full screen background image

சபாநாயகன் விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்

காதல். காதல். காதல் இப்படி வாழ்வின் பல்வேறுகட்டங்களில் ஏற்படும் காதல் எபிசோடுகளை கலகலப்பாக பதிவு செய்ய முயற்சித்திருக்கும் திரைப்படமே சபாநாயகன்.

ச.பா. அரவிந்த் என்னும் இயற்பெயர் கொண்ட அசோக் செல்வன் நடு இரவில் போதையில் போலீஸுடம் அரெஸ்ட் ஆகி அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தன் வாழ்வில் நேர்ந்த காதல் அனுபவங்களை சொல்லத் துவங்குவதாக கதை துவங்குகிறது. முதலில் பள்ளிப் பருவக்காதல், பின்னர் கல்லூரிப் பருவக் காதல், கல்லூரி மேற்படிப்பு படிக்கும் போது மற்றொரு காதல் இப்படி அடுத்தடுத்த காதல், இதில் எந்த காதல் எப்படி ஜெயித்தது, மற்ற காதலெல்லாம் எப்படியெல்லாம் தோற்றது என்பதை விலாவாரியாக பேசி இருக்கிறது திரைக்கதை.

காதல் படங்கள் என்றாலே அதன் ஸ்பெஷல் காதல் துவங்கும் அந்த ஆரம்ப அத்தியாயங்களும், காதலர்களுக்கு இடையே அந்தக் காதலை சொல்வதற்கு ஏற்படும் தவிப்பும், காதலை சொன்னப் பின்னர் அவர்களிடையே ஏற்படும் உணர்வுப் பிணைப்பும், பின்னர் அவர்களுக்குள் ஏற்படும் ஏதோ ஒரு பிரச்சனையால் இந்தக் காதல் சேருமா…? சேராதா…? என்று படத்தைப் பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு தொற்றிக் கொள்ளும் பரபரப்பும் தான். ஆனால் சபாநாயகன் திரைப்படத்தின் காதல் எபிசோடுகளில் இது எதுவுமே இல்லை என்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ச.பா.அரவிந்த் சுருக்கமாக நண்பர்களால் சபா என்று அழைக்கப்படும் அசோக் செல்வனின் கேரக்டர் வடிவமைப்பு 90’ஸ் கிட்ஸ் மற்றும் 20’ஸ் கிட்ஸ் சேர்ந்த ஒருவித கலவையாக இருக்கிறது. பள்ளிகாலப் பருவத்தில் காதலியைப் பார்த்து காதலை சொல்ல தயங்குவதும், அவளுடன் கடைசி வரை பேசாமலே பார்த்துக் கொண்டே இருப்பதும், கடைசியில் அவளுடன் பேசி தன் காதலை சொல்ல கிடைக்கும் தருணத்தை தன் நண்பனின் அப்போதைய மனநிலை கருதி பேசாமல் நண்பனோடு செல்வதும் என அநியாயத்திற்கு 80’ஸ் கிட்ஸின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது அந்த கதாபாத்திர வார்ப்பு. ஆனால் அந்தக் காதல் முடிந்து போனதும், அந்தக் காதலியை தேட முற்படாமல் அவளின் நினைவில் இருந்து ஏங்காமல் வெகு இயல்பாக கல்லூரி கால காதலை நோக்கி அந்தக் கதாபாத்திரம் நகரும் விதத்தில் 20’ஸ் கிட்ஸின் மனநிலையை எதிரொலிக்கிறது. அந்தக் காதலும் காதலிக்காக ரிஸ்க் எதுவும் எடுக்காமல், தன் கண்கள் குத்தப்பட்டுவிடுமோ என்கின்ற பயத்தில் சேஃப் கேம் ஆடும் காதலாகவே தெரிகிறது. சரி இவர் காதலை ஜாலியாக அணுகும் கதாபாத்திரம் என்று நினைத்தால் உடனே காதலியைப் பார்க்க வரக்கூடாது என்று சொல்லி மிரட்டும் ரவுடிகளிடம் சண்டை செய்து ஹீரோ ஆகிறார்.

இந்தக் கல்லூரி காலக் காதலின் பிரிவும் வெகு ஜாலியாக அமைகிறது. அதை நினைத்துப் பெரிதும் குமுறாமல், தன் அடுத்த காதலைப் பற்றி விவரிக்க இவர் தயார் ஆகும் போது, இவர் மீதும் இவர் செய்து வந்த காதல்மீதும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துப் போகிறது.

திடீரென்று தன் பள்ளிகால காதலியை நினைத்து அழத் துவங்குகிறார். நமக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. நாயகியும் நாயகனிடம் வெகு இயல்பாகப் பழக, ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்த, அவள் வேறு சில காரணங்கள் சொல்லி மறுத்துவிடுகிறாள். அடுத்த காதலை தேமே என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழகான பொம்மை போன்ற அழகுடன் வரும் மேகா ஆகாஷ் எபிசோட் கவித்துவமாக வொர்க்-அவுட் ஆகிறது.

