full screen background image

சைரன் – சினிமா விமர்சனம்

சைரன் – சினிமா விமர்சனம்

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, யோகிபாபு, சாந்தினி,  துளசி, அருவி மதன், அழகம்பெருமாள், மதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார், இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – செல்வகுமார் S.K., படத் தொகுப்பு ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு – கே.கதிர், கலை இயக்கம் – சக்தி வெங்கட்ராஜ், சண்டை பயிற்சி இயக்கம் – திலிப் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – பிருந்தா, ஆடை வடிவமைப்பு – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரேன், எஸ்.அழகியகூத்தன், ஒப்பனை – மாரியப்பன், உடைகள் – பெருமாள் செல்வம், VFX – டிடிஎம் லவன் குசன். விளம்பர வடிவமைப்பு – யுவராஜ் கணேசன், வண்ணம் – பிரசாத் சோமசேக, DI – நாக் ஸ்டுடியோஸ், புகைப்படங்கள் – கோமளம் ரஞ்சித், நிர்வாக தயாரிப்பாளர் – ஓமர், தயாரிப்பு நிர்வாகி – ஜி.சக்கரத்தாழ்வார், தயாரிப்பு மேலாளர்-  அஸ்கர் அலி, பத்திரிகை தொடர்பு – சதீஷ்(AIM), மோஷன் போஸ்டர் – வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

இரும்புத் திரை’, ’விஸ்வாசம்’, ‘ஹீரோ’ ஆகிய படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கும் ஒரு போர்தான் இத்திரைப்படம்.

எளியவனை வலியவன் வதைத்தால், அந்த எளியவனும் ஒரு நாள் வலியனாவான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரான ஜெயம் ரவி அவருடைய மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார்.

14 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக பரோலில் வீட்டுக்கு வருகிறார் ஜெயம் ரவி. அவருடைய 14 வயது மகள் அவர் மீது வெறுப்புற்று, அவரைப் பார்க்க மறுத்து தனது அத்தை வீட்டுக்குப் போய்விடுகிறாள்.

பரோலில் வந்திருக்கும் ஜெயம் ரவியின் பாதுகாப்பு போலீஸாக யோகிபாபு வந்து அவருடனேயே இருக்கிறார். இருவரும் சேர்ந்தே ஊரைச் சுற்றி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் அந்த ஊரில் மிகப் பெரிய அரசியல் புள்ளியான அழகம்பெருமாள் டாஸ்மாக் பாரில் படுகொலை செய்யப்படுகிறார். அவர் கொலை செய்யப்படும் நேரத்தில் அந்த டாஸ்மாக் பாருக்கு ஜெயம் ரவியும், யோகிபாபுவும் மது அருந்த வந்து செல்கின்றனர்.

இதற்கடுத்து அழகம்பெருமாளுக்கு மிக நெருக்கமான அஜய் என்ற அரசியல்வாதியை ஜெயம் ரவி கொலை செய்கிறார். இவர்களையும் தாண்டி இன்னொரு இளைஞனும் இந்தக் களேபரத்தில் காணாமல் போய்விடுகிறான்.

இந்த வழக்குகளை விசாரிக்கும் சிவகாஞ்சி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவிதான் இந்தக் கொலைகளை செய்திருப்பதாக நம்புகிறார். இதற்காக தீவிரமாக விசாரணை நடத்தும் கீர்த்தி, சந்தேகத்தில் பேரில் ஜெயம் ரவியை கைது செய்து நீதிபதியிடம் அழைத்து வருகிறார்.

ஆனால், அந்தக் கொலைகளை தான் செய்யவில்லை என்று அதற்காக சில பேப்பர் ஆதரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்து அந்த வழக்கிலிருந்து அப்போதைக்கு தப்பித்து விடுகிறார் ஜெயம் ரவி.

ஆனால் இந்தக் கொலைகளை செய்தது ஜெயம் ரவிதான் என்று உறுதியாக நம்பும் கீர்த்தி சுரேஷ் இந்த வழக்கில் மேலும் தீவிரமாகவும், ஆழமாகவும் விசாரிக்கத் துவங்குகிறார்.

உண்மையில் அழகம் பெருமாளை கொலை செய்தது யார்..? ஜெயம் ரவி எதற்காக அஜய்யை கொலை செய்கிறார்..? ந்தக் கொலைகளுக்கு என்ன காரணம்..? ஜெயம் ரவி கொலை குற்றவாளியானது எப்படி?.. என்பதுதான் இந்த “சைரன்” படத்தின் திரைக்கதை.

இதுவரையிலும் தான் நடித்திருக்காத ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. பெரும்பாலான காட்சிகளில் ஒரு குழந்தைக்குத் தந்தையாக, சால்ட் பெப்பர் லுக்கிலேயே படம் முழுவதும் பவனி வந்திருக்கிறார்.  

