full screen background image

தி கிரேட் இந்தியன் கிச்சன் – சினிமா விமர்சனம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் – சினிமா விமர்சனம்

சென்ற 2021-ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.

Masala Pix நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் R.கண்ணன், M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தினைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிச்சந்திரன், யோகிபாபு, போஸ்டர் நந்தகுமார், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்னர்.

தயாரிப்பு  & இயக்கம் – R கண்ணன், கதை, திரைக்கதை – ஜியோ பேபி, ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியெம், இசை – ஜெர்ரி சில்வெஸ்டர், வசனம் – சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார், கலை இயக்கம் – ராஜ்குமார்,  உடை வடிவமைப்பு – பிரதீபா பாண்டியன், புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – அய்யாபிள்ளை, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ஓம்சரண், பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.

கனா’, ‘க.பெ.ரணசிங்கம்’ என தரமான வெற்றிப் படங்களில் அழுத்தமான கதாப்பாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களக் குவித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நம் இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களது வாழ்க்கையின் பெரும் பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது இந்த  தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம்.

பட்டப் படிப்பும் பயின்று, பரத நாட்டியமும் பயின்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆயிரம் கனவுகளுடன் ஆசிரியராகப் பணியாற்றும் ராகுலைத் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டில் குடியேறுகிறார்.

புகுந்த வீட்டில் கணவன், மாமியார், மாமனார் என்று கூட்டுக் குடும்பம். வீட்டில் இருக்கும் இரண்டு ஆண்களுக்குமே சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. வீட்டில் எந்த வேலையையும் செய்யவே மாட்டார்கள்.

மாமனாரான போஸ்டர் நந்தகுமாருக்கு விறகு அடுப்பில் சோறை வடித்துக் கொடுத்தால்தான் சாப்பிடுவார். அம்மியில் அரைத்த சட்னியைத்தான் சாப்பிடுவார். காய்கறிகளை சாப்பிட்டாலும் டைனிங் டேபிளேயே அப்படியே துப்பி வைப்பார்கள் இருவரும். மாமனார் பல் துலக்க மாமியாரே பிரஷ்ஷில் பேஸ்ட்டை வைத்து எடுத்துக் கொண்டு போய் மாமனாரின் கைகளில் கொடுப்பார். அதேபோல் மாமனார் வெளியில் போகும்போது அவரது செருப்பை எடுத்துக் கொண்டு போய் அவர் முன் பவ்யமாய் போடுவார் மாமியார். இத்தனை அராஜகங்களை செய்து அமைதியாய் நல்லவர்கள் போலிருக்கும் இந்த ஆண்கள் குடியிருக்கும் வீட்டில் ஏகப்பட்ட கனவுகளோடு நுழையும் ஐஸ்வர்யாவுக்கு அது மிக சில நாட்களிலேயே நரகமாகிறது.

கரப்பவதியாய் இருக்கும் தன் மகளைப் பார்க்க மாமியார் ஊருக்குப் போய்விட தன்னந்தனியாய் மாட்டிக் கொள்கிறார் ஐஸ்வர்யா. எப்போதும்போல இருக்கும் இடத்தில் இருந்தே அனைத்தையும் ஏவிவிட்டு பெற்றுக் கொள்ளும் மாமனாரும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராத்திரியானால் “லைட்டை அணைக்கலாமா..?” என்று கேட்கும் கணவனும் ஐஸ்வர்யாவை பாடாய் படுத்துகிறார்கள்.

இது போதாதென்று மாதவிடாய் காலங்களில் சமையல்கட்டுக்குள்ளேயே வரக் கூடாது என்று சொல்லி அறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். இந்தக் கொடுமையில் இருந்து ஐஸ்வர்யா தப்பித்தாரா.. இல்லையா.. முடிவு என்ன ஆனது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்குப் படம் நடிப்பில் மின்னுகிறார். கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து, இயக்குநர் சொல்லும் மீட்டருக்கு மேலேயே நடித்துப் பெயர் வாங்குகிறார்.

அமைதியின் திருவுருவாய்.. தனது கஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு.. கணவரை எதிர்த்துப் பேசாமல்.. மாமனாரை கண்டு பயந்து.. சமையல்கட்டே வாழ்க்கை என்று வாழும் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு 100 சதவிகிதம் உண்மையாய் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

தனது தாயிடம் போனில் பேசி பிரச்சினையை சொல்லி ஆலோசனை கேட்டு அங்கேயும் அடங்கிப் போ என்ற ஆலோசனையே கிடைக்க.. அந்த விரக்தியை முகத்தில் காட்டும்போது பாவமாகிப் போகிறார் ஐஸ். அதே நேரம் கிளைமாக்ஸில் “நீயே போய் எடுத்துக்க மாட்டியா…” என்று தனது தம்பியிடம் சீறுகின்ற இடத்தில் மிகப் பிரமாதமான தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஐஸ்.

