full screen background image

“தேசிய விருதை வாங்க மாட்டேன்…” – விஜய் சேதுபதியின் கோப பேச்சு..!

“தேசிய விருதை வாங்க மாட்டேன்…” – விஜய் சேதுபதியின் கோப பேச்சு..!

“தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு, எனக்கு தேசிய விருது கொடுத்தால் அதை நிச்சயம் வாங்க மாட்டேன்” என்று  நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கும் திரைப்படம் கருப்பன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ரேணுகுண்டா’ படத்தை இயக்கிய எம்.பன்னீர்செல்வம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘கருப்பன்’ திரைப்படம் வருகிற 29-ம் தேதி இப்படம் திரைக்கு வருவதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரீடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகனான விஜய் சேதுபதி பேசும்போது, “மனித வாழ்க்கையின் அழகும், ஆரம்பமும், முடிவும் அன்புதான். முன் பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போது வரும் அன்புதான் வாழ்க்கையின் ஆதாரமும்கூட. அதை அழகாக சொல்லியிருப்பதுதான் இந்த ‘கருப்பன்’ திரைப்படம்.

‘கருப்பன்’ என்ற தலைப்பு முதல் படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்துமே நம் மண் சார்ந்து மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய படம். விழாக் கால விடுமுறையில் வெளியாகும் எனது முதல் படம் ‘கருப்பன்’

எதார்த்தமான படங்களைவிட கமர்ஷியல் படங்களில் நடிப்பது கடினம். 10 பேரை அடிக்கும்போது வரும் முகபாவனை மிகவும் கடினமானது. எதார்த்தமாக நடிப்பது மிகவும் எளிது. கமர்ஷியல் படங்களை தரம் பிரித்துப் பார்ப்பதில் உடன்பாடில்லை.

வசூல் ரீதியாக எந்தப் படங்கள் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பெறுகிறதோ, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கிறதோ அவை அனைத்துமே கமர்ஷியல் படங்கள்தான்.

என்னிடம் வரும் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். நடிகருக்காக மட்டுமே எந்தொரு படமும் ஓடாது என்பதை முழுமையாக நம்புகிறேன்.

முதல் நாள் முதல் காட்சி முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நடிகருக்காக இருக்கும், அதற்குப் பிறகு கதை என்ன சொல்கிறது என்பதற்குள் போய்விடுவார்கள். அந்த வேலையை இயக்குநர் பன்னீர்செல்வம் இப்படத்தில் அருமையாக சொல்லியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டைப் பற்றி பொதுமக்களே நிறைய பேசியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போதுதான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. நாங்கள் இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. அப்போராட்டத்திற்கு நன்றி மட்டுமே தெரிவித்திருக்கிறோம்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு எனக்கு தேசிய விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் தொடர்ந்து நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுவதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்…” என்றார் விஜய் சேதுபதி.

Our Score