இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான ‘அரவிந்தன்’ படம் கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியன்று வெளியானது.
இதனால் யுவன் சங்கர் ராஜா தான் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நேற்றைக்கு நிறைவு செய்தார்.
இதையொட்டி பத்திரிகையாளர்களை நேற்று மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சந்தித்துப் பேசினார்.
அந்தச் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “இந்த 25 வருடங்கள் எப்படி வேகமாக சென்றது என்றே எனக்கு தெரியவில்லை.
எனக்கு முதலில் இருந்தே இசையில்தான் ஆர்வம். நடிப்பில் ஆர்வம் இல்லை. படிப்பில் சுமாராகத்தான் இருந்தேன். பின்பு சிவா ஸார் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டேன். இப்போது 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
16 வயது சிறுவனாக ‘அரவிந்தன்’ படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி, இன்று ‘வலிமை’வரையிலும் வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன.
இதற்காக என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த 25 வருடங்களைக் கடந்திருக்கவே முடியாது. இதற்காக என் ஆழ் மனதிலிருந்து அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அன்புக்கும், ஆதரவுக்கும் தகுதியான இசையை அமைப்பது மட்டுமே எனது குறிக்கோள்.
இதுவரையான என் இசைப் பயணம் மகிழ்ச்சியாகவும், மேஜிக்காகவும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது.
என் தந்தைக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். அப்பாவிடம் “நான் உள்ள வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது” என்றதற்கு அவர் அதிகம் ரியாக்சன் காட்டாமல், “ஓ… அப்படியா?!” என்றார். இந்தத் தருணத்தில் என் அம்மாவை நான் ரொம்பவும் மிஸ் பண்றேன். என் நினைவில் என்றும் இருப்பார். அம்மா இல்லாததை என் மனைவியும், மகளும் நிறைவு செய்கிறார்கள்.
நான் பணியாற்றிய கவிஞர்களில் நா.முத்துக்குமார் எப்போதுமே ஸ்பெஷல்தான். நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்களில் வேலை செய்துள்ளேன். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன.
நான் பயணங்களின்போது அப்பாவின் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பேன். என் மனைவி ‘போதும் பாட்டை மாத்துங்க’ன்னு சொல்ற அளவுக்குப் கேட்பேன்.
விஜய் சாருடன் இருக்கும் ஜெகதீஷ், “விஜய் சார் மகன் ‘யுவனிசம்’ என்ற டிசர்ட் போட்டுக் கொண்டு இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பினார். பிறகு நான் விஜய் சாரை பார்க்கச் சென்றபோது, “நான்தான் உங்களுக்கு போட்டோவை ஜெகதீஷிடம் அனுப்பச் சொன்னேன். என் பையன் உங்களோட வெறித்தனமான ஃபேன்” என்றார் விஜய் சார்.
ஊடக நண்பர்களுக்கு எனது நன்றிகள். உங்களின் ‘பிஜிஎம் கிங்’ ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ உள்ளிட்ட பட்டங்கள்தான் இதுவரை நான் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமாக அமைந்தது.
என் ரசிகர்களின் அன்புக்கு முன்னதாக விருதுகள் எனக்கு பெரிய விஷயமே அல்ல. ரசிர்களின் அன்புதான் என்னை முன்னோக்கி ஓட வைக்கிறது.
அடுத்து நான் ஒரு படத்தை இயக்குவதற்காக கதை எழுதி வைத்துள்ளேன். இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் கண்டிப்பாக இயக்குவேன். ஆனால், அது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக இருக்கும்..” என்றார்.









