ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இறைவன்’.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம்பெருமாள், பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத் தொகுப்பு செய்திருக்கிறார். சண்டை இயக்கம் – டான் அசோக், உடைகள் – அனுவர்த்தன், பிரியா கரண், பிரியா ஹரி, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
இந்தப் புதிய படத்தை ‘வாமணன்’, ‘என்றென்றும் புன்னகை’. ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஐ.அஹமத் இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் அஹமத்தின் முந்தைய படங்களெல்லாம் மென்மையான வகையில் மனிதர்களின் உணர்வுப்பூர்வமான கதைகளை சொல்லியிருந்தன. ஆனால் இந்த ‘இறைவன்’ திரைப்படம், நேருக்கு மாறாக, மிக கொடூரமான வன்முறைக் காட்சிகள் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
இந்த ‘இறைவன்’ சைக்கோ த்ரில்லர் ஜானர் திரைப்படமாகும். இளம் பெண்களை மிக கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் பற்றிய படம் இது. டிரெயிலரில் அது தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போதே நடுங்க வைக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் அஹமது, பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது. “டிரெயிலரை பார்த்த எல்லோருமே சார் இது உங்க படமா..?” என்று என்னிடம் கேட்கிறார்கள். ஒரே மாதிரியான படங்களை தொடர்ந்து எடுக்க முடியாது. வேற, வேற ஜானர்லதான் படங்களை இயக்கணும்ன்னு நினைச்சிருக்கேன்.
அந்த வகையில் என்னுடைய அடுத்தப் படமான இந்த ‘இறைவன்’ திரைப்படம் சைக்கோ க்ரைம் சப்ஜெக்ட்டில் உருவாகியுள்ளது. இந்த வகையான படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்.
ரசிகர்களை நான் எந்த வகையிலும் ஏமாற்ற விரும்பவில்லை. சைக்கோ ஜானர் படத்தை எடுக்கிறேன் என்றால் அந்த ஜானரிலேயே என் படம்தான் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அது தொடர்பான தீவிரமான காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறேன்.
இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு, டிரைலரில் வேறு சில காட்சிகளை வைத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதுதான் என் படம்.. இது இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்காகத்தான் டிரைலரிலேயே அனைத்து வகையான மர்டர் காட்சிகளையும் காட்டியுள்ளேன்.
அதற்காக படம் முழுவதும் இப்படிப்பட்ட காட்சிகள்தான் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இதில் ஒரு அழகான காதல் கதையும் இருக்கிறது. ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடி வெள்ளித் திரையில் வெற்றி ஜோடி என்பதால், படத்தில் வரும் அவர்களின் காதல் கதை, நிச்சயமாக ரசிகர்களை கவரக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயம் படத்தின் தன்மையை விட்டும் விலகக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
அதேபோல், என்னுடைய முந்தைய படங்களைப்போல் இந்தப் படத்திலும் இரண்டு இனிமையான உயிரோட்டமுள்ள பாடல்கள் இருக்கின்றன. முழுப் படத்தையும் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு நடுங்க வைக்கும் உணர்வு மட்டுமே இருக்காது. ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வுதான் இருக்கும்.
நான் ஜெயம் ரவியுடன் ஏற்கெனவே ‘மனிதன்’ படம் செய்திருக்கிறேன். இப்போது இந்த ‘இறைவன்’. ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் பல படங்களில் நடித்து விட்டார். ஏன் விண்வெளிக்குக்கூட அவர் சென்றுவிட்டார். அப்படி ஒரு நடிகரை வைத்து நான் படம் பண்ணும்போது, அந்தக் கதை வித்தியாசமானதாகத்தான் இருக்க வேண்டும்,
அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கக் கூடிய படமாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் அவருக்கும் என்னுடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வம் ஏற்படும். அதனால்தான் இந்த ஜானர் கதையை எழுதினேன். அவருக்கு மட்டுமல்ல… நயன்தாராவுக்கும் இந்தக் கதை பிடித்ததால்தான் அவரும் நடிக்க சம்மதித்தார்.
இந்த படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக காண்பிக்க முயற்சித்திருக்கிறேன், எப்போதும் நடிகர்களின் நடிப்பை முன்னிலைப்படுத்திதான் திரைக்கதை பயணிக்கும். இந்தப் படத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்குமே இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்…” என்றார்.
இந்தப் படத்தை வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் இறுதி வாரத்தில் மிலாடி நபி விடுமுறையுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அந்த விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொள்ள ’இறைவன்’ படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதே செப்டம்பர் இறுதி வாரத்தில்தான் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரபாஸ் நடித்த ’சலார்’ படமும் வெளியாகவுள்ளது. அந்தப் படத்துடன் ’இறைவன்’ படம் மோத வாய்ப்புள்ளது.
தற்போது படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை செப்டம்பர் 3-ம் தேதி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த டீசரை பார்ப்பவர்கள் நிச்சயம் பயத்தின் உச்சத்துக்கே செல்வார்கள் என்பது உறுதி.
‘இறைவன்’ படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.









