உறியடி-2 – சினிமா விமர்சனம்

உறியடி-2 – சினிமா விமர்சனம்

பிரபல நடிகர் சூர்யாவின் 2-டி நிறுவனமும், சாவனீர் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

படத்தின் இயக்குநரான விஜய்குமாரே படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக விஷ்மயா நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர் தாஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார், படத் தொகுப்பு – பினு, இசை – கோவிந்த் வசந்தா, பாடல்கள் – நாகராஜ், இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், எழுத்து, இயக்கம் – விஜயகுமார்.

2016-ம் ஆண்டு வெளியான ‘உறியடி’ படம் மூலமாக சமூகத்தின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்திய இயக்குநரும், நடிகருமான விஜய்குமார், தனது அடுத்தப் படத்திலும் சமூகக் கருத்தையே முன் வைத்திருக்கிறார்.

‘பொறுத்தது போதும்.. பொங்கியெழு மனோகரா’ என்பதுதான் தற்போதைய காலச் சூழலுக்குப் பொருத்தம். இப்போதும் நாம் அஹிம்சை, அமைதி, தர்மமெல்லாம் பேசினால் சமூகத்தைச் சீரழிக்கும் அரசியல்வியாதிகள் நம்மை அழித்துவிடுவார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய்குமார்.

நாயகன் லெனின் விஜய் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் செங்கதிர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர். கெமிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவரும், இவரது இரண்டு நண்பர்களும்கூட இதே வேலை தேடும் படலத்தில்தான் இருக்கிறார்கள்.

அதே ஊரில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பாக்ஸினோ என்னும் பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அங்கு மருத்துவராக வேலை செய்யும் உள்ளூர்க்காரப் பெண்ணான விஷ்மயாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் விஜய்குமார். இந்தக் காதல் ஒரு டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அந்த பூச்சி மருந்து நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அபாயகரமான கெமிக்கல் மருந்தினால் அங்கு பணியாற்றுபவர்களுக்கு உடல் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

அந்த ஆலையில் இருக்கும் அனைத்து பாகங்களும் பழசாகியிருக்க.. அனைத்தையும் சரி செய்யாமல் வரக் கூடிய அபாயத்தையும் உணராமல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சோதனைக்காக வரும் உள்ளூர் அரசு அதிகாரிகளையும் ஆலை நிர்வாகம் லஞ்சம் கொடுத்து கவனித்துவிடுவதால், அவர்களும் அதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஆனால் ஆலையின் அதிபரான ராஜ் பிரகாஷ், இந்த ஆலையினால் லாபம் குறைந்துவிட்டதனால் உற்பத்தியை மேலும் பெருக்க உத்தரவிடுகிறார். அதோடு பக்கத்தில் இருக்கும் செங்கதிர் மலையில் தாமிரம் தயாரிக்கும் புதிய ஆலையை நிறுவவும் திட்டமிடுகிறார். இதற்காக அந்தத் தொகுதியின் ஆளும் கட்சியின் எம்.பி.யான தமிழ்க்குமரனுக்கு லஞ்சம் கொடுத்து இழுக்கிறார். அவருடைய தயவால் தாமிர ஆலைக்கு லைசென்ஸ் வாங்கவும் முயற்சி செய்து வருகிறார்.

விஜய்குமார் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளிலேயே விஜய்குமாரின் நெருங்கிய நண்பன் விஷ வாயு தாக்கி உயிரிழக்கிறான். இதையடுத்து அந்த ஆலை பற்றிய விஷயங்களை சேகரிக்கும் விஜய்குமாருக்கு அந்த ஆலையில் மிகப் பயங்கரமான ஒரு விஷ வாயுவை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலேயே தயாரித்து, பயன்படுத்தி வருவது தெரிகிறது.

இந்த ஆலையில் உருவாக்கப்படும் ‘M.I.C’ (மீத்தைல் ஐஸோ சயனைட்) என்ற அபாயகரமான ரசாயனம் கலந்த தண்ணீர் ஒருவர் மீது பட்டாலே அவரது உயிர் போய்விடும். இந்த ‘எம்.ஐ.சி’ திரவம் தண்ணீரில் கலந்தாலோ அல்லது காற்றாக வெளியானாலும், அதை சுவாசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரிய வருகிறது. இந்த விஷ வாயுவால்தான் விஜய்குமாரின் நண்பரும், இன்னும் இரண்டு பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. பரிதாபமாய் இறந்துபோன இரண்டு ஊழியர்களும் அதே ஊரில் இருக்கும் ஒரு சாதிக் கட்சித் தலைவரான செங்கை குமாரின் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் போராட்டத்தில் குதிக்கிறார். இதனைப் பயன்படுத்தி தொகுதியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறார் செங்கை குமார்.

இந்தக் கலவரத்தினால் செங்கை குமாருக்கு பெயர் கிடைப்பதை அறிந்த பிரதான எதிர்க்கட்சி, செங்கை குமாருக்கு எம்.பி. தேர்தலுக்கான சீட்டினை தருகிறது. தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் தானே பார்த்துக் கொள்வதாக ஆலையின் அதிபரான ராஜ் பிரகாஷ் சொல்கிறார்.

