full screen background image

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

 

கல்லூரி புராஜக்ட்டிற்காக செல்போன் ஒட்டு கேட்பு இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறான் ஒரு இளைஞன். அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து மாமல்லபுரம் வரை செல்லும் போது அவர்கள், ஒரு இளம் பெண்ணை காரில் ஒரு கும்பல் கடத்திச் செல்வதைப் பார்க்கிறார்கள். மேற்கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள்..? அந்த இளம்பெண்ணை காப்பாற்றினார்களா.?? இல்லையா..? என்பதே ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை.

மூன்று நண்பர்கள். பள்ளிகாலத் தோழர்கள். ஒருவன் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறான். ஒருவன் காதலித்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவன் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறான். கல்லூரியில் படிக்கும் இளைஞன், அவனுடைய புராஜக்ட் ஒர்க் ஒன்றிற்காக ஒரு குறிப்பிட்ட சதுரகிலோ மீட்டரில் இருக்கும் செல்போன்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றை கண்டுபிடிக்கிறான். ஆனால் அதை செயல்படுத்திக் காட்டும் வைவா நிகழ்ச்சியின் போது அந்த சாதனம் சில தொழில்நுட்பக் கோளாறால் செயல்படாமல் போகிறது. இதனால் நொந்து போகும் அந்த நண்பனை கூல் செய்வதற்காக அவனை மாமல்லபுரம் வரை மற்ற நண்பர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அப்படி போகும் போது ஒரு பெண் கடத்தப்படுவதைப் பார்க்கிறார்கள். மேற்கொண்டு அப்பெண்ணை காப்பாற்றும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்க, அந்த முயற்சி வெற்றியில் முடிந்ததா..? இல்லை தோல்வியில் முடிந்ததா..? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை. கதாபாத்திர வடிவமைப்பிலோ, கதையிலோ, கதைக்களத்திலோ அல்லது திரைக்கதையிலோ எந்தவித புதுமையோ சுவாரஸ்யமோ இல்லை. தொழில்நுட்பரீதியாக அந்த இளம் பெண்ணை மீட்பதற்காக தீட்டும் திட்டங்களில் உள்ள புத்திசாலித்தனம் கூட திரைக்கதையில் இல்லாமல் போனது ஏமாற்றம்.

காதலனைத் தவறாக புரிந்து கொண்டு கோபப்படும் நாயகி, பின்னர் நாயகனைப் புரிந்து கொண்டு அவனுக்கு உதவ வருவது, நண்பர்கள் கூட்டணியில் காமெடியன் போல் இருப்பவன் முதலில் இந்த ஆப்ரேஷனுக்கு பயந்து பின்வாங்குவது, பின்னர் நண்பர்களின் அறிவுரைகளைக் கேட்டு மனம் மாறுவது, கையில் கன்னைக் காட்டி மிரட்டிக் கொண்டும், கத்திக் கொண்டும் இருக்கும் தமிழ் சினிமா வில்லன், அவனிடம் இருக்கும் சில முட்டாள் அடியாட்கள், அநியாயத்தைக் கண்டு பொங்கும் நாயகர்கள் என தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்துப் போன சம்பிரதாய காட்சிகளை ஒன்றாக அடுக்கி ஒரு படம் செய்திருப்பதைப் போல் தோற்றம் தருகிறது ஜிகிரி தோஸ்த்.

கையில் இருக்கின்ற சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு எளிமையான கதை, அதை விட எளிமையான திரைக்கதை, அதை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரையில் வழங்கிய விதம் அவர்களின் முயற்சி ஆகியவை பாராட்டுக்கு உரியது என்றாலும் புதுமையாக ஏதும் இல்லை என்பதால், இப்படத்தை எதற்கு பார்க்க வேண்டும் என்கின்ற சலிப்பு ஏற்படுகிறது.

ஷாரிக் ஹாசன், அறன்.வி, ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, அனுபமா குமார், ஜார்ஜ் விஷ்ணு, சரத் என பலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு இருந்தது என்று ஒருவரையும் கைகாட்ட முடியவில்லை.

அறன்.வி திரைப்படத்தை எழுதி இயக்கியதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். சினிமாவில் அடிப்படையான ஒரு கதையை தேர்வு செய்து, அதில் எந்தவொரு உணர்வையும் பிரதிபலிக்காதபடி திரைக்கதையை அமைத்து, அதை மிகுந்த நாடகத்தனத்தோடு படமாக்கி இருக்கிறார். காட்சிகளோ கதாபாத்திர வார்ப்போ, காமெடியோ, த்ரில்லோ எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இசையும் படக்காட்சிகளைப் போலவே சுமாராக இருக்கிறது.

மொத்தத்தில் ஜிகிரி தோஸ்தை ஒரு நல்ல நண்பனாக எண்ணி நட்பு பாராட்ட முடியவில்லை.

மதிப்பெண் 2.0 / 5.0

Our Score