ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே.’
இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் இருவரும் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வாணி போஜன் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி, ராம் திலக்குடன் இணைந்து ஒரு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து, இசை – லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு – விது அயன்னா, படத் தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – முகம்மது சுபையர், சண்டை இயக்கம் – ராம்குமார், பாடல்கள் – கோ சேஷா, புகைப்படம் – ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சேது ராமலிங்கம், பூர்னேஷ், நிர்வாக தயாரிப்பு – நோவா.
வரும் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று காதலை ஃப்ரஷ்ஷாக சொல்லும், இளமை துள்ளும் காதல் படைப்பாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையொட்டி படத்தின் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் ஆகியோர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “இந்த ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடங்களாக இயக்குநர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம்.
தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால் காதல் கதையாக பண்ணலாம்னு முடிவு பண்ணி பண்ணதுதான் இந்தப் படம். படத்தில் நாயகியின் ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் பண்ணினா நல்லாருக்கும்னு இரண்டு பேரும் நினைத்தோம்.
அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கதையைக் கேட்டதும் அவங்களுக்கும் பிடிச்சிருந்தது. படமே அவங்களை சுத்திதான் நடக்கும். ரித்திகா என்னுடன் மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும்போது எனக்கு உதவியாக இருந்தது.
வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு தமிழ்ல இதுதான் முதல் படம். நல்லா பண்ணியிருக்காங்க.
அப்புறம் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒண்ணு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள்.
எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்யத்தான் ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை. அதனால் இந்தப் படம் செய்யலாம் எனத் தோன்றியது. அக்கா அபிநயா செல்வம்தான் இந்தக் கதையை முதலில் நம்பினார். அப்புறம் டில்லி பாபு சார் ராட்சசன் படத்திற்கு பிறகு இப்படத்தை நம்பி எடுத்தார். இருவருக்கும் எனது நன்றி.
இந்தப் படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்…” என்றார்.
நடிகை ரித்திகா சிங் பேசும்போது, “நான் அதிகமாக படங்கள் செய்வதில்லை. நல்ல படங்கள் மட்டுமே செய்யலாம்னு வெயிட் பண்ணேன். வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுத்து பிடித்ததை செய்தால் போதுமென்று நினைத்தேன். இந்தக் கதையைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அசோக் செல்வன் நடிக்கும்போது எனக்கு ரொம்பவும் உதவியா இருந்தார். விஜய் சேதுபதியுடன் எனக்குக் காட்சிகள் இல்ல. ஆனால் படப்பிடிப்பிற்கு சென்று ஒரு நாள் அவரை சந்தித்தேன். அவருடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது நாங்கள் இருவரும் நிறைய பேசினோம். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
நான் செய்யும் கதாப்பாத்திரங்கள் எனக்கு பிடிக்க வேண்டும். படம் ஓடுகிறதா, இல்லையா, என்பது வேறு விசயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். இபடத்தில் மிக சந்தோஷமாக இருந்தேன். படம் இளைஞர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது. எல்லோருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும்…” என்றார்.
Sakthi Film Factory நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.












