full screen background image

மாயோன் – சினிமா விமர்சனம்

மாயோன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரீஷ் பெரடி, பகவதி பெருமாள், மாரிமுத்து உட்பட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இசை, பாடல்கள் – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – ராம்பிரசாத், படத் தொகுப்பு – ராம் பாண்டியன், கொண்டலராவ், கலை இயக்கம் – பாலசுப்ரமணியன், ஒலி கலவை – ராதாகிருஷ்ணன், ஒலி சேர்ப்பு – அருண் எஸ்.மணி, விஷ்ணு, விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன், பத்திரிகை தொடர்பு – யுவராஜ், திரைக்கதை – அருண்மொழி மாணிக்கம், எழுத்து, இயக்கம் – கிஷோர்.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசரும் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

“கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று ‘தசாவதாரம்’ படத்தில் கமல் பேசிய வசனத்திற்கு தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு எங்களது படத்தில் பதில் கிடைத்திருப்பதாக ‘மாயோன்’ படக் குழு தெரிவித்திருந்தது. உண்மையில் அந்தப் பதில் படத்தில் இருந்ததா என்பதை பார்ப்போம்.

புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறிய “இந்த உலகில் எல்லாமே ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அல்லது எதுவுமே ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லை…” என்கிற கூற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் கதை. இதுவே படத்தின் டைட்டிலிலும் காட்டப்படுகிறது.

தை மையமாக வைத்துக்கொண்டுதான் இந்தக் கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் கிஷோர். அந்தக் கதைக்கு நியாயம் சேர்ப்பிக்கும் அளவுக்கான  திரைக்கதையை எழுதி, படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாயோன் மலையில் பள்ளி கொண்ட கிருஷ்ணர் கோயில் உள்ளது. இது புராதன கோவில். மகாபாரத் கதையில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற கோவிலாகும்.

இந்தக் கோவிலின் உள்ளே புதையல் இருப்பதாக பேச்சுவாக்கில் பரவிய பேச்சு தமிழகம் முழுவதும் உள்ளது. அந்தக் கோவிலில் இரவு நேரத்தில் அமானுஷ்ய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதால் யாராவது அந்தக் கோவிலில் இரவு நேரத்தில் இருந்தால் சித்தப் பிரமை பிடித்தாற்போலாகிவிடுவார்கள் என்கிற பேச்சும் ஊர் முழுக்க இருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தக் கோவிலின் புதையல் அறையைக் கண்டுபிடித்து அந்தப் புதையலை அடைய நினைக்கிறார் ஹரிஷ் பெரடி. அவர் தொல்லியல் துறையிலேயே அதிகாரியாக வேலை செய்து வருகிறார். அகில உலக சிலை கடத்தல் கும்பலுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கிறார் இவர்.

இவருக்கு இந்த சிலை கடத்தல் மற்றும் புதையலை தேடியெடுக்கும் பணியில் உதவி செய்ய வருகிறார் நாயகன் சிபிராஜ்.  

ஏற்கெனவே அந்தக் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமார் தலைமை வகிக்கிறார்.

இப்போது இவருக்குக் கீழே வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள்.

அந்த புதையல் அறை எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட டீம் முயற்சி செய்கிறது.

திட்டமிட்டபடி அந்தப் புதையல் அறையை அவர்கள் கண்டறிந்தார்களா.. இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நேர்மையுடன் நடந்து நடித்திருக்கிறார்கள் சிபிராஜும், தான்யாவும்.!

தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிபிராஜ் நடித்திருக்கிறார். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளரான சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர்.

உடலை அலட்டிக் கொள்ளாமல் மூளை பலத்துடனேயே இயங்கும் கேரக்டர் என்பதால் செஸ் விளையாட்டை மனதில் இருத்தியே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை முடிவு செய்யும் திறமைக்காரர்.  இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை கடைசிவரையிலும் சரியாகவே செய்திருக்கிறார் சிபி.

பெரிதாக முனைப்பாக நடிக்க வாய்ப்பில்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் இயக்குநரின் இயக்குதல் திறமையால் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் சிபிராஜ். கடைசி டிவிஸ்ட் எதிர்பாராதது என்றாலும் அதை வெளிப்படுத்தும்விதத்தில், அவரது அப்பாவை கொஞ்சமாக ஞாபகப்படுத்தியிருக்கிறார் சிபிராஜ்.

