full screen background image

தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்

தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்

லக்ஷ்மி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின்  சார்பாக தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

படத்தில், சேரன், லால், வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன், சுரேஷ் காமாட்சி, ரவி மரியா, துர்வா, தீப்ஷிகா & ்ரீபிரியங்கா, ராஜேஷ், மயில்சாமி, மு.ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், சண்டை இயக்கம் – சக்தி சரவணன், நடன இயக்கம் – தினேஷ், கலை இயக்கம் – வீரசமர், உடைகள் – ரங்கசாமி, பாடல்கள், விவேகா, சாம் சி.எஸ்., ஏக்நாத், ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயணன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

சாதியை மையமாக கொண்டு உருவான படங்களில் இதுவும் ஒன்று, ஆனால் இந்தப் படம் சொல்லும் செய்தி இது போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

நெல்லை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வண்ணார் தொழில் செய்து வருகிறார் சேரன். மேலும், ஊரில் யாராவது இறந்துவிட்டால் இறப்புக்குச் செய்யும் சாங்கியங்களையும் செய்து வருகிறார் சேரன்.

ஆனால் இத்தொழில் சேரனுக்குப் பிடிக்கவில்லை. தனது குடும்பமே பரம்பரை, பரம்பரையாக இதைச் செய்து வருவதால் தானும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் சேரன்.

தேர்வெழுதி அரசு வேலைக்கு செல்ல நினைக்கிறார் சேரன். தனது தங்கையைக்கூட மருத்துவம் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அரசு வேலைக்கான வயது வரம்பு தாண்டிவிட்டதால், இப்போது வேலைக்கும் போக முடியாத நிலைமை சேரனுக்கு. இதனால் இனிமேல் இந்தத் தொழிலை பார்க்க வேண்டாம் என்று நினைத்து பால் வியாபாரத்தில் இறங்குகிறார் சேரன்.

இந்த நிலையில் சேரனின் தங்கையான தீப்ஷிகாவுக்கும், ஊரின் ஆதிக்க சாதியின் தலைக்கட்டுவான லாலின் மகனான துருவாவுக்கும் இடையில் காதல் பிறக்கிறது. இதையறியும் துருவாவின் தாய் மாமனான அருள்தாஸ், தீப்ஷிகாவை ஊரில் அனைவரின் முன்பாகவும் வைத்து அடித்து காயப்படுத்துகிறார்.

இது போலீஸ் கேஸ் ஆகாமல் போய் சேரனும், அவர் குடும்பமும் மிகுந்த மன வேதனையடைகின்றனர். இதையடுத்து இனிமேல் சாவு சடங்குகளை செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவெடுக்கிறார் சேரன்.

சில மாதங்கள் கழித்து லாலின் அப்பாவான மு.ராமசாமி இறந்துவிட.. சேரனுக்கு அழைப்பு வருகிறது. சேரன் வர மறுக்கிறார். ஊரே திரண்டு வந்து அழைத்தும் அவர் செல்ல மறுக்கிறார். லாலே வீடு தேடி வந்து சேரனை அடித்து, உதைத்து “நாளை காலையில் மரியாதையாக வந்து விடு…” என்று மிரட்டிச் செல்கிறார்.

இதனால் அன்றைய இரவிலேயே சேரன், தன் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேறுகிறார். அப்படியிருந்தும் போலீஸை வைத்து சேரனை அடிக்க வைத்து மீண்டும் மிரட்டுகிறார் லால். இந்தச் செய்தியை அறியும் அந்தோணிசாமி என்ற நெல்லை மாவட்ட எஸ்.பி. போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் வந்து சேரனை காப்பாற்றுகிறார்.

லால், சுரேஷ் காமாட்சியிடம் “எனது தந்தையின் உடலை போலீஸ் ஸ்டேஷன் முன்னால் வைத்து போராட்டம் நடத்துவேன்…” என்று மிரட்ட, லாலின் தந்தையின் உடலை போலீஸார் கைப்பற்றி மார்ச்சுவரியில் வைக்கிறார்கள்.

