full screen background image

ஜவான் – சினிமா விமர்சனம்

ஜவான் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ரெட் சில்லீஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கெளரி கான் மற்றும் கவுரவ் வர்மா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – அட்லீ, திரைக்கதை – அட்லீ, எஸ்.ரமணகிரிவாசன், ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, இசை – அனிருத் ரவிச்சந்தர், படத்தொகுப்பு – ரூபன், சண்டை இயக்கம் – ANAL ARASU, SPIRO RAZATOS, CRAIG MACRAE, YANNICK BEN, KECHA KHAMPHAKDEE & SUNIL RODRIGUES, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலமாக கோகுலம் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரரான ஆஸாத் ரத்தோர் என்ற ஷாருக்கான், ராணுவத் துறையில் நடந்த துப்பாக்கி ஊழல் குறித்து வெளிப்படையாகப் பேசிவிட அது ராணுவ நீதிமன்றத்திற்குச் சென்றுவிடுகிறது. அங்கு நடக்கும் விசாரணையில் அந்தத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்து கொடுத்த வியாபாரியான காளீஸ் என்ற விஜய் சேதுபதிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனால் கோபமடையும் விஜய் சேதுபதி, லோக்கல் போலீஸை கைக்குள் வைத்துக் கொண்டு ஷாருக்கானை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டு கடலில் வீசி விடுகிறார். ஷாருக்கானின் மனைவியான தீபிகா படுகோனே தன்னை பொய் வழக்கில் கைது செய்ய வந்த 3 போலீஸாரை சந்தர்ப்ப சூழலால் கொலை செய்கிறார்.

இதற்காக அவர் சிறைக்கு செல்ல, அங்கே அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பையனுக்கு 5 வயது ஆனவுடன் அவர் தூக்கலிடப்படுகிறார். ஆனால், அந்தப் பையனிடம் தான் சாவதற்கு முன்பாக அவனுடைய அப்பா மீதான வீண் பழியை துடைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இப்போது மகனான விக்ரம் ரத்தோர் என்ற ஷாரூக்கான் அதே ஜெயலில் ஜெயிலராக வேலை பார்க்கிறார். தன் அப்பா மீது விழுந்த களங்கத்தை துடைக்கவும், அரசியல்வாதிகளின் ஊழல்களால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக வித்தியாசமான வகைகளில் போராட்டங்களை நடத்தி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

அந்தப் போராட்டங்கள்தான் என்ன..? ஷாரூக் அதை எப்படியெல்லாம் செய்கிறார்? என்பதை நிறைய அதிரடி காட்சிகளாகவும், அரசியல்வாதிகளுக்கு விழும் சாட்டையடியாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

அப்பா ‘ஆசாத் ரத்தோர்’, மகன் ‘விக்ரம் ரத்தோர்’ என்று இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘பாலிவுட் பாதுஷா’ ஷாரூக்கான் படம் மொத்தத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார்.

அவருடைய அறிமுகக் காட்சியே ரசிகர்கள் மொத்தப் பேரையும் தட்டி எழுப்புகிறது. முக்கால்வாசி முகத்தை மூடிய நிலையில் அவர் மெட்ரோ ரயிலில் செய்யும் சாகசமும், ‘பாட்டுப் பாட வா’ என்ற பாடலுக்கு அவர் ஆடும் லைட்டான மூவ்மெண்ட்ஸூம், ரஜினியின் ஸ்டைலுக்கு ஒப்பானது.

மொட்டைத் தலை ஷாரூக்கான், ஜெயிலர் ஷாரூக்கானாகி நயன்தாராவை பார்த்தவுடன் லவ்வாகும்போதும், பாடல் காட்சிகளில் நயன்தாராவைவிடவும் அழகாகத் தெரிகிறார் ஷாரூக்கான்.

