full screen background image

“லாக் டவுன் காலத்தில் நடக்கும் கதைதான் படமே..” – ‘லாக் டவுன் டைரி’ படம் பற்றி இயக்குநரின் விளக்கம்!

“லாக் டவுன் காலத்தில் நடக்கும் கதைதான் படமே..” – ‘லாக் டவுன் டைரி’ படம் பற்றி இயக்குநரின் விளக்கம்!

அங்கிதா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.முரளி அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள படம் “லாக் டவுன் டைரி”.

900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை – ஜாசி கிஃப்ட் & AB முரளி.

இந்தப் படத்தில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேற்று இரவு நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன்,  பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை,  எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான்,  வசனகர்த்தா பிரபாகரன்,  எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜாலி பாஸ்டியன் பேசும்போது,  “நான் கிட்டத்தட்ட 900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரிடமும் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படத்தை.இயக்கியிருக்கிறேன். 2-வது படமாக இந்த ‘லாக் டவுன் டைரி’ என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். 

கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில்  மக்கள் எவ்வளவு  சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.  வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன.

இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன் இளம் காதல்  ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து ‘லாக் டவுன் டைரி’ படம் உருவாகியிருக்கிறது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல; குடும்பங்களின் கதையையும் உள்ளடக்கியது.

இப்படத்தில் இடம் பெறும் லாக் டவுன் பற்றிய பாடலை நான் எழுதி இருப்பதுடன் திரைக்கதை, ஸ்டண்ட் அமைத்து இயக்கி உள்ளேன். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

வசனகர்த்தா பிரபாகரன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு ஒரு பகுதிதான். என் நண்பர் எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தின் ஒருபகுதி வசனம் எழுதி உள்ளார். இப்படம் லாக் டவுன் கால கட்டத்தை பதிவு செய்யும் படமாக   இருக்கும்.

இப்படத்தின் நாயகனான விஹான் ஜாலி தென்னக சினிமாவில் உள்ள எல்லா ஹீரோக்களுக்கும் நிழல் ஹீரோவாக அதாவது டூப் ஹீரோவாக இருந்தவர். அவரை வைத்து ஜாக்கிசான் பணியில் ஒரு படத்தைதான் ஜாலி மாஸ்டர் இயக்குவார் என்று நினைத்தேன். ஆனால் ஒரு அருமையான கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்தில் டாக்சி டிரைவராக விஹான் ஜாலி நடித்திருக்கிறார். ஒரு அழகான காதல் கதை. கணவன், மனைவி குடும்ப சூழலில் நிறைவான ஒரு படமாக இந்த லாக் டவுன் டைரி படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு உங்கள் ஆதரவு தேவை…” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “ஜாலி மாஸ்டர் என்னை அழைத்து நீங்க எப்படி  வேண்டுமென்றாலும் பேசி நடிங்க என்று சுதந்திரம் தந்தார்.  ஹீரோவின் வளர்ப்பு தந்தையாக மெக்கானிக் ஷெட் ஓனராக  என்னை நடிக்க வைத்திருக்கிறார்.  நல்ல கதை அம்சம் கொண்ட படம். ஆக்ஷன் சென்டிமென்ட், காமெடி எல்லாம் இதில் உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.

நடிகை பிரவீனா பேசும்போது, “நான் நிறைய தமிழ், மலையாள படங்களில் நடித்துதிருக்கிறேன் நல்ல பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிப்பேன். லாக் டவுன் டைரி படத்தில் சிறிய பாத்திரம்தான். 2 நாட்கள் கால்ஷீட்தான் கேட்டார்கள்.  இவ்வளவு சிறிய பாத்திரத்தில் ஏன் நடிக்க வேண்டும்.. மறுத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால், இயக்குநர் என்னிடம் படத்தின் கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை. இதில் நடித்தே ஆக வேண்டும் என்று நினைத்து ஒப்புக் கொண்டேன். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். ஹீரோ பிரமாதமாக நடித்திருக்கிறார். தியேட்டரில் சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாஸ் பேசும்போது, “லாக் டவுனில் எவ்வளவு  கஷ்டப்பட்டோமோ, அப்படித்தான் இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டேன். அவ்வளவு கடினமான காட்சிகளை இயக்குநர் அமைப்பார். இந்த படம் ஊட்டி, பெங்களூர் என இரண்டு இடங்களில் அழகாக படமாக்கப் பட்டது. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்…” என்றார்.

இயக்குநர், வசனகர்த்தாவான லியாகத் அலிகான் பேசும்போது, “இந்த லாக் டவுன் டைரி படத்தை பொறுத்தவரை பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் டிரெய்லரில் நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது. பைட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் இயக்கியிருக்கும் இப்படத்தில் இப்படி ஒரு சமூக அக்கறை இருக்குமா என்று டிரெய்லரை பார்க்கும்போதே நினைத்தேன்.

