இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – இளையராஜா கலியபெருமாள், ஒளிப்பதிவாளர் – ஜெய் கார்த்திக், இசையமைப்பாளர் – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – சச்சின்(ஒத்திசைவு சினிமாஸ்), ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – பாரதிராஜா, புகைப்படங்கள் – ராஜ், விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
ஒரு நாள் இரவில் 10 மணி நேரத்தில் உள்ளாக நடைபெறும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் கதைதான் இத்திரைப்படம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் கேஸ்ட்ரோ என்ற சிபிராஜ் அவர் நாளை காலையில் சபரிமலைக்கு சாமி கும்பிட செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டதாக ஒரு புகார் வருகிறது. அந்த புகாரை விசாரிப்பதற்காக செல்கிறார் சிபிராஜ். அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று ஒரு ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை யாரோ சிலர் கொடுமைப்படுத்துவதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் வருகிறது.
அந்தத் தகவலையும் எடுத்துக்கொண்டு ஆம்னி பேருந்தை சோதனை செய்யும்பொழுது அதில் பயணம் செய்த ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அதனால் அந்தப் பேருந்தை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து அதில் பயணித்த அனைவரையுமே விசாரணை என்ற பெயரில் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் காணாமல் போன பெண்ணும் கிடைக்காமல் இருக்க அந்த விசாரணையும் இன்னொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த இரண்டு சம்பவங்களுக்கு மாற்றாக இன்னொரு இளம் பெண் கொடூரமாக சீரழிக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்படுகிறார்.
இப்போது இந்த பிரச்சனையும் புதிதாக வந்து நிற்க சிபிராஜூவுக்கு அந்த இரவிலேயே கண்ணைக் கட்டுகிறது. முடிவில் என்ன நடக்கிறது? ஆம்னி பேருந்தில் பயணம் செய்தவனை கொலை செய்தது யார்? மீட்கப்பட்ட பெண் யார்? காணாமல் போன பெண் கிடைத்துவிட்டாரா?.. என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
சிபிராஜுக்கு மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரம் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது.
கடமை தவறாத போலீஸ் இன்ஸ்பெக்டராக. எவ்வளவு சொந்த வேலையிருந்தாலும் கடமைதான் முக்கியம் என்ற கடமையுணர்வு கொண்டவராக அவரைர் காட்டி இருப்பதால் அவர் திரைக்கதைக்குள் காட்டுகின்ற வேகமும், நடிப்பில் காட்டுகின்ற வித்தியாசமும் ரசிக்கும்படியாகவே உள்ளது.
ஆனாலும் இதுவொரு ஹீரோயிஸ திரைப்படம் என்பதால் அவ்வப்பொழுது தனி நபராகவே எதிரிகளிடம் போய் சிக்கிக் கொண்டு அவர்களுக்காகவே அங்கு சண்டை போட்டுவிட்டு தப்பிப்பதெல்லாம் படத்திற்கு கொஞ்சம் பேக் டிராப்பாக அமைந்துள்ளது.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஜீவா ரவி, தங்கதுரை, வில்லனாக நடித்திருக்கும் திலீபன், சப்–இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ் என்று அத்தனை பேருமே ஆளுக்கு ஒரு பக்கமாக தங்களுடைய இருப்பை நிலைநாட்டு வகையில் நடித்திருக்கிறார்கள்.
அதிலும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் சரக்கு அடித்துவிட்ட நிலையிலே போலீசிடம் அசால்டாக பேசும் காட்சிகள் எல்லாம் கவனிக்க வைத்திருக்கிறார்.
காதலனாக வந்து ரொம்ப நல்லவனாக இருப்பதாலேயே உயிரை விடும் ராஜா ஐயப்பா தன்னால் முடித்த நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
வில்லனுக்கு கொடுத்த பில்டப்பிற்கு ஏற்ற நடிப்பை திலீபன் கொடுக்கவில்லை. அதோடு அந்த வில்லத்தனத்திற்கேற்ற கெத்து அவரிடத்தில் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.
ஒரே இரவில் நடக்கின்ற கதை. அதுவும் படத்தின் முக்கால்வாசி சாலை பயணத்திலேயே நடக்கிறது. பேருந்துகளில் நடக்கிறது. கார்களிலேயே நடக்கிறது. இப்படி போக்குவரத்துகளிலேயே படத்தை நகர்த்தி இருப்பதால் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆம்னி பேருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை கொஞ்சம் பரபரப்பாக படமாக்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் நமது பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை போகப்போக ஒரே மாதிரியான இசையை கொடுத்து ஒரு சலிப்பை தந்து விட்டது.
படத்தின் பல காட்சிகள் சஸ்பென்ஸ், திரில்லராக வந்திருப்பதால் அதற்கேற்ற வகையில் காட்சிகளை நறுக்கி தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர். ஆனால், இன்னமும் கொஞ்சம் கச்சிதமாக நறுக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
படத்தில் ஹீரோயின் என்று யாரும் இல்லை. டூயட் பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் படத்தை ஒரே நேர்கோட்டில் முதல் காட்சியிலிருந்து கடைசிவரையில் கொண்டு வந்து முடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்கான படம்தான்.
போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படித்தான் இருக்கும். போலீஸ் விசாரணை என்றாலே இப்படித்தான் இருக்கும். தேர்ட் டிகிரி என்பது போலீசாரின் விசாரணையில் ஒரு அங்கம் என்று மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்வதுபோல இந்தப் படத்தின் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.
துவக்கத்திலிருந்து படத்தை பார்க்கின்ற பொழுது இது ஒரு சைக்கோ திரில்லர் கதையோ என்று நினைக்க வைத்தது. ஆனால் போகப் போக படத்தின் தன்மை மாறி கடைசியாக இது ஒரு அட்டகாசமான புத்தம் புது அரசியல் திரில்லர் கதை என்ற பாணியில் படத்தை முடித்து இருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தின் பாதிப்பினால் அடுத்த தேர்தலின்போது ஏதாவது நடந்து விடுமோ என்கின்ற ஒரு அச்சமும் நமக்குள் ஏற்படுகிறது. அரசியல்வியாதிகள் யாரும் இந்தப் படத்தை பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம்.
RATING : 3 / 5