அப்பா ஷாரூக், மகன் ஷாரூக்கைவிடவும் கொஞ்சம் அதிகமாக நடித்து கவனத்தைப் பெற்றுள்ளார். எதுவுமே ஞாபகத்துக்கு வராமல் போனாலும், “நீ என் மகன்” என்று சொல்லி மகனைக் கட்டியணைக்கும்போதும் நமக்கும் ஒரு நெகிழ்ச்சியை உண்டு செய்திருக்கிறார். இவருக்கும், தீபிகாவுக்கும் இடையேயான ரொமான்ஸ் எப்போதும்போல் கிக் ஏற்றுகிறது.

காவல் துறை அதிகாரியான நர்மதாவாக நயன்தாரா வலம் வந்திருக்கிறார். தனது பிரத்யேகமான ஸ்டைல்களிலேயே தனது ரசிகர்களை உச்சு கொட்ட வைத்திருக்கிறார். அவரது அறிமுகக் காட்சியே நாயகனுக்குப் போட்டியாகத்தான் உள்ளது  படத்தின் முதல் பாதியில் ஷாருக்கானுக்கு இணையாக நிறைய காட்சிகள் நயனுக்கு இருந்தாலும், இரண்டாம் பாதியில் நயன் மிஸ்ஸிங் ஆனது வருத்தமான விஷயம்.

தீபிகா படுகோனே ரொமான்ஸூக்காக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், காதல் வசனம் பேசும் இடத்திலும், கொலைப் படலத்தை நடத்தும் காட்சியிலும் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

இந்தியாவின் ஒட்டு மொத்த ஊழல்வாதியான தொழிலதிபராக விஜய் சேதுபதி தனது உடல் மொழியாலேயே அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி பேசும் வசனங்களெல்லாம் அரசியல் கலந்த பட்டாசுதான். இனிமேல் பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஒரு ரவுண்ட் வரலாம்.

வழக்கமான ஹீரோயிஸ கதைதான் என்றாலும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்து படத்தை கடைசிவரையிலும் ரசிக்க வைத்த காரணம், இசை, ஒளிப்பதிவு, மற்றும் சண்டை காட்சிகளால்தான்.

அனிருத்தின் பாடல்கள் ஏற்கெனவே இன்றைய இளசுகளை கொள்ளை கொண்டு விட்டதோடு, படத்தில் இருக்கும் பின்னணி இசையும் கதைக் களத்தோடு பயணித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் கண் கவரும் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் வியாபித்து நம்மைக் கவர்ந்திழுக்கிறது. அப்பா, மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளைக்கூட ரசிக்கும்விதத்தில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இருக்கும் ரிச்னெஸ்ஸை ஸ்கிரீனில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.

போதாக்குறைக்கு ஒவ்வொரு சண்டை காட்சியையும் ஒவ்வொரு சண்டை இயக்குநரை வைத்து இயக்கியுள்ளதால் அனைத்துமே தரமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது.

குறிப்பாக பணத்தைக் கொள்ளையடிக்க சாலையில் நடக்கும் சேஸிங் காட்சிகளும், அப்பா ஆசாத் ரத்தோர் காட்டுப் பகுதியில் ராணுவத்துடன் மோதும் சண்டை காட்சியும் சிறப்பு.

பிரியாமணி உள்ளிட்ட சில துணை நடிகைகள் மூலமாக நம் இந்திய மக்களின் மனதை கடந்த சில ஆண்டுகளாக அரித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கடன் பிரச்சினை, தற்கொலை, சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சோகக் கதைகளை ஞாபகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

பெரும் தொழிலதிபர்களின் ஆயிரக்கணக்கான கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் ஒரு சில ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யாமல் அவர்களை தற்கொலைக்குத் தூண்டியிருப்பதன் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

டிராக்டர் கடனுக்காக ஆந்திராவில் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள.. விவசாயம் அழிந்து கொண்டே வருவதால் அதை எதிர்கொள்ளும் பொருளாதார நிலை இல்லாமையால் மகாராஷ்டிராவில் விதர்பா பகுதி விவசாயிகள் கொத்துக், கொத்தாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களையும் நினைவு கூர்ந்துள்ளார் அட்லீ.

உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் நகரத்தின் நேரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 63 குழந்தைகளும், 18 முதியோர்களும் இறந்து போனார்கள். அந்த மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததை அதே மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்த கஃபீல்கான் அம்பலப்படுத்தினார். இதையடுத்து பொய் வழக்கில் கஃபீல்கான் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறையில் இருந்த சம்பவத்தையும் எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் அட்லீ.

உலக நாடுகளே விரட்டியடிக்கும் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு இந்தியாவில் மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பது ஏன்..? கெமிக்கல் தொழிற்சாலைகளால் விவசாயம், சுற்றுச் சூழல், மக்களின் சுகாதாரம் கெட்டுப் போனாலும் அரசுகளின் லஞ்ச, லாவண்யத்தால் அப்பாவி மக்கள் உயிரைவிடும் அக்கிரமத்தையும் எடுத்து காட்டியுள்ளார் இயக்குநர் அட்லீ.

ஒவ்வொரு தேர்தலின்போதும் லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் முட்டாள் மக்களால்தான், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

ஷாரூக்கான் தன் திரையுலக வாழ்க்கையில், இது போன்று நேரடியாக அரசியல் பேசியிருக்கும் படம் வேறு ஏதுமில்லை. இந்த அரசியல் கலந்த படத்தை மிகப் பெரிய கமர்ஷியல் திரைப்படமாகவும் கொடுத்து தேச பக்தர்கள், சமூக ஆர்வலர்களுடன் தனது ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறார் ஷாரூக்.

இப்படி பல சபாஷ்கள் இருந்தாலும் படத்தின் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் கொஞ்சம் போரடிக்கிறது. மெட்ரோ டிரெயினில் நடக்கும் சில காட்சிகளில் ஷாரூக்கின் நடிப்பில் பற்றாக்குறை இருப்பதும் தெரிகிறது.

தன் குழந்தை சொன்னதுக்காக கல்யாணத்திற்குத் தயாராகும் நயன்தாரா.. பார்த்தவுடன் காதல் என்ற ரீதியில் ஷாருக்கானுடன் நடத்தும் காதலும், டூயட்டும் நம்பவே முடியவில்லை. இதைவிடவும் போலீஸ் தலைமை அதிகாரியான நயன்தாரா, ஷாரூக்கான் யார் என்று விசாரிக்காமலேயே கல்யாணத்திற்குத் தலையாட்டுவதெல்லாம் போகிறபோக்கில் எழுதிய திரைக்கதையாகவே தெரிகிறது.

மேலும் படத்தில் காட்டும் நான்குவித பிரச்சினைகளிலும் வில்லனாக விஜய் சேதுபதியையே காட்டியிருப்பதும் சினிமாத்தனமாகவே உள்ளது.

இவை எல்லாவற்றையும்விட இந்தப் படத்தின் கதையும் சுட்ட கதைதான் என்பது சோகமான விஷயம். அட்லீ இதுவரையிலும் தான் இயக்கிய எந்தவொரு படத்தின் கதையையும் சொந்தமாக எழுதவில்லை என்பது இந்தியத் திரையுலகமே அறிந்த கதை.

அந்த வகையில் இந்தப் படத்தின் கதையும், கத்தி’, ‘இந்தியன்’ போன்ற படங்களிலிருந்து சுட்டது தெளிவாகத் தெரிகிறது. இதனாலேயே அடுத்த காட்சி இதுதான் என்று படம் பார்க்கும் ரசிகர்களாலேயே ஊகிக்க முடிந்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம். இந்த சுட்டக் கதையிலேயே கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் நாம் முன்பே பார்த்த, கேட்டறிந்த கதையாக இருந்தாலும் பாதுஷா ஷாரூக்கானின் ஆக்கிரமிப்பு, படத்தின் பிரம்மாண்டம், காட்சியமைப்பு, சண்டை காட்சிகள் என்று அனைத்துத் துறைகளின் பிரமிக்க வைக்கும் வேலைகளால் இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்..!

RATING : 4 / 5

Our Score