சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் ‘அயலான்’!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் ‘அயலான்’!

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப் பெரும் பட்ஜெட்டில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் 24 AM நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.D.ராஜா தயாரிக்கும் படத்திற்கு ‘அயலான்’  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான அறிவியல் புனைவு படமாக உருவாகும் இந்த ‘அயலான்’ இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் யோகிபாபு, கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அகாடமி அவார்ட் வின்னர்  A.R.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத் தொகுப்பு செய்கிறார்.

24 AM நிறுவனத்தின் தயாரிப்பாளரான  R.D.ராஜா இந்த ‘அயலான்’ படம் பற்றிப் பேசும்போது, "எங்களது 24 AM நிறுவனம் சார்பில் தயாராகும் ‘அயலான்’ படத்தின் தலைப்பிற்கு, இணையமே கலங்கும் அளவுக்கான மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

மேலும், எங்களது கோரிக்கையின் பேரில், ‘இசைப் புயல்’ A.R.ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே A.R.ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் எங்களை வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத் துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.

‘அயலான்’ என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. ‘அயலான்’ என்றால் ‘ஏலியன்’ என்பது அர்த்தம். படத்தின் கேப்ஷனாக ‘சென்றடையும் இலக்கு பூமி’(Destination earth) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக  புரிந்து கொள்வார்கள். நாம் இதற்கு மேலும் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன.

தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைக் கதை(சயின்ஸ் ஃபிக்ஷன்)  படமாக இப்படம் உருவாகிறது. எனவே, படத்தில் அதிகளவிலான  விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின்போதே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் 24 AM ஆன எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாது... தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்..." என்றார்.

K.J.R. Studios நிறுவனர் கொட்டாப்படி J.ராஜேஸ் இப்படத்தை வெளியிடவிருக்கிறார்.