full screen background image

இயக்குநர்-நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநர்-நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

தமிழ் திரையுலகில் மூத்த இயக்குநர், நடிகரான டி.பி.கஜேந்திரன் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர், இயக்குநர்கள் விசு, இராம நாராயணன் மூவரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் டி.பி.கஜேந்திரன். 60-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

1988-ம் ஆண்டு வீடு, மனைவி, மக்கள்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

இதன் பின்பு, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சி’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பந்தா பரமசிவன்’, ‘சீனா தானா’, ‘மகனே என் மருமகனே’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் திரைப்பட இயக்குநராக அவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். “ட்ராலி ஃபார்வர்டு” என்று அவர் பேசிய வசனம் இப்போதும் சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டிங் லிஸ்ட்டில் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாகத்தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் இன்று காலை காலமானார்.

நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில், இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரனும் காலமானது தமிழ் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Our Score