தாய் மாமன் உறவை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘மாமன்‘ திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகள் மிக மிக முக்கியம். எப்போதும் குடும்ப உறவுகளை முன்னிறுத்தியே தமிழர்களின் வாழ்வியல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்ப உறவுகளில் மிக, மிக முக்கியமானது ‘தாய் மாமன்’ என்கின்ற கதாபாத்திரம். இந்த தாய் மாமன்தான் ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் அவர்களுடைய பிறப்பிலிருந்து இறப்புவரையிலும், சுகத் துக்கங்களிலும் முன் நின்று அடையாளப்படுத்தும் ஒரு ஜீவன்.
இந்த தாய் மாமன் கதாபாத்திரத்தை முன் வைத்து ‘கிழக்குச் சீமையிலே’ என்ற ஒரு திரைப்படம் முன்பு வெளிவந்து சக்கைப் போடுபோட்டது. அது அண்ணன், தங்கை என்ற உறவையும் மையப்படுத்தி வந்திருந்தது.
ஆனால், இப்போது வந்திருக்கும் இந்த ‘மாமன்’ திரைப்படம் ‘தாய் மாமன்’ என்கின்ற ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே முன் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அப்பாவை இழந்து தன்னுடைய அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருபவர் சூரி.
அவருடைய அக்காவான சுவாசிகாவுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் இதுவரையிலும் குழந்தை இல்லை. இந்த குழந்தையின்மையை சுட்டிக் காட்டி சுவாசிகாவின் புகுந்த வீட்டினர் அவரை பல முறை பலவாறு அவமானப்படுத்துகிறார்கள். அந்த அவமானத்தை எல்லாம் அக்காவுடன் சேர்ந்து தம்பியும் அனுபவிக்கிறான்.
இந்த நேரத்தில் திடீரென்று சுவாசிகாவுக்கு கரு உருவாக தன்னுடைய அக்காவை தலைமேல் வைத்து தங்குகிறார் தம்பி சூரி. குழந்தையும் பிறக்கிறது. பிறந்த மருமகனை தன்னுடைய மகன் போல பாவித்து உடனிருந்து வளர்க்கிறார் மாமன் சூரி.
இந்த நேரத்தில் அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மருத்துவர் ஐஸ்வர்யா லட்சுமி, சூரியின் மீது காதல் கொள்கிறார். படிக்காத பண்ணையாரான சூரிக்கு படித்த மருத்துவரின் நட்பும், காதலும் கிடைத்து அதுவும் கல்யாணத்தில் முடிகிறது. இதன் பின்புதான் கதையே ஆரம்பிக்கிறது.
முதலிரவில்கூட தன்னுடைய மாமனை விட்டு பிரிய அந்த சிறுவன் மறுக்கிறான். இதனால் முதல் இரவு தோல்வியில் முடிய ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரும் ஏமாற்றம். அடுத்த நாள், அதுக்கு அடுத்த நாள் என்ற வரிசையாக ஒவ்வொரு நாளும் அந்தப் பையனின் இருப்பு ஐஸ்வர்யா லட்சுமிக்கு இம்சையை கொடுக்கிறது.
அந்தப் பையனுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டால் ஒழிய கணவன் தன்னிடம் நெருங்க மாட்டான் என்று நினைத்து ஐஸ்வர்யா லட்சுமி, சூரியிடம் சண்டையிட அது அவர்களுடைய பெரும் பிளவை ஏற்படுத்தி இருவரையும் தனித்தனியாக்குகிறது.
இதன் பின்பு என்ன ஆனது?.. அந்தக் குடும்பம் இணைந்ததா?.. இல்லையா?.. சூரி, ஐஸ்வர்யா லட்சுமி இணைந்தார்களா..? என்பதுதான் இந்த ‘மாமன்’ படத்தின் சுவையான திரைக்கதை.
