‘தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி’யின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’.
ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறாராம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்குமாம்.
இது பற்றிப் பேசிய இயக்குநர் ஜெகதீஸ்வர ரெட்டி, “தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருப்பதால் அதை நிறைவேற்றும்விதமாக இப்படம் இருக்கும்.
ஜெயலலிதா சிறு வயதில் எப்படி இருந்தார்..? எப்படி நடிகையாக ஆனார்..? அரசியலில் அடியெடுத்து வைத்தது.. அதிமுகவில் அவரது பங்களிப்பு.. சசிகலாவின் வாழ்க்கை.. அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கிய கதையாக இப்படம் இருக்கும்.
குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது..? என்பது பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம் பெறும்.
இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார் இயக்குநர் ஜெகதீஸ்வர ரெட்டி.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் நேற்று வெளியானது.
ஏற்கெனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் எடுக்கப் போவதாகச் சொல்லியியிருக்கிறார்கள். இதில் கவுதம் மேனன் படப்பிடிப்பினை நடத்தி வருகிறார். விஜய் நடிகர்களை தேர்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலைமையில் மூன்றாவதாக இவரும் களத்தில் குதித்திருக்கிறார்.











