full screen background image

சமத்துவ மனிதன் யார் என்பதைச் சொல்ல வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம்..!

சமத்துவ மனிதன் யார் என்பதைச் சொல்ல வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம்..!

தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். நாயகியாக ‘செங்களம்’ வெப் சீரிஸில் நாச்சியாராக நடித்து பலரது பாராட்டுகளை வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார். மேலும், MIME கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.  இப்படத்தை இயக்கும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவராவார். 

‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு  செய்துள்ளார். ராமர் படத் தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்’, ‘விடுதலை’ போன்ற படங்களுக்கு படத் தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாயகன் விஜித் 20, 23 மற்றும் 46 வயது உள்ளவராக தோன்றுகிறார். மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் கடும் பயிற்சி எடுத்து, உடல் எடையை கூட்டி, மீண்டும் குறைத்து இப்படத்தில் மூன்றுவிதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

பல படங்களில் நடித்த பிறகுதான் இந்த மாதிரி பெரிய ரிஸ்காக உடல் எடையை குறைப்பது.. கூட்டுவது என முன்னணி நடிகர்கள் செய்வது வழக்கம். அதை புதுமுகமாக அறிமுகமாகும்போதே உற்சாகத்தோடு.. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும்.. படப் பிடிப்பில் கை தட்டல் பெற்றுள்ளார் நாயகன்.

நாயகன் மட்டுமல்லாது இப்படத்தின் நாயகி மற்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே மூன்று காலகட்டங்களில் மூன்றுவித தோற்றங்களில் நடித்துள்ளனர். 

இதுவரையிலான தமிழ்த் திரையுல வரலாற்றில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம்.

‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’ என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன்.

வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதைவிட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்தப் படம்.

இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது. 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது. இதற்காக படக் குழு அக்காலத்திய படங்கள் பத்திரிகை செய்திகளை ஆராய்ந்து, கடும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, நேரடி லொகேஷன்களில் தத்ரூபமாக அந்தக் காலக்கட்டத்தை திரையில் கொண்டு வருகிறார்கள்.

படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Our Score