இந்த நேரத்தில் வேலையில் இருந்து விலகும் விஜய்குமாரும், அவரது நண்பரான சுதாகரும் அந்த கொடிய வாயுவைப் பற்றி ஊர்க்காரர்களுக்குச் சொல்ல, அவர்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.

வெளியில் இருந்து பொதுமக்களைத் தூண்டிவிடுவது விஜய்குமார்தான் என்பதையறியும் சாதிக் கட்சித் தலைவர் விஜய்குமாரை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். அந்தத் தாக்குதலில் தப்பிக்கும் விஜய்குமார் ஆலைக்குள் ஓடி ஒளிகிறார்.

ஆனால் அன்றைக்கு பார்த்து அந்த ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தினால் எம்.ஐ.சி. வாயு அபரிமிதமாக வெளியில் பரவ.. சுவாசிக்க முடியாமலும், நெஞ்சு எரிச்சலாலும் கிராமத்து மக்கள் நள்ளிரவில் ஊர் மருத்துவமனைக்கு ஓடி வந்து சேர்கிறார்கள்.

எந்த வாயு வெளியானது என்பதைக்கூட ஆலை அதிபர் வெளியிடாமல் ரகசியம் காக்க.. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சையை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் திணற.. 255 பேர் அந்த நள்ளிரவில் இறந்து போகிறார்கள்.

இதையடுத்து ஆலை அதிபர் அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வியாதிகளுக்கும்  லஞ்சத் தொகையை உயர்த்திக் கொடுத்து தான் தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். இதையறியும் விஜய்குமாரும் அவரது நண்பர்களும் ஆலை அதிபருக்கு ஒரு ‘செக்’ வைக்க நினைக்கிறார்கள்.

இதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முடிவு.

1984-ம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் நடந்த விஷ வாயுக் கசிவு சம்பவத்தை மையப்படுத்தியே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய்குமார்.

போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து கசிந்த வாயு இதே MIC எனப்படும் மெத்தைல்-ஐசோ-சையனைடுதான். இந்த விபத்தினால் 3787 பேர் அந்த ஒரு இரவிலேயே இறந்து போக, ஐந்தரை லட்சம் மக்களுக்கும் மேல் இன்றுவரையிலும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைடு ஆலையிடமிருந்து நஷ்ட ஈடு வாங்குவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் வாரன் ஆண்டர்சனை கைது செய்த 6 மணி நேரத்திலேயே வெறும் 10000 ரூபாய் ஜாமீனில் வெளியில் விட்டதோடு அவரை பத்திரமாக தனி விமானத்தில் அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்தது அப்போதைய மத்திய அரசு.

மத்திய, மாநில அரசுகள் இந்த அளவுக்கு மக்களுக்குத் துரோகம் செய்ததன் விளைவை இப்போதுவரையிலும் போபால் நகர மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

இதனால்தான் இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடும்படி மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் அவசியம் வேண்டும். நமது வருங்கால தலைமுறையினருக்காக நாம் இதை செய்துதான் தீர வேண்டும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய்குமார்.

அதோடு கூடவே அரசியலும், சாதியும் எப்படி ஒன்றரக் கலந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அரசியல்வியாதிகள் சாதியை எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதையும், ஒரு விஷயத்தில் இருந்து மக்களை எப்படி திசை திருப்பி அதையும் தங்களது சுய லாபத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்பதையும் விஜய்குமார் அழகான திரைக்கதையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

சாதிய அரசியல் மட்டுமில்லாமல்.. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவை குப்பைத் தொட்டியாய் நினைத்து இங்கே கால் ஊன்றுவதற்குக் காரணம் லஞ்ச ஊழலில் திளைக்கும் நமது அரசியல்வியாதிகள்தான் என்பதையும் உண்மையாய் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

முதலாளிகளின் லாபம் சம்பாதிக்கும் வெறிக்கு இந்திய மக்களை பகடைக் காய்களாக நமது அரசியல்வியாதிகள் பயன்படுத்துவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

விஜய்குமாரின் கேரக்டர் பெயர் ‘லெனின் விஜய்’. இதில் ‘லெனின்’ இடம் பெற்றிருப்பதோடு அவரது வீட்டின் சுவர்களில் ‘கார்ல் மார்க்ஸ்’, ‘சேகுவேரா’ ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருக்கிறது. கூடவே பல காட்சிகளில் சிகப்பு நிறம் விஜய்குமாரால் பயன்படுத்தப்படுவதையும் பார்த்தால் இயக்குநர், ஒரு தீவிரமான இடதுசாரி இயக்க ஆதரவாளரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதையெல்லாம் தாண்டி விஜய்குமாரின் நடிப்பு ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. ஒரு வித்தியாசமான கேமிரா அழகில் தெரிகிறார் விஜய்குமார். முன் பாதியில் அவருக்கும், நாயகி விஸ்மயாவுக்குமான காதல் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். இந்தக் காதல் காட்சிகள் மிக எளிமையாக, யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

காதலையும் தாண்டி கோபத்தைத் தூண்டிவிடும் போராளியாகவும் கை தூக்கி கோஷமிட்டு போலீஸை கேள்வி கேட்கும் ஒரு துடிப்பான இளைஞனாகவும் கண் முன்னே தெரிகிறார் விஜய்குமார்.