இவரது கணவரான ராகுல் ஆணாதிக்கக் குணத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் முட்டை தோசை போடத் தெரியுமா என்று கேட்பதில் துவங்கி, காபி ரெடியா என்று கேட்கும்வரையிலும் தனது வில்லத்தனமான நடிப்பை ஹீரோ முகத்தை வைத்துக் கொண்டே நடித்திருக்கிறார்.

அதிலும் ஹோட்டலில் டேபிள் டீஸண்டை பாலோ பண்றீங்களா என்று ஐஸ் கேட்டவுடன் கோபப்படுவதும், பின்பு வீட்டிலும் அதே பேச்சையெடுத்து நைச்சியமாக ஐஸை மன்னிப்பு கேட்க வைக்கும் ஆணாதிக்கத் திமிரைக் காட்டுமிடத்திலும் ராகுல் பாஸாகிவிட்டார்.

பெரிய மனிதர் போலிருக்கும் மாமனார் நந்தகுமார், எதைப் பற்றியும் கவலைப்படாதவராக.. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஓய்வு வேண்டும். அவர்களும் மனிதர்கள்தானே என்றெல்லாம் நினைக்கவே நினைக்காத ஆணாக அழுத்தமாக நடித்துள்ளார். பார்த்தாலே பத்திட்டு வருது என்று தியேட்டருக்கு வரும் பெண்கள் நிச்சயமாக இவரைப் பார்த்துதான் சொல்வார்கள்.

மூன்று நாட்கள் மட்டும் சமையல் வேலைக்கு வரும் கலைராணி தனது அதீத மிரட்டல் மொழியாலும், பேச்சாலும் ஐஸ்வர்யாவை விரட்டுவதிலும், மாமியார் போலவே ஆக்கிப் போட்டுவிட்டுப் போவதிலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகிப் போகிறார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு வீட்டுக்குள்ளேயே பார்க்காத பல பிரேம்களிலும், கோணங்களிலும் பார்க்க வைக்கிறது. சின்ன சமையல்கட்டை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். ஒலிப்பதிவாளருக்கும், ஒலி வடிவமைப்பு செய்தவருக்கும் மிகப் பெரிய பாராட்டு. சமையல்கட்டில் பொருட்களைப் பயன்படுத்தும் ஒலிகளை சேதாரமில்லாமல் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்ரியின் இசையில் படத்தின் இறுதியில் ஒலிக்கும் சிறு தெய்வம் பாடல் நடனத்துடன் பார்ப்பதற்கு கொள்ளை அழகு.

ன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்தினைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் உணர்வுகளுக்கும், பேச்சுக்களுக்கும் மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் இதுதான் நடக்கிறது.  இதைத்தான் இந்தப் படத்தில் கேள்விக்குறியாக்குகிறார்கள்.

பெண்ணுக்கும் ஓய்வு வேண்டும். ஆணுக்கும் சமையல் பொறுப்பு வேண்டும். ஆண், பெண் இருவரும் வீட்டில் அனைத்து வேலைகளையும் பகிர்தல் வேண்டும். ஆணுக்கு பெண் அடிமையில்லை. ஆண் என்ன சுதந்திரத்தை அனுபவிக்கிறானோ அதை சுதந்திரத்தை அனுபவிக்க பெண்ணுக்கும் அனுமதியுண்டு என்ற சமத்துவம் என்றைக்கு உருவாகிறதோ அன்றைக்குத்தான் குடும்பங்களும் நன்றாக இருக்கும், அந்தச் சமூகமும் நன்றாக இருக்கும். இதைத்தான் இந்தப் படமும் சொல்ல வருகிறது.

தியேட்டருக்கு வந்து இந்தப் படத்தைப் பார்க்கும் ஆண்களில் பாதிப் பேராவது திருந்தி வீடுகளில் பெண்களை மதித்து, அனுசரனையுடன் நடந்து கொண்டால் அதுவே இந்தப் படத்தின் வெற்றியைக் குறிக்கும்..!

அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்..!

RATING : 4.5 / 5

Our Score