்ற அவஸ்தையும், அவமானமும் இந்த அளவுக்கு ஒரு டாஸ்க் எடுத்துக் கொள்ள வேண்டுமா… பணத்தை அளவுக்கு சம்பாதித்துதான் தீர வேண்டுமா என்று நம்முடைய கண்டன பொருளை சேர்த்து சம்பாதித்து இருக்கிறார் பிரியாலயா.

சில காட்சிகளே ஆனாலும் பிரேம்குமார் நம் மனதில் நிற்கிறார். அவருடைய கதாபாத்திரம் அந்த அளவுக்கு மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இறுதிக் காட்சியில் அவர் எடுக்கின்ற அந்த முடிவு அவர் மீதான ஒரு பரிதாபத்தை பெற்று தந்திருக்கிறது.

கந்து வட்டி வசூலிக்க வரும் ரௌடியான பெசண்ட் நகர் ரவி இரண்டு காட்சிகள் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

பிரியலயாவின் அம்மாவாக நடித்தவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நல்லி சில்க் சில் ஒரு புடவைக்கு நாலு புடவை ஃப்ரீ என்றவுடன் அவசர அவசரமாக பதற்றத்துடன் தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்யும் அந்த கட்சியில் தமிழகத்துப் பெண்களின் மன நிலையையும் இயக்குநர் அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவு தரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மிக அழகான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒரு வீடு மட்டுமே படம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ஒவ்வொரு கட்சியிலும் கேமரா கோணத்தை மாற்றி மாற்றி வைத்து அந்த வீட்டை பல்வேறுவிதமான கோணங்களில் அழகுபட காண்பித்து இருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட படத்தின் நாயகி பிரியாலயாவை பல்வேறு கோணங்களில் அழகாக ஸ்கிரீனில் கொண்டு வந்து கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நம்முடைய பாராட்டு.

சாமின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசை அபாரம். வழக்கம்போல பின்னணி இசை மூலமாகவே படத்தை நமக்குள் கடத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர்.

ஒரு கேம் ஷோவை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொண்டிருப்பதுதான் படத்தின் கதை என்றாலும் அதில் இருக்கின்ற எமோஷன் செய்யும் நமக்குள் கடத்துகின்ற வகையில் படத்தை கச்சிதமாக நறுக்கித் தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

ட்ரெண்டிங் என்கின்ற அந்த ஒரு வார்த்தைக்கு அடிமையாகவே இருக்கும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை சொல்லிக் காட்டுவது போல இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் முடிவும் படத்தின் பெரும்பாலான காட்சிகளும் மோசமான டாஸ்க்குகளை அடிப்படையாக வைத்து நகர்த்தி இருப்பதால், இரண்டு கொள்ளைகளில் எந்த கொள்ளை நல்லது என்று நம்மை நாமே கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம்.

இது மாதிரியான கேம் ஷோக்கள் குடும்பத்தை சீரழிக்கும். தம்பதிகளை பிரிக்கும். கணவன் மனைவிக்கு சண்டையே ஏற்படுத்தும். எல்லாவற்றையும்விட மனிதர்களிடையே கசப்பு உணர்வை ஒன்று செய்யும் என்பதை உணர்த்துகின்ற வகையில் கிளைமாக்ஸ்சை முடித்திருக்க வேண்டும். ஆனால் இதுவும் ஒரு கேம் ஷோதான் என்பது போல படத்தை முடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

பணம், பணம் என்று அழகும் இன்றைய இளைய சமூகத்தினர் எப்பாடுபட்டது எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த எண்ணமே தவறு என்பதை திரைப்படம் சுட்டிக்காட்டவே இல்லை என்பது வருத்தமான விஷயம்.

நேர்மையான வழியில் அழகான முறையில் நல்லவிதமாக பணத்தை சம்பாதித்தால் அந்த பணம் என்றும் நம் கூடவே இருக்கும். ஆனால், குறுக்கு வழியில் சம்பாதித்தால் பணம் வந்த வேகத்தில் சென்று விடும். இது உலக நியதி. இதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படித்தான் இயக்குநரும் இதில் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ இதை கேம் ஷோவாக மாற்றி அவருக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த படம் எப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல படத்தை எடுத்துக் காட்டி இருக்கிறார்.

இதன் மூலமாக நாமும் ஒரு விழிப்புணர்வை பெறலாம். இது மாதிரியான கேம் ஷோக்கள் நிச்சயமாக குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் என்பதால் “பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதையே தவிர்த்து விடல் நன்று” என்று இந்தப் படத்தின் மூலமாக சொல்லி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் இந்தப் படத்தை பாருங்கள்… ஆனால் பின்பற்றாதீர்கள்… என்பதுதான் இந்த படத்தின் இயக்குநர் மறைமுகமாக நமக்கு சொல்லி இருக்கும் செய்தி.

RATING : 3 / 5

   

 

Our Score