நாயகி விஸ்மயாவுக்கு வழக்கமான காதலி கேரக்டர்தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையினால் அதிகம் ரசிக்கப்படுகிறார். அதே ஆலையில் மருத்துவர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சினால் அவருக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாயகிக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுக்கப்படும்போது மெல்ல, மெல்ல காதல் வளர்வதைச் சொல்லி ஒரேயொரு பாடலில் காதல் பிறந்ததை காட்டுவது பாராட்டுக்குரியது.

இவர்களைத் தவிர விஜய்குமாரின் நண்பர்களாக நடித்தவர்கள் மற்றும் இவர்களது பெற்றோர்கள் என்று அனைவரின் நடிப்பும் மிக இயல்பானது.

விஷ வாயு கசிவு காட்சிகளில் எப்படித்தான் அத்தனை கிராம மக்களையும் நடிக்க வைத்தாரோ தெரியவில்லை. இதற்காகவே இயக்குநர் விஜய்குமாருக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்.

ஒரு தாய் விஷ வாயு தாக்குதலில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற அதனை பீரோவுக்குள் வைத்துப் பூட்டும் காட்சி உச்சப்பட்சமான இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.

இதேபோல் அந்த ஆலையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரி தனது மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைய அந்தக் குழந்தைக்கு கொடுக்க மருந்தில்லாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டும் அந்தக் காட்சி அபாரமான படமாக்கல்..!

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு மிக மென்மையாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக படமாகியிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளில்கூட துல்லியமாக படமாக்கியிருக்கிறார்கள். இயக்குநரின் இயக்குதல் திறமைக்கேற்ப கேமிராமேனும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை விஷ வாயுக் கசிவு காட்சிகளில் உணர முடிகிறது.

அதேபோல் தொழிற்சாலையில் அடுத்து, எப்போது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை, ஒரு ‘திக் திக்’ உணர்வை இயக்குநர் கொடுத்திருக்கிறார். இது போன்ற காட்சிகளில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசைதான் பெரும் மர்மத்தைக் கொடுத்திருக்கிறது.  

பாடல்களில் டூயட் பாடல் பரவாயில்லை ரகம் என்றாலும் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலும், பாடல் காட்சிகளும் அற்புதம். அந்தப் பாடலைக் கேட்கக் கேட்க உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களுக்கே ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. இசையமைப்பாளருக்கு இதற்காகவே ஒரு ‘ஜே’ போடலாம்.

இதேபோல் படத் தொகுப்பாளர் பினுவின் கைங்கர்யத்தால் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் வேகம் கூடுகிறது. திரைக்கதையில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆலையின் அதிபர் கோர்ட்டில் ஆஜராகும் காட்சிகளில் பார்வையாளருக்கே அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை உண்டு செய்துவிட்டது படத் தொகுப்பு.

வெறுமனே விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு போய்விடவில்லை இயக்குநர். அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். “முதலில் ஜனநாயகமான முறையில் நாமும் தேர்தலில் போட்டியிட்டு கேள்வி கேட்கும் இடத்திற்குச் செல்வோம்” என்கிறார் இயக்குநர்.

இதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்த ஊர் மக்களைத் திரட்டி போட்டியிட வைக்கிறார். அந்த விஷ வாயு கசிவில் 255 பேர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த குறியீடாகத் தேர்தலிலும், 255 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் இதில் 110 பேரின் தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.  மீதமிருந்த 145 பேரில் 144 பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்ள.. கடைசியாக எஞ்சியிருக்கும் நாயகன் விஜய்குமார் எம்.பி. தேர்தலில் அந்த ஊர் மக்கள் சார்பாக போட்டியிடுகிறார். இது ஒரு நேர்மையான அணுகுமுறை.

ஆனால், அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும் இதைத் தாண்டி மக்களுக்கு விரோதமாகச் செயல்பட நாமும் அது போலவே செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை கிளைமாக்ஸ் காட்சிகளில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய்குமார். நிச்சயமாக இதுதான் வருங்காலத்தில் இந்தியாவில் நடக்கப் போகிறது..!

மொத்தத்தில் இந்த ‘உறியடி-2’ திரைப்படம் தனது முதல் பாகத்தைப் போலவே சமூக அக்கறை நிரம்பிய ஒரு பெருமைக்குரிய படைப்பாக வந்திருக்கிறது.

பாராட்டுவோம்..! வாழ்த்துவோம்..!

Our Score