நடிகர் விஜய் சேதுபதி ஒரு நாளைக்கூட வீணாக்காமல், ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். தினமும் ஷூட்டிங்கிற்குப் போகும் ஒரே நடிகர் இவராகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறார். வரும் 2024-ம் ஆண்டு இறுதிவரையிலும் விஜய் சேதுபதி நடித்துக் கொடுத்தாக வேண்டும். அப்படி அவரது டைரி ஹவுஸ்புல்லாக இருக்கிறது.
இந்த நேரத்திலும் தனது நண்பர்களை மறக்காமல் அவர்களுக்கு உதவி செய்வதிலும் விஜய் சேதுபதி தயக்கம் காட்டுவதில்லை. பல்வேறு நேர நெருக்கடியிலும் நண்பர்களின் படங்களின் பிரமோஷனில் விஜய் சேதுபதி காட்டும் ஆர்வத்தையும், உதவியையும் மற்ற நடிகர்கள் செய்வதில்லை என்பது அப்பட்டமான உண்மை.
இந்த நேரத்தில் அதே நட்புக்காக ஒரு திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியாகவே அவர் தோன்றியிருக்கிறார்.
அந்தப் படம் ‘அழகிய கண்ணே’. அந்தப் படத்தின் இயக்குநர் விஜய்குமார். இவர் இயக்குநர் சீனு ராமசாமியின் உடன் பிறந்த தம்பி. விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் இருந்து சீனு ராமசாமியின் அனைத்துப் படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த விஜய்குமாருடன் தனது முதல் படத்தில் இருந்தே மிக நெருங்கிய நட்புடன் இருந்து வந்தார் விஜய் சேதுபதி.
இப்போது விஜய்குமார் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படத்தில் “ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்க முடியுமா..?” என்று விஜயகுமார் கேட்டவுடன் சட்டென்று ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி சொன்னதுபோலவே டைட் கால்ஷீட்டிலும் ஒரு நாளை ஒதுக்கி நடித்துக் கொடுத்துவிட்டாராம்.
பெருமையோடு சொல்கிறார் இயக்குநர் விஜய்குமார். நட்புன்னா இப்படி இருக்கணும்..!