நாயகியான தான்யா ரவிச்சந்திரனும் ஒரு அதிகாரியாக நடித்திருக்கிறார். குளோஸப் காட்சிகளில் அழகாக மிரட்டியிருக்கிறார் தான்யா. இவருக்கும் சிபிராஜூக்குமான காதல் காட்சிகள் இல்லாதது படத்தில் ஒரு குறைதான். ஒரு டூயட்டாவது வைத்திருந்திருக்கலாம்.

வில்லன் ஹரிஷ் பெராடி வழக்கம்போல தன் பார்வையாலும், வசன உச்சரிப்பாலும் மிரட்டி இருக்கிறார். சிபி ராஜின் கூட்டாளியாக வரும் பகவதி பெருமாள் கண்களை உருட்டி விழித்து பேசுவதற்கு இந்த படத்தில் நிறையவே வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய மெச்சூர்டான அதிகாரி என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ப நடித்திருக்கிறார். கமிஷன் பேசிவிட்டு செல்லும் அமைச்சரிடம் சாத்வீகமாக நடந்து கொண்டு, கூட இருந்தே குழி பறிக்கும் ஹரீஷிடம் விரட்டி வேலை வாங்கும்விதத்திலும் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.

தொல்லியல் துறையின் உயர் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கிருஷ்ணன் கோவிலில் பரம்பரை பாதுகாவலராக வரும் ராதாரவியும் தனது அனுபவ நடிப்பால் எளிதாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பாராட்டுக்குரியவர்கள் மூன்று பேர். ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர்கள்தான்.

ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் பள்ளி கொண்ட பெருமாளை காட்டியிருக்கும்விதமே கை கூப்ப வைக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான சிலையை செய்து கொடுத்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

பழங்காலத்து கோவில்களும், கோவில் சார்ந்த இடங்களும் கம்பீரமாக ஒளிப்பதிவில் புத்தம் புதியதாக காட்சியளிக்கிறது. கோவில் மற்றும் அதனுள்ளே நடக்கும் மர்மமான சம்பவங்களை மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இரவு நேரத்தில் புதையலை தேடியலையும் அந்தக் காட்சிகள் முழுவதும் கேமிராமேனின் ஆதிக்கம்தான். பாம்பு துரத்தும் காட்சிகளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓளிப்பதிவாளர் ஓடினார் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்கு அத்தனை நீளம் தேவையில்லை என்பதும் உண்மைதான்.

கிராபிக்ஸ் காட்சிகள்தான் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இதைவிட சிறப்பாகவும் படமாக்கியிருக்கலாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை மனதில் வைத்து இவ்வளவுதான் செய்ய முடிந்ததுபோலும்..!

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் வசனங்களை நிரப்பியிருக்கிறது. மாயோன்’ பாடலும், பாடல் காட்சியும் மனதில் தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிகிறது.

கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையும், கந்தர்வப் பெண்கள் இசைக்கிற இசையும் நம் காதுகளை தேனமுதமாக வந்தடைகிறது. இசைஞானியின் இந்த இசைக் கோர்வை நிச்சயமாக இனிமேல் கர்நாடக இசை கச்சேரிகளில் நாம் கேட்க வேண்டிய இசை என்றே தோன்றுகிறது..!

படத்தின் முக்கியமான களமான மாயோன்’ மலையின் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் அமைந்திருக்கும் இடமும், அதற்கான புராண விளக்கமும் நம்பும்படியாக எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் அமைந்த மகாபாரத விளக்கம் அருமை.

மேலும் அந்தக் கோவிலில் நடப்பதாகச் சொல்லப்படும் மாய, மந்திர விஷயங்களுக்கெல்லாம் அறிவியல் ரீதியாக கடைசியில் சிபிராஜ் விளக்கம் கொடுப்பதும் திரைப்படமாக ஏற்கக் கூடியதுதான்.!

இயக்குநர் இடைவேளைக்கு பின்பு படத்தை எப்படி முடிப்பது என்பதில் சற்றுத் தடுமாறியிருந்தாலும் சாமர்த்தியமாக கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருக்கிறார். ஆத்திகர்களின் மனம் கோணாமலும், விஞ்ஞானத்தின் உண்மையையும் சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

எதிர்பாராத சில டிவிஸ்ட்டுகள் மூலமாக கடைசிவரையிலும் ஒரு திரில்லிங் அனுபவத்தோடு படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

நம் பழங்காலத்து கோவில்களின் பின்னணியையும், அதன் பெருமைகள் மற்றும் அதில் இருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் அதை பாதுகாக்கும் வழிகளை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

மாயோன் – அறிவியலையும் மீறிய ஆன்மீகக் கதை..!

RATING : 3.5 / 5

Our Score