‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கூலி’ படத்தின் டீசரில் தன்னுடைய இசையை தன் அனுமதியில்லாமல் பயன்படுத்திருப்பதாகக் குற்றம் சாட்டி இசைஞானி இளையராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அனிருத் இசை அமைத்திருக்கும் இந்தக் ‘கூலி’ படத்தின் டீசரில், 1983-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘தங்க மகன்’ படத்தில் இளையராஜாவின் இசையில் இடம் பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது.
தனது அனுமதியின்றி, தனது இசையை ‘கூலி’ படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் தற்போது படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருக்கிறது.
அந்த நோட்டீசில், “கூலி (2025) திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம்” என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘விக்ரம் விக்ரம்’ பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதே போன்று, லோகேஷ் கனகராஜ் புரொடக்ஷனில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்திலும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ‘கூலி’ படத்தின் டீசரில் இடம் பெற்ற ‘வா வா பாக்கம் வா’ பாடலின் இசைக்கு தன்னிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாதபட்சத்தில், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.