இப்படி வகைவகையான பாடாவதி காதல்கள், இதில் எந்தக் காதல் சேர்ந்தால் என்ன பிரிந்தால் நமக்கு என்ன என்கின்ற மனநிலையில் படாதபாடுபட்டு அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாகிய நாம்,, இறுதியில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் அடித்து ஏதோவொரு காதலை சேர்த்து வைக்கும் இயக்குநர், என ஒட்டு மொத்த படத்திலும் இருக்கும் ஒற்றை சர்ஃப்ரைஸ் அது தான். ஒட்டு மொத்த படத்தையும் அந்த ஒரு ட்விஸ்டை மட்டுமே நம்பி எடுத்தார்களா..? என்ற கேள்வியும் எழுகிறது. அந்த ட்விஸ்டும் பெரிய அப்பாடக்கர் ட்விஸ்ட் எல்லாம் இல்லை, பாதிக்கும் மேலான பார்வையாளர்கள் அதை யூகித்தே இருந்தனர்,

நாயகனாக அசோக் செல்வனுக்கு ஸ்கோர் செய்வதற்கான ஏரியாக்கள் அதிகம். காமெடி, நட்பு, அக்கா தம்பி இருவரும் காதலைப் பற்றி உரையாடுவது, கல்லூரிகளில் பல்பு வாங்கும் இடங்கள், ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லாவித உணர்வுகளையும் ஆங்காங்கே பன்னீர் போல் தெளிப்பதற்கான வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த உணர்வுகளில் எதுவும் டாமினண்ட் ஆக இல்லாதது தான் பிரச்சனை.

நாயகியாக கார்த்திகா முரளிதரன், சாந்தினி மற்றும் மேகா ஆகாஷ். இந்த மூவரில் முதலிடம் பெறுவது சிறிது நேரமே வந்து சென்றாலும், நெடு நேரத்திற்கு நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமரும் மேகா ஆகாஷ் தான். நட்பில் இருந்து காதலுக்கு டிராக் மாறும் இவர்களின் பயணம் ஒரு பூ மலர்வதைப் போல் இயல்பாக நடந்துவிடுகிறது. அடுத்ததாக சாந்தினி இளநிலை கல்லூரி கால காதலியாக வந்து செல்கிறார். சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்பிரசன்ஸ் மூலம் எளிதாக ஸ்கோர் செய்கிறார். பள்ளி கால காதலியாக வரும் கார்த்திகா முரளிதரனுக்கு முதல் பாதியில் பேசும் காட்சிகளே குறைவு என்பதால், நடிப்பதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. ஆனால் செகண்ட் இன்னிங்க்ஸில் கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு செமத்தியாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் அருண், ஸ்ரீராம், ஜெய்சீலன் மூவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதிலும் அருண் அடிக்கும் ஒன்லைன் காமெடிகள் சிறப்பாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. டாக்டர் வேஷம் போட்டுக் கொண்டு ரெஸ்டாரண்ட் வரும் இடத்தில் மாட்டிக் கொண்டு கார்த்திகாவிடம் அடி வாங்கும் இடம் ரசனை. ஒட்டு மொத்தப் படத்தின் வறட்சியான காமெடிக் காட்சிகளுக்கு இடையில் வசந்தமாக நம்மை தீண்டும் இடங்கள் அருண் வரும் காட்சிகள் மட்டுமே.

லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் சுகமாக ராகங்களாக இருக்கின்றன. பின்னணி இசை பலவீனமான காட்சிகளை தூக்கி நிறுத்தி உணர்வுகளைக் கடத்தப் போராடி இருக்கிறது. பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சிகளின் அழகியலோடு இயைந்து காட்சிகளின் குறைபாடுகளோடு நம்மை சமரசம் செய்ய முயல்கிறது. கணேஷ் சிவா இன்னும் கொஞ்சம் துணிந்து காட்சிகளில் கத்தரி போட்டு, கதையை கச்சிதமாக மெருகேற்றி இருக்கலாம்.

இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் காமெடியாக கதை சொல்ல வேண்டும். எமோஷ்னலோ சீரியஸ்னஸோ சீரியஸாக வேண்டாம் என்கின்ற முன் முடிவுடன் கதையையும் அதன் திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். காமெடி எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காததாலும், காதல் எபிசோடுகளில் கற்பனைவளம், காதலின் ஆழம் போன்ற காரணிகள் குறைந்ததாலும், உணர்வலைகளில் ஏற்படுத்த வேண்டிய எழுச்சியை திரைப்படம் ஏற்படுத்த தவறுகின்றது. முழுமையான காதல் படமாகவும் இல்லாமல், முழமையான காமெடிப்படமாகவும் இல்லாமல், இரண்டும் கலந்த சரிவிகித கலவையாகவும் இல்லாமல் தொக்கி நிற்கிறது திரைப்படம்.

சபாநாயகன் – ஜாலியாக ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்களுக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக கலகலப்பூட்டும் இப்படம் மெச்சும்படியான தேர்வு இல்லை.

மதிப்பெண் – 2.75 / 5.0

Our Score