அப்போதுதான் இதில் வசனகர்த்தா பிரபாகர் இணைந்திருப்பதை  கண்டேன். எந்தப் படத்திலும் ஸ்கிரிப்ட்தான் ஹீரோ. இதை என்னிடம் மம்முட்டி சொல்வார். சமீபத்தில் வெற்றி பெற்ற  சின்ன படங்களுக்கான காரணம்  ஸ்கிரிப்ட் நன்றாக இருந்ததுதான். மற்ற மொழிகளில் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. தமிழில் எழுத்தாளர்கள் என்ற ஜாதியையே அழித்துவிட்டார்கள். எத்தனையோ இயக்குனர்கள் எழுத்தாளர்களிடம் கதைகளை வாங்குகிறார்கள். அந்தப் படங்களும் வெற்றி பெறுகின்றன. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.

ஸ்டண்ட் யூனியன் தலைவர் தவசி ராஜ் பேசும்போது, “உணமை சம்பவத்தை படமாக்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஏதோ ஒரு ஊரில் நடந்த சம்பவத்தைத்தான் படமாக்கி இருப்பார்கள். முதன்முறையாக ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த சம்பவம் லாக் டவுன் டைரி படத்தில் படமாக்கி இருக்கிறது. இந்த படத்தை நிச்சயமாக வெற்றி படமாக்க வேண்டும்.

இந்தப் படத்தை ஜாலி மாஸ்டர் இயக்கியிருக் கிறார். தன் மகனை தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான்  இப்படத்தை இயக்கி உள்ளார். வந்தாரை  வாழ வைக்கும் தமிழகம் இவரையும் வாழ வைக்கும்…” என்றார்.

பெப்சி விஜயன் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் ஜாலி மாஸ்டர் பைக் ஜம்பர்.. அவரது மகன் இப்படத்தின் ஹீரோ டிரக்கையே  ஜம்ப் செய்திருக்கிறார். உயிரை பணயம் வைத்து அவர் இதெல்லாம் செய்திருக்கிறார். இதில் ஹீரோவை ஒரு  தொழிலாளியாகத்தான் காட்டியிருக்கிறார்கள். இந்த பட டிரெய்லரை பார்க்கும்போதே இதயத்தை பிசைவது போன்ற ஒரு கதையை சொல்லப் போகிறார்கள் என்பது தெரிந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

படத்தின் நாயகனான விஹான் ஜாலி பேசும்போது, “எனது தந்தை இயக்குநர் ஜாலி மாஸ்டர், தயாரிப்பாளர் எஸ்.முரளி இருவரும் சேர்ந்து இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் நான் நாயகனாக அறிமுகமாகிறேன். என்னை ஏற்றுக் கொண்டு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவரான கே.ராஜன் பேசும்போது, “இந்த லாக் டவுன் டைரி படத்தின் டிரெய்லர்,  பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது. படமும் குடும்பப் பாங்காக இருக்கும் என்று தெரிகிறது. இங்கும் பேசிய ஹீரோ ஆங்கிலத்தில் பேசினார்.  இனி அவர்  தமிழில் பேச வேண்டும். அவரது நடிப்பு  டிரெய்லரில் சிறப்பாக இருந்தது.

தயாரிப்பாளர்களுக்கு  நன்மை தரக் கூடிய விஷயங்கள் சங்கங்கள் மூலமாக நடக்க உள்ளது. இன்று திரையுலகினர் தயாரிப்பாளர்கள்,  விநியோகஸ்தர்கள் தமிழக முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து தமிழ் திரையுலகுக்கு வேண்டிய நன்மைகள் செய்ய கேட்டுக் கொண்டோம். மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை திரையுலகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி தந்திருக்கிறார்.

நடிகர்கள், தயாரிப்பாளரிடம் போடும் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். 80 சதவீதம் பேர் மதிக்கிறார்கள். 20 சதவீதம்.பேர் மதிப்பதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி நடிகர் சங்கத்துடன்  பேசி வருகிறோம்.

தமிழகத்துக்கு ரஜினிகாந்த் வந்தார் அவரை தமிழக மக்கள் வாழ வைத்தார்கள் அவரும் தமிழக மக்கள் மீது பாசமாக இருக்கிறார்.  அதேபோல் தமிழில் நடிக்க வந்திருக்கும் இப்பட ஹீரோவையும் தமிழக மக்கள் வாழ வைப்பார்கள்..” என்றார்.

இவ்விழாவின் இறுதியில் இயக்குநர் ஜாலி பாஸ்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Our Score