திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை சென்னையில், திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
தேனி மாவட்டம் வருச நாட்டில் பிறந்த இவர் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு சென்னை வந்தார். இயக்குநர்கள் மனிரத்னம், வசந்த், ராஜ்கிரண், S.J.சூர்யா, சீமான் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்தார் மாரிமுத்து.
இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு “கண்ணும் கண்ணும்” என்ற திரைப்படத்தையும், 2014-ம் ஆண்டு “புலிவால்” என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். சிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ படத்தில்தான் முதல்முறையாக நடித்தார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். வாலி, உதயா, நிமிர்ந்து நில், கொம்பன், மருது, பரியேறும் பெருமாள். ஜெயிலர்-2, வரவிருக்கும் இந்தியன்-2, கங்குவா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘எதிர் நீச்சல்’ நெடுந்தொடர் இவரை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. ‘ஆதி.குணசேகரன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து இந்த ‘எதிர் நீச்சல்’ தொடரின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.
இன்று காலை சென்னையில் ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனிக்காமல் மருத்துவமனையிலேயே காலமானார்.
இவருக்கு பாக்கியலஷ்மி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.
இவருக்கு திரைப்பட துறையினரும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.









