full screen background image

நக்சா சரண் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘பைக் டாக்சி’ திரைப்படம்!

நக்சா சரண் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘பைக் டாக்சி’ திரைப்படம்!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் K.M.இளஞ்செழியன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பைக் டாக்சி’.

‘மக்கள் நாயகன்’ ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ மற்றும் இயக்குநர் சுசீந்திரன் தயாரித்த ‘மார்கழி திங்கள்’ போன்ற திரைப்படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்க, வையாபுரி, காளி வெங்கட் முதலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர். மேலும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சிறிய நாய்க்குட்டி ஒன்றும் நடிக்கவுள்ளது. 

இப்படத்திற்கு A.R.ரெஹானா இசையமைக்கிறார். M.R.M.ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஆனந்த் மணி பணிபுரிகிறார். எடிட்டராக வெரோனிகா பிரசாத் பணியாற்றுகிறார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் இரமணிகாந்தன் எழுதுகிறார்கள். நடன இயக்குநராக ஹரி கிரண் பணியாற்றுகிறார்.  தயாரிப்பு நிர்வாகியாக ராஜன் பணியாற்றுகிறார்.

கவுண்டமணி நடித்த ‘எனக்கு வேறு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ மற்றும் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்த ‘லைசென்ஸ்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கணபதி பாலமுருகன் இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை, மற்றும் முதல் தோற்றம் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக் குழுவினர் கலந்து கொள்ள இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் K.M.இளஞ்செழியன் பேசும்போது, “இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சிகூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாக லைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம்.

அதே போல் இந்தப் படமும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், வெற்றிப் படங்களைவிட நல்ல படைப்புகளை  மட்டுமே தர வேண்டுமென நினைக்கிறோம்.

இதில் ஏன் பெரிய ஹீரோ இல்லை எனக் கேட்கிறார்கள். இப்படம் மூலம் நக்ஷா சரண் எனும் மிகப் பெரிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஆண் பெண் வேறுபாட்டைக் கலைந்து, எங்கள் நிறுவனம் மூலம் அவரை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறோம்.  பைக் டாக்சி ஓட்டும் ஒரு பெண் அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை. இப்படம் மிகச் சிறப்பான சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்..” என்றார்.

 

இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசும்போது, “என் படத்தின் தயாரிப்பாளர்கள், என்  குருநாதர் சுசீந்திரன், என் குடும்பம் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தக் காலகட்டத்தில் மூன்று படங்கள் தொடர்ந்து செய்வது என்பது மிகக் கடினமானது. அதையும் தாண்டி பல கஷ்டங்களுக்கு இடையில்தான் இப்படம் செய்கிறோம்.

வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதைதான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பெரிய வெற்றிப் படத்தினை உருவாக்கும் முனைப்போடு தான் அனைவரும் வந்துள்ளோம். இப்படத்திற்காக ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்… ” என்றார். 

படத்தின் நாயகி நடிகை நக்ஷா சரண் பேசும்போது, “இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சார் சிறப்பான பெண்கள் கதாபாத்திரத்தை எழுதுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எழுதியிருக்கும் கேரக்டரை, என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இப்படத்தின் கதையைக் கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, பாலா அண்ணா என்ன மாதிரி படம் செய்வார் எனத் தெரியும். கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட படமாகத்தான் இப்படம் இருக்கும்.

பெண்கள் நுழைய முடியாத துறை என்று நிறைய இருக்கிறது, ஆனால் அது இக்காலத்தில் உடைந்து வருகிறது. அது போல் மிக அழகான கருத்தைப் பேசும் படம் இது. பயணத்தைப் பற்றிய பேசும் படம். இரானியப் படங்களில் இருக்கும் அழகியல் இப்படத்தில் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.

பாடலாசிரியர் இரமணிகாந்தன் பேசும்போது, “பெண்ணியம் பேசும் படங்களை இயக்குநர் கணபதி பாலமுருகன்  தொடர்ந்து இயக்கி வருகிறார். ரெஹானா மேடத்துடன் இப்படத்தில் இணைகிறோம் என்பது மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும்..” என்றார்.

எடிட்டர் வெரோனிகா பிரசாத் பேசும்போது, “இயக்குநர் கணபதி பாலமுருகன் எனக்கு இரண்டாவது வாய்ப்பினை தந்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகச் சிறந்த படைப்பாக இருக்கும்..” என்றார்.

நடிகர் ஷோபன் பாபு பேசும்போது, “இயக்குநர் கணபதி பாலமுருகன் எனது 25 வருட கால நண்பர், இந்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி. 18 வருட சினிமாப் போராட்டம் இது. எல்லோருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும்..” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இன்னும் அட்வான்ஸ்கூட வாங்கவில்லை ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படம் சிறப்பான படமாக வரும் என்று நம்புகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் சின்ன சாமி பேசும்போது, “இயக்குநர் பாலமுருகன் சினிமாவை நேசித்து உருவாக்குபவர். அவர் படங்களில் கண்டிப்பாக சமூக சிந்தனை இருக்கும். இம்மாதிரி இயக்குநருக்கு, குழுவிற்குப் பத்திரிக்கை ஊடகத்தினர் ஆதரவு தர வேண்டும். ஒளிப்பதிவாளர் எனக்குத் தெரிந்தவர். மிகக் கடினமான உழைப்பாளி. இப்படத்தில் நானும் வேலை செய்வதாக இருந்தது. அடுத்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றிப் படமாக அமையும்..” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹனா பேசும்போது, “இயக்குநர் பெண்மையைப் போற்றும் கதாபாத்திரங்கள் எழுதுபவர் மட்டுமல்ல, நிஜத்திலும் பெண்களை மதிப்பவர். அவர் சொன்ன கதை, மிகவும் பிடித்திருந்தது. நாயகி நக்சாவிற்கு மிகச் சிறப்பான ரோல், இப்படம் மூலமாக அவர் நதியா மாதிரி வருவார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் வையாபுரி பேசும்போது, “எங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவைவிட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது.

இந்த இயக்குநர் இயக்கிய லைசென்ஸ் படத்தில் நான் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார். இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா  என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். இயக்குநர் கதையை சொன்னபோதே நான் அழுதுவிட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது.

நாயகிக்கு  மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக் கேட்டேன். உங்களுக்கு மகளாக இவர்தான் சரியாக வருவார். அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுத்தேன் எனக் காட்டினார், அதைப் பார்த்தேன். அற்புதமாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப் படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப் படமாக அமையும்..” என்றார்.

ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுனர் ஒரே நாளில் சந்திக்கும் ஆறு சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கதை இது. 

மிகுந்த பொருட்செலவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

 

 

Our Score