இதற்குப் பிறகு என்ன நடக்கிறது..? சேரன் சடங்குகளை செய்ய வந்தாரா..? இல்லையா..? ராமசாமியின் இறுதிச் சடங்கு முடிந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

சின்னசாமியாக நடித்திருக்கும் சேரன் தனது இயல்பான நடிப்பால் படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார். சாதாரண சின்ன சொல் அவமானத்தைக்கூட தாங்க இயலாமல் அதை நேருக்கு நேராக எதிர்த்துக் கேட்கும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் பலமே..!

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவராக அவர் நடித்திருக்கும் நடிப்புதான் படத்தை வழி நடத்தியிருக்கிறது. தன் அம்மாவை பெயர் சொல்லி அழைத்தவனையும் பெயர் சொல்லி அழைத்து அதற்குத் தக்க அறிவுரையை சொல்லி திருப்பி அனுப்புவதும்கூட ஒரு வகையான நாகரிகம்தான். இத்தகைய நாகரிகத்துடன்தான் படம் நெடுகிலும் பேசியிருக்கிறார் சேரன்.

நீதிமன்றத்தில், “நான் ஒரு நல்ல மனுஷனா.. எனக்கு விருப்பமான தொழிலை செய்து பிழைப்பவனாக இருக்க விரும்புறேன். என்னை வாழ விடுங்க ஐயா..” என்று சொல்லுமிடத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் ஒட்டு மொத்தக் குரலாய் ஒலித்திருக்கிறது சேரனின் இந்தக் குரல்.

ஆதிக்க சாதியின் தலைவராக லால்.. சாதி வெறி பிடித்தவராக.. தன் கவுரவமே அந்த சாதியில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுபவராக தனது கனமான குரலினாலும், உடல் மொழியாலும் மிரட்டியிருக்கிறார்.

தன் அப்பாவுக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என்று அவர் வருத்தப்படுவதும், தன் மகனே முடி மழிக்க அமர்வதைப் பார்த்தவுடன் சடங்கையும், சாங்கியத்தையும் மறுத்துவிட்டு எழுந்து போவதும் சாதி வெறி இப்போதும் இருக்கும்.. எப்போதும் இருக்கும் என்பதை சொல்ல வைக்கிறது.

இவருக்குப் போட்டியாக லாலின் பங்காளியான வேல.ராமமூர்த்தி, சாதி வெறியில் மதிமயங்கி தனது மகளை கொலை செய்த பாவத்தைக் கழுவுவதற்காக சாதி எதிர்ப்புக் கூட்டத்தில் ஒருவராக இருந்து கொண்டு, சொந்த சாதியின மக்களை எதிர்த்துக் கொண்டு சேரனுக்கு உதவி செய்யும் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

அருள்தாஸ் அந்த சாதிக்கே உரித்தான தோற்றத்துடன், சாதி வெறியையும், அந்தத் திமிரையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எஸ்.பி.யாக மிக முக்கியமான கட்டத்தில் உள்ளே வந்து படத்தினை வேறு தளத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். பல படங்களில் நடித்திருக்கும் அனுபவஸ்தர்போல் லைட்டிங்கையும், ஆர்ட்டிஸ்ட் பொசிஷனையும் பார்த்து கச்சிதமாக நடித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. பாராட்டுக்கள்.

எஸ்.ஏசந்திரசேகரனும், ரவி மரியாவும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக அவரவர் வாதத்தை முன் வைக்கும்போது வசனத்திற்கேற்ப நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.  இவர்களது நீதிமன்ற வசனங்கள்தான் படத்தில் மிகப் பெரிய பக்க பலம். சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

சேரனின் அம்மாவாக நடித்தவரின் அம்மா பாசம், மனைவியின் எடுத்துரைக்கும் நடிப்பு, தங்கை தீப்ஷிகாவின் பரிதவிப்பான நடிப்பு என்று பலரும் மிகச் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு சிறப்பு. சின்ன பட்ஜெட் என்றாலும் வீரியம் குறைவில்லை. பாடல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள், எழவு வீட்டு காட்சிகள் என்று அத்தனையிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பாடல் வரிகள்கூட காதில் விழுந்து கேட்க வைத்துள்ளது. பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார்.