சூரிக்கு மிக மிகப் பொருத்தமான பக்காவான கதாப்பாத்திரம். ஒரு கிராமத்து வெள்ளந்தியான மனிதர். தன்னைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தன் குடும்பம், தன் அக்கா, தன் அக்கா மகன், தன் அத்தான் என்று தன்னுடைய குடும்பத்தை மட்டுமே நினைத்து வாழும் ஒரு சராசரியான எளிய மனிதன்.
இந்தக் கதாபாத்திரத்தை செய்வதற்கு சூரிக்கு நூறு சதவிகிதம் உரிமை உண்டு. அந்த உரிமையில் கடைசி வரையில் தன்னுடைய மிகச் சிறப்பான ஒரு நடிப்பை, இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார் சூரி.
அக்கா மகனின் பாசத்தில் கட்டுண்டு சிக்கித் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் காட்டும் அந்த நடிப்பு நவரசம். நிச்சயம் அவர் வேறு எந்த படத்திலும் காட்டாதது.
ஐஸ்வர்யா லட்சுமி போன்ற மிகப் பெரிய ஹீரோயின்களுடன் தயக்கமில்லாமல் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்து அந்தப் பக்கமும் பல பெரிய நடிகர்களின் வயிற்றில் பொறாமை தீயை எரிய வைத்திருக்கிறார் சூரி.
ஒரு பக்கம் இல்வாழ்க்கையில் ஈடுபட நினைத்து ஏங்கி தவிக்கும் மனைவி.. இன்னொரு பக்கம் தன்னுடைய மாமன் என்ற உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் சின்ன பையனின் பிடிவாதம், தன்னுடைய குழந்தையின் வளர்ச்சியும், அவனுடைய ஆரோக்கியம்தான் முக்கியம் என்று நினைத்து அப்பா போல என்ற எண்ணிய தம்பியை செத்து விட்டான் என்று சொல்லி வைக்கும் அக்கா… இந்த முக்கோண பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஒரு அபலையான, பரிதாபமான அம்மா கீதா கைலாசம் என்று அந்த வீட்டுக்குள் நடக்கின்ற அந்த பாசப் போராட்டம் பல இடங்களில் நம்மை கண் கலங்க வைக்கிறது.
இறுதிக் காட்சியில் தன்னுடைய ஈகோவை எல்லாம் விட்டுவிட்டு தன்னுடைய பிள்ளைகளை பார்ப்பதற்காக ஐஸ்வர்யாவின் அறைக்குள் நுழைந்து தட்டுத் தடுமாறி பேச்சு வராமல் தவித்து தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் அந்தக் காட்சியில் சூரி நம்மை நெகிழ வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண் மகனும் தன் வாழ்க்கையில் உணர வேண்டிய ஒரு உண்மையை அந்தக் கட்சியில் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
சிறந்த நடிகைகளுக்கான விருதுக்கான போட்டியில் இந்தப் படத்தில் இடம் பெற்ற மூன்று பெண் கதாபாத்திரங்களும் சரி சமமாக நடித்துக் காண்பித்து போட்டியிட்டு இருக்கிறார்கள்.
அக்காவாக நடித்த சுவாசிகா தன்னுடைய ஒவ்வொரு முகபாவனையிலும் அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
குழந்தை இல்லை என்று தன்னை கேலி செய்பவர்களை நினைத்து தம்பியிடமும் குமுறும் காட்சியில் ஐயோ பாவம் என்று சொல்ல வைத்துவிட்டார்.
தன் மகனுக்கும், தம்பிக்கும் இடையிலான பாசத்தை நிறுத்துவதற்காக அவன் இறந்துவிட்டான் என்று மகனிடம் பொய் சொல்லிவிட்டு, அதற்காக தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் காட்சிகயில் பின்னி பெடலெடுத்து விட்டார் என்றே சொல்லலாம்.
இறுதியில் இவரும் தன் தம்பிக்காக கீழே இறங்கி வந்து “காலில்கூட விழுகிறேன்” என்று ஐஸ்வர்யா லட்சுமியின் குடும்பத்தாரிடம் சொல்லுகின்ற பொழுது இப்படி ஒரு அக்கா நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கவும் வைத்துவிட்டார்.
அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் அந்த வீட்டுக்குள் பூஜை அறையில் நடக்கும் அந்த காட்சியில் நம்மை பெரிதும் கண் கலங்க வைத்து விட்டார். தன் மகனுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து படும் அவஸ்தையும் தன் மகளை கேள்வி கேட்கும் அந்த கோபமும், ஆத்திரமும், இயலாமையும் அவருடைய முகத்திலும், வலியிலும், அழுகையிலும் பொங்கிவரும் பொழுது நிச்சயம் கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அக்காவையே இவ்வளவு பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் சூரி மனைவியை எப்படி எல்லாம் பார்த்துக் கொள்வார் என்ற ஒரு நினைப்பில் தன்னுடைய படிப்பு, தன்னுடைய உத்தியோகத்தையெல்லாம் மறந்துபோய் சூரியைக் காதலித்து திருமணம் செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி அதற்கு பின்னான காட்சிகளில் தன்னுடைய வாழ்க்கை தான் நினைத்தது போல நடக்கவில்லை என்ற வருத்தத்தில் அவர் குமுறுகின்ற குமுறலெல்லாம் இந்தக் கால இளைஞிகளின் வாழ்க்கையில் நடப்பதுதான்.
ஆஸ்பத்திரி சீனில் பொங்கி வந்த கோபத்துடன் சூரியின் சட்டையைப் பிடித்து ஐஸ்வர்யா கேட்கின்ற ஒவ்வொரு கேள்வியும் நியாயமான ஒரு கேள்வி. ஆனால் இதற்கெல்லாம் பதிலை சூரி அப்பொழுதே சொல்லி இருக்கலாம்.
ஆனால், இது திரைப்படம் என்பதால் கொஞ்சம் விட்டுவிட்டுத்தான் அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், இயக்குநர் கொஞ்சம் திரைக்கதையை கடைசிவரையில் இழுத்து விட்டதால் நாம் இதை கொஞ்சம் ஓவர் டோஸ் என்றுதான் ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மருத்துவராக இருந்தும் தன் வீட்டு பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவிக்கும் அந்த ஐஸ்வர்யா லட்சுமியின் குமுறல் படம் முடிந்து வெளியில் வரும் பொழுது நம் கண்ணில் நிழலாடுகிறது. கங்கிராட்ஸ் மேடம்.
இந்தப் படத்தில் கணவன் – மனைவி பந்தம், தாம்பத்திய வாழ்க்கை, அவர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒரு உண்மைத்தனம். பாசம், நேசம், நெகிழ்ச்சி இதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக 40 வருடங்கள் இணைந்து வாழ்ந்திருக்கும் ஒரு தம்பதியினராக விஜி சந்திரசேகரனும், ராஜ்கிரனும் நம் மனக் கண்ணில் அப்படியே வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
ராஜ்கிரனும் விஜியும் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டே இருப்பதும், எதிர்த்து எதிர்த்து பேசிக் கொண்டே இருப்பதும், எல்லா வீட்டிலும் பார்க்கின்ற செயல்கள் என்றாலும் அதுதான் அவர்களிடையே இருக்கும் அன்னியோன்யம், பாசத்தின் வெளிப்பாடு என்பதை இயக்குநர் கடைசியாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
விஜியின் மரணத்தின்போது ராஜ்கிரணின் சமாளிப்பு, “விஜிக்கு ஒன்றுமே இல்லை” என்று சொல்லி அவர் செய்யும் புலம்பல்கள், எண்ணெய் வைக்கும்போது அவர் கதறும் கதறல் அனைத்துமே அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் கதற வைத்து விட்டது.
