இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.
சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2019-ம் ஆண்டே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது.
அண்மையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘தட்டிப் புட்டா தட்டிப் புட்டா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார்.
இதனையயடுத்து ‘மாமனிதன்’ படம் மே 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு இந்தப் படம் வரும் ஜூன் 24-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் இந்தப் படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்படி ஒரு நாள் முன்னதாக ஜூன் 23-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை படக் குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ள போஸ்டர்களின் மூலமாக நேற்று உறுதி செய்துள்ளனர்.
விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவராக இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமியின் பிரத்யேக ஸ்டைலில் குடும்ப படமாக இந்த ‘மாமனிதன்’ படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘இடி முழக்கம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.