வீர சமரின் கலை இயக்கம் நேர்த்தியாகவுள்ளது. கிராமத்து வீடுகளையும், தெருக்களையும் பிரம்மாண்டமாகவே காட்டியிருக்கிறார்கள். ஆர்.சுதர்ஷனின் படத் தொகுப்பில் படத்தின் தன்மை கொஞ்சமும் மாறவில்லை.

எழவு வீட்டில் அடிக்கடி நடிக்கும் நகைச்சுவை காட்சிகள் படத்தின் சீரியஸ் தன்மையைக் குறைக்கின்றன. மேலும் தீப்ஷிகாவை அருள்தாஸ் அடித்ததன் பின்னால் என்ன நடந்தது என்பதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். சேரனின் அம்மா லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்து தீப்ஷிகாவை பார்க்கும்போதுதான், அவரை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள் என்று நாமாக யூகிக்க வேண்டியுள்ளது.

மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்தும் இன்ஸ்பெக்டரான ‘அந்தோணிசாமி’ என்ற கதாப்பாத்திரப் பெயரை இந்தப் படத்தில் மிக மிக நல்ல எஸ்.பி.யாக காட்டி சமன் செய்திருக்கிறார் இயக்குநர்.

இந்தப் பெயரைப் பார்த்தவுடன் அவரும் கிறிஸ்துவ மதத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று நினைத்து லால் கிண்டல் செய்யும் காட்சியையும் கச்சிதமாகக் காண்பித்துள்ளார் இயக்குநர்.

இதுவரையிலும் வெளிவந்த சாதிய படங்களிலெல்லாம் ஆதிக்க சாதியினரின் கொடுமைகளையும், பட்டியலினத்து மக்கள் சந்திக்கும் கொடூரங்களையும் மட்டுமே காண்பித்திருக்கிறார்கள். இந்தந்த ஊர்களில் இதுபோல் நடந்தது என்றுதான் காண்பித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தில்தான் இந்த அடக்குமுறை அநியாயத்திற்கு, அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கு அதே தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சரியான வழிமுறையையும் காண்பித்திருக்கிறார்கள். இந்த வகையில் இத்திரைப்படம் இந்தியாவின் சாதியப் படங்களின் வரிசையில் மிக, மிக முக்கியமான திரைப்படமாகும்.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தனது வலிமையான எழுத்து மற்றும் சிறப்பான நடிகர், நடிகைகளை சிறந்த முறையில் நடிக்க வைத்திருப்பதன் மூலம், இந்தப் படத்தை கருத்தியல் ரீதியாகவும், காலம் கடந்தாலும் நீடிக்கும் நிலைத்து நிற்கும் வகையிலும் வெற்றி படமாக ஆக்கியுள்ளார்.

இந்த தமிழ்க்குடிமகன்’ திரைப்படம் தற்போதைய கிராமித்து வாழ்வியலை நம் கண் முன்னே நிறுத்தியுள்ளது. இன்றைக்கும் கிராமப் புறங்களில் இது போல் அவரவர் குலத் தொழிலைக் குறிப்பிட்டு மேல் சாதி – கீழ் சாதி என்று பிரித்துப் பார்ப்பது நடைமுறையில் உள்ளது.

சாதிய ரீதியிலான அடிமைத்தனம் இன்னமும் நம் நாட்டில் இருக்கிறது என்பதையும், நாட்டு குடிமகன்கள் அனைவருக்கும் அவர்களுக்குப் பிடித்தமான தொழிலை செய்யும் உரிமை உள்ளது என்பதையும் அந்த அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது இத்திரைப்படம்.

இந்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படம் நிச்சயமாக தமிழ்த், திரைப்படங்களின் வரிசையில், ஏன்… இந்திய திரைப்படங்களிலும் சிறந்த படம் என்ற வரிசையில் இடம் பிடித்துள்ளது.

இந்தப் படத்தை பார்க்கும் தற்போதைய இளைஞர்கள், சக சாதியின இளைஞர்களுடன் நட்புணர்வு கொண்டு சாதியின பாகுபாடு இல்லாமல் பழகி, வாழ்க்கையில் அனைவருக்கும் சுயமரியாதை உண்டு என்பதை காட்டுவார்கள் என்று நம்புவோமாக..!

இதற்கான முதற்படியாக இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும், தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும்.

படக் குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!

RATING : 4.5 / 5

Our Score