மேலும் படத்தில் நடித்த பால சரவணன், சூரியின் மைத்துனராக நடித்த பாபா பாஸ்கர், சுவாசிகாவின் மகனாக நடித்த சிறுவன், ஐஸ்வர்யாவின் அப்பாவாக நடித்த ஜெயப்பிரகாஷ் மற்றும் பலரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்; நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த சிறுவனின் அட்டூழியத்தை பார்க்கும்போது நமக்கே நாலு அப்பு அப்பலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அப்படி செய்து பழகாத ஒரு தாய் மாமன் அருகில் இருக்கும்பொழுது நம்மால் அதைச் செய்ய முடியாது. பாசத்துக்கும் ஒரு அளவுகோல் உண்டு என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் கொஞ்சம் வசனத்தின் மூலமாகவும் சொல்லியிருக்க வேண்டும். அதை சொல்லாமல் விட்டுவிட்டது அவருடைய தவறு.
படத்தில் ஒளிப்பதிவு என்று ஒன்று இருப்பதே நமக்கு தோணவே இல்லை. அந்த அளவுக்கு படத்தின் கதையும், திரைக்கதையும், வசனமும் நடிப்பும் நம்மை உள்ளே இழுத்துக் கொண்டது.
ஆனாலும் படத்தின் பல உயிர்ப்பான காட்சிகளில் கேமராவின் கோணங்கள் மூலமாக நடிகர், நடிகைகளின் நடிப்பு நமக்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவு திறமையை நாம் வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும்.
‘மாமன்’ என்ற பாடல் மனதை தொட்டுவிட்டது. மற்றபடி பாடல்கள் அனைத்தும் ஒலித்திருக்கின்றன. மாண்டேஜ் காட்சிகளாகவே அந்தக் காட்சிகளை நகர்த்தி இருப்பதால் நமக்கு காட்சிகள் மட்டுமே நம் மனதில் நிலைத்துள்ளது. பாடல்கள் நம் காதுகளில் நுழைந்து வெளியேறியது நமக்கே தெரியவில்லை.
படத் தொகுப்பாளர் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு தன்னிடம் கொடுக்கப்பட்ட காட்சிகளை இன்னமும் ரசிக்கும் வகையில் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம்.
அதுவும் இடைவேளைக்கு பின்பு வருகின்ற அந்த காட்சிகளில் கொஞ்சம் நீளமாகவும் கொஞ்சம் போர் அடிக்கும் வகையில் வருவதும் நமக்கு சற்று அயர்ச்சியைத் தருகிறது.
விஜியின் மரணமும், அதற்கடுத்து தொடர்ந்து ராஜ்கிரனின் மரணமும், அதற்கு அடுத்த காட்சியிலேயே சூரியின் குழந்தை பிறக்கும் காட்சியை வைத்திருப்பதால் படத்தை அவசரமாக முடிக்க வேண்டியவிதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வேறு காட்சிகளை வைத்துவிட்டு, இந்தக் காட்சிகளை தொடர்ந்து இருக்கலாம். ஆனால் மூன்று முக்கியமான நிகழ்வுகளையும் வரிசையாக வைத்துவிட்டதால் அனைத்தையும் ஒரு சில நிமிட இடைவெளியில் நாம் ஜீரணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டோம். இயக்குநரும், படத் தொகுப்பாளரும் இதை மட்டும் கொஞ்சம் மனம் வைத்து மாற்றி அமைத்திருக்கலாம்.
குழந்தைகள் மீதான பாசம் என்பதுதான் இந்த படத்தின் அடிநாதம். ஆனால், அந்த பாசமும் ஒரு அளவுதான். எல்லாவற்றுக்கும் ஒரு அளவுகோல் உண்டு. பெற்ற மகனாக இருந்தாலும் சரி.. அக்காள் மகன்.. அண்ணன் மகனாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களின் சுதந்திரத்திற்கும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். மனைவியையும் கவனிக்க வேண்டும். தன்னை நம்பி வந்த மனைவிக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இந்த உணர்வு எல்லா ஆண்களுக்கும் இருக்க வேண்டும். எல்லா தாய் மாமன்களுக்கும் இருக்க வேண்டும்.