மகள் மீதான பாசத்தில் தவிக்கும் தனது தவிப்பைக் காட்டுமிடத்திலும், ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் நோயாளிகளை உடனடியாக சிகிச்சையளிக்க அவசரப்படுத்தும் விதத்திலும் இப்படியொரு நல்லவனை பார்க்க முடியுமா என்ற ரேஞ்ச்சுக்கு நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற அப்பாவித் தோற்றத்திலேயே தனது நடிப்பையும் காண்பித்திருக்கிறார் ரவி. கீர்த்தியிடம் ஹஸ்கி வாய்ஸில் “நான் கொலை பண்ணலை மேடம்” என்று அவர் நடிக்கும் நடிப்பு, சில இடங்களில் ஓகே ஆனாலும், பல இடங்களில் ஓவர் த்ரோ பவுலிங்காகியிருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அழகு தேவதை கீர்த்தி சுரேஷ் மேக்கப்பே இல்லாமல்கூட அழகாய் தெரிகிறார். பெண் போலீஸுக்கு உரிய சாதாரணமான தோற்றத்தில் இருந்தாலும் சில இடங்களில் அந்த அழகு முகத்தை வைத்தே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இடையிடையே டிஎஸ்பி சமுத்திரக்கனியிடம் வெறுப்பு பேச்சுக்களை எதிர்கொண்டாலும் ஜெயம் ரவிதான் குற்றவாளி என்பதை நிரூபிக்க போராடும்விதத்தில்  படத்தை பெரிதும் நகர்த்திச் சென்றுள்ளார் கீர்த்தி. 

ஜெயம் ரவியின் மனைவியாக, மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வரும் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு நிழல் காவலராக நடித்திருக்கும் யோகி பாபு, படம் முழுவதும் ஜெயம் ரவியுடன் வலம் வந்து அவ்வப்போது ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

டி.எஸ்.பி. நாகலிங்கமாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு இதில் சாதி வெறியர் கதாப்பாத்திரம். இதுவரையிலான திரைப்படங்களில் சாதீயத்தை வீசியெறியச் சொன்ன சமுத்திரக்கனி, இதில் சாதீயத்தைக் காப்பாற்றத் துடிக்கும் வில்லனாக நடித்திருக்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் அழகம் பெருமாள், அஜய், ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த துளசி, தங்கையாக நடித்த சாந்தினி, மகளாக நடித்த சிறுமி என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் டாஸ்மாக் பாரில் அழகம் பெருமாளின் நடிப்பு சிறப்பு..!

படத்தில் வசனங்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ரசிக்க வைத்திருக்கிறது. “ஒரு நல்லவனை நல்லவனாவே நடிக்க வச்சிட்டீங்களே”, என்றும் “சாதி இல்லைன்னு சொல்றவனையும் என்ன சாதின்னு தேடாதீங்க” என்ற வசனங்கள் மூலமும் பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். நேற்று வரை’ பாடல் காதலைச் சொல்கிறது. ‘கண்ணம்மா’ பாடல் அப்பா-மகள் பாசத்தைப் பாடுகிறது. ‘அடி ஆத்தி’ பாடல் ரசிகர்களைத் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஆரவாரம் செய்யாமல் சஸ்பென்ஸை கூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ். அதிலும் வில்லன்களை கொலை செய்யும் காட்சிகளில் பின்னணி இசையே நடுக்கத்தைக் கூட்டுகிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தன்மை கெடாத வண்ணம் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. டாஸ்மாக்  பார் கொலையை கச்சிதமாக சஸ்பென்ஸ், திரில்லர் பாணியில் படம் பிடித்துள்ளார்.

படத் தொகுப்பாளர் ரூபனின் கத்திரி விளையாட்டில் தெரிந்த முடிவுதான் என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி பரபரக்கிறது.

படத்தின் துவக்கத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்துவிட்ட இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், அடுத்தடுத்து திரைக்கதை காட்சிகளில் கதையை கொஞ்சம், கொஞ்சமாக சஸ்பென்ஸோடு வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார். இது வழக்கமான கதைதான் என்றாலும் வித்தியாசமான திரைக்கதை மூலமாக படத்திற்கு ஒரு புது முலாம் பூசியுள்ளார்.

பாதி படத்திலேயே ஜெயம் ரவிதான் கொலையாளி என்பது தெரிந்துவிட்டதால் அதற்குப் பின்பு அவர் சொல்லும் “நான் கொலை செய்யலை மேடம்” என்கிற வசனம் காமெடியாகிவிட்டது. இதே நேரம், டாஸ்மாக் பார் கொலையை ஜெயம் ரவி எப்படி செய்தார் என்ற சஸ்பென்ஸை மட்டுமே கடைசிவரையிலும் இழுத்துச் சென்றிருப்பது மட்டும்தான் படத்தின் சிறப்பு.

ஆனாலும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகுமா..? என்னதான் அதிகாரமும், அரசியலும் பொது மக்களுக்கு எதிரானதாக இருந்தாலும் இதற்கு இது போன்று பழிக்குப் பழியான கொலைகள்தான் சரி என்று இயக்குநர் சொல்கிறாரா..? இது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் என்பதுதான் இந்தப் படத்தில் நமக்கிருக்கும் ஒரே நெருடல்.

ஒரு பழி வாங்கல் கதையில், அப்பா, மகள் பாசம், மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினை, போலீஸில் இருக்கும் ஜாதி பாகுபாடு, ஆண் போலீஸ், பெண் போலீஸ் இடையேயான ஈகோ பிரச்சினை.. இன்றைய இளைஞர்களின் வழி தவறிய பாதை, அரசியல்வாதிகளிடையே இருக்கும் கொலை மோதல்கள், சாதிய அடக்குமுறைகள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டாக வைத்து இரண்டே கால் மணி நேரம் அமர்ந்து, பொறுமையாகப் பார்க்கும் அளவுக்கு நேர்த்தியான திரைக்கதையில் கொடுத்திருக்கும் இந்த சைரனின்’ ஒலி அனைவருக்கும் கேட்கிறது..!

RATING : 3.5 / 5

Our Score