full screen background image

ஜாஸ்பர் – சினிமா விமர்சனம்

ஜாஸ்பர் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம்.பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, ரமேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – டி.யுவராஜ், இசை – குமரன் சிவமணி, ஒளிப்பதிவு – மணிகண்டராஜா, படத் தொகுப்பு – அபிலாஷ் பாலச்சந்திரன், நடன இயக்கம் – அப்பாஸ், சண்டை இயக்கம் – வினோத் பிரபாகர், குங்பூ ராஜூ, பாடல்கள் – குட்டி ரேவதி, அறிவு, உடைகள் வடிவமைப்பு – ப்ரீத்தி, பத்திரிகை தொடர்பு – டைமண்ட் பாபு.

முன்னாள் நிழலுக தாதாவான ஜாஸ்பர், இளம் வயதில் தன் மனைவி தனது எதிரிகளால் கொல்லப்பட்ட பின்பு தனது மகனை அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டு, வேறு ஊருக்கு வந்து அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய பக்கத்து வீட்டுக்கு விவேக் ராஜகோபாலும், அவரது மனைவியும், சிறு வயது மகனும் குடியேறுகிறார்கள். விவேக் பக்கத்தில் இருக்கும் ஒரு வங்கியில் மேனேஜராக வேலை பார்க்கிறார்.

அவரிடம் உள்ளூரை சேர்ந்த வின்சென்ட் குரூப் வந்து 100 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும்படி மிரட்டுகிறது. விவேக் மறுக்க.. விவேக்கின் மனைவி மற்றும் மகனை பிணைக் கைதியாக்கி விவேக்கை நெருக்குகிறது ரவுடிகள் டீம்.

இந்த நேரத்தில் விவேக் வங்கியின் அலாரத்தை ஒலிக்க வைக்க.. கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இதனால் விவேக்கை மட்டும் அந்தக் கும்பல் கடத்தி செல்கிறது. விவேக் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அவரது மனைவி பதறுகிறார். ஜாஸ்பரிடமும் சொல்கிறார். முதலில் இதைக் கண்டு கொள்ளாத ஜாஸ்பர் விவேக்கின் விரல் ஒன்றை வெட்டி பார்சலில் அனுப்பி வைத்ததைப் பார்த்தவுடன் கோபம் கொண்டு களத்தில் குதிக்கிறார்.

தானே நேரடியாக அந்தக் கும்பலைக் கண்டுபிடிக்கச் செல்கிறார். பல்வேறு வழிகளில் அவர்களை நெருங்கும் ஜாஸ்பரை போலீஸூம் பின் தொடர்கிறது. கடைசியில் என்னவாகிறது..? ஜாஸ்பர் இதில் ஏன் தலையிட்டார்..? விவேக் மீட்கப்பட்டாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம் மீதிக் கதை.

வயதான ஜாஸ்பர் வேடத்தில் நடித்திருக்கும் சி.எம்.பாலாவுக்கு அவரது உடலமைப்பே பலமாக அமைந்துள்ளது. முரட்டுத்தனமான தனது நடிப்பினை காண்பித்திருக்கிறார். இளம் வயது ஜாஸ்பராகவும், அவரது மகனாகவும் நடித்திருக்கும் விவேக் ராஜகோபால் இரண்டு வேடங்களிலும் தனது மாறுப்பட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

இருவருமே தத்தமது உடல் மொழியில் ஆவேசத்தைக் காட்டியிருக்கிறார்கள். விவேக் ராஜகோபால் கடத்தப்பட்ட பின்பு படும் அவஸ்தையை முகத்தில் காட்டி பரிதாபத்தைப் பெறுகிறார். பெரியவரான ஜாஸ்பரின்  உடலில் இருக்கும் ஒரு நோயே அவரை சூப்பர் மேன் என்றாக்கிவிடுகிறது. அது திரைக்கதைக்கும் பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இள வயது ஜாஸ்பரின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் வேடம் சிறப்பு. அவருடைய திடீர் மரணம் ஜாஸ்பருக்கு மட்டுமல்ல; நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விவேக் ராஜகோபாலின் மனைவியாக நடித்திருக்கும் லாவண்யாவும் தனது அளவான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருக்கான ஸ்கோப் அதிகம் இல்லாததால் அதிகம் கவரவில்லை.

பலரையும் மூளைச் சலவை செய்து தனி இயக்கம் நடத்தி வரும் ராஜ் கலேஷின் உருவமும், குரலும் அந்தக் கொலைக் கூட்டத் தலைவன் என்பதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்தின் உண்மையான வடிவம் என்ன.. நோக்கம் என்ன.. எதற்காக அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான விளக்கவுரை இல்லாததால் ஏதோ ஒரு குழு என்ற குழப்பத்துடனேயே அவர்களைப் பார்க்க முடிகிறது.

கதாநாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச், மற்றும் வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் இரண்டையும் எழுதியிருக்கும்விதமே பாராட்டுக்குரியது.

ஒளிப்பதிவாளர் மணிகண்ட ராஜாவின் ஒளிப்பதிவில் குறையில்லை. திரைக் காட்சிகளுக்கேற்ப ஒளிப்பதிவின் தன்மை அமைந்து இயக்குநருக்கு உறுதுணையாக இருக்கிறது. சில காட்சிகளில் ஒளிப்பதிவிலும் போதாமை தெரிகிறது.

டிரம்ஸ் சிவமணியின் மகனான குமரன் சிவமணி இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையின் தேவையை உணர்ந்து இசையமைத்திருக்கிறார்.

படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் டி.யுவராஜ் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முனைந்திருக்கிறார். ஆனால் அதில் பாதி வெற்றிதான் கிடைத்திருக்கிறது.  

இந்தப் படம் வழக்கமான ஆக்‌ஷன் கதையில் உருவானது என்றாலும் திரைக்கதையை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார். ஆனால் அழுத்தமில்லாத திரைக்கதையினால் சுவாரஸ்யம் எதுவும் கிட்டவில்லை.

மேலும் இளம் வயது ஜாஸ்பர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளில் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தைக் கொடுத்து, பெரியவரான ஜாஸ்பரின் தேடுதல் வேட்டையை ரசிக்க வைக்க விடாமல் செய்துள்ளது.

பெரியவர் ஜாஸ்பரை பற்றிப் பலரும் உயர்த்தி. உயர்த்திப் பேசுவதில் காட்டியிருக்கும் அக்கறையையும், முனைப்பையும் திரைக்கதையில் காட்டியிருக்கலாம். ஜாஸ்பருக்கு இருக்கும் சிறப்புத் தகுதியினால் அவருக்குக் கிடைத்த வெகுமதிகள் என்ன.. அவர் என்னென்ன சாதித்தார் என்பதையும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் அந்தப் புகழுரைகள் நேர் செய்யப்பட்டிருக்கும். அவைகள் இல்லாததால் பொய்யான புகழுரைகளாகவே போய்விட்டது.

இன்னும் கொஞ்சம் நேரம் கதை, திரைக்கதையில் வேலை பார்த்த பின்பு படத்தை உருவாக்கியிருக்கலாம்..!

RATING : 2.5 / 5

Our Score