அக்கா மகன் மீது காட்டும் அந்த அதீத பாசத்தை தன் மனைவியின் மீதும் கொஞ்சம் பாதி அளவாவது சூரி காட்டியிருக்க வேண்டும். அதை ஏன் காட்டவில்லை என்பதைத்தான் சுற்றி சுற்றி ஜிலேபி சுடுவதுபோல பல்வேறு வசனங்களின் மூலமாக ஐஸ்வர்யா லட்சுமி கேட்கிறார். அதை வெளிப்படையாகவே கேட்டிருக்கலாம்.
ஆனால், அப்படி கேட்டு இருந்தால் இந்தப் படம் அரை மணி நேரத்தில் முடிந்திருக்கும். ஆனால் இரண்டரை மணி நேரம் இழுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அது யாருக்கு புரியுதோ.. புரியவில்லையோ என்பதுபோல கதையை இழுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.
என்னதான் குழந்தையை சமாதானப்படுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதற்காக தம்பியையே செத்துப் போய்விட்டான் என்ற பொய் சொல்லி அவர் போட்டோவுக்கு மாலை போட்டு வைத்திருப்பதெல்லாம் ரொம்பவே ஓவரான, டூ மச்சான திரைக்கதை இயக்குநரே..! நிச்சயம் இது ஏற்பதற்கில்லை.
இந்த இடத்திலேயே அந்த அக்கா என்கின்ற அந்த கேரக்டர் அடிபட்டு போய்விட்டது. எந்த அக்காவும் இதை செய்ய மாட்டார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு மாற்று வழி நிச்சயமாக உண்டு.
ஆனால் ஓவர் டோஸாக, ஓவர் செண்டிமெண்டாக… அம்மாவும் மகளும் சண்டையிட வேண்டும் என்பதற்காகவே வலிந்து திணிக்கப்பட்ட திரைக்கதையாகவே அது அமைந்திருக்கிறது.
தாய் மாமன்களின் உறவு ஒவ்வொரு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் கடைசிவரையிலும் உடன் வருவது. சுக நிகழ்ச்சிகளில் முதல் மாலை தாய் மாமன் போடுவதுதான். அதேபோல் துக்க நிகழ்ச்சிகளில் மாலையும், இரவும் உடையும் தாய் மாமன் வீட்டிலிருந்துதான் முதலில் வர வேண்டும். அது நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப் போன விஷயம்.
அந்த மாலை அணிவித்தலும், மாலை போடுதலும் இரண்டு மட்டுமே ஒரு சடங்காக இருக்காமல் காலம் முழுவதும் தாய் மாமன்கள் தங்களால் முடிந்த உதவியை தங்களது உடன் பிறந்தாரின் மகள்களுக்கும், மகன்களுக்கும் செய்வது என்பது கடமை.
இதனை நம்முடைய கலாச்சாரத்தில், சமூகத்தில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியமாக நாம் செய்து வருகிறோம். அதை இந்தப் படத்தில் இயக்குநர் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.
ஆனால், இதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வசனத்தில் வெளிப்படையாக சொல்லி இருக்கவேண்டும். அதை சொல்லாமல் விட்டுவிட்டு கண்மூடித்தனமான பாசத்தை காட்டுவது என்பதில் மட்டும் இயக்குநர் பாதி ஜெயித்திருக்கிறார். பாதி தோல்வி அடைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் ஒட்டு மொத்தமாய் பார்க்க போனால் இத்திரைப்படம் தமிழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அனைவரும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்தப் படத்தை கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும்.
இதைப் பார்க்கின்ற பொழுதுதான் ஒவ்வொருவருக்கும் தாய் மாமனின் கடமை என்ன?.. அக்கா, தம்பியின் கடமை என்ன?.. அம்மாவின் கடமை என்ன?.. என்பதும் குடும்பத்தில் பாசத்தின் கடமை என்ன என்பது தெரியும். அது தெரிந்தால், அனைவரும் அதை உணர்ந்தால்… ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக இருந்தால்.. ஒரு ஊரும் சிறப்பாக இருக்கும். ஊர் சிறப்பாக இருந்தால் ஒரு சமூகமே சிறப்பாக இருக்கும்.
அதை இந்த ‘மாமன்’ படத்தின் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.
இந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
RATING : 4 / 5









