சிவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான C.வெங்கடேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘கேக்காமலே கேக்கும்’.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா N.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சந்தோஷ், இசை – கிரிதர் திவான், படத் தொகுப்பு – கே.கிரிஷ்குமார், பாடல் – பாரதிவள்ளி. கன்னட இயக்குநரான சி.நாகேந்திர பாபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு 4 கன்னட படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் ‘கையளவு மனசு’, ‘காசளவு நேசம்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க் கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க் கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க் கதைகளின் ஒன் லைன்.
ஆனால் இந்த ‘கேக்காமலே கேக்கும்’ திரைப்படத்தில் பேய்கள் செல்போனிலிருந்து இன்னொரு செல்போனுக்கு டிரான்ஸ்பர் ஆவதுதான் புதுமையாம்.
ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார் இயக்குநர். செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறதாம். கதைக்கேற்ப தற்காலத்திய தொழில் நுட்பம் படத்தில் நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
சென்னை, மன்னார்குடி, கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான நரேந்திர பாபு பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ்தான்.. அம்மா தமிழ். அப்பா கன்னடர். ஆனால் நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். இருந்தாலும் என் அம்மா சொல்லிக் கொடுத்த்தால் தமிழ் மொழியைக் கற்றேன்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். கன்னடத்தில் இதுவரையிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படம்தான் ‘கேக்காமலே கேட்கும்.’
இந்தப் படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன். சமீப காலங்களில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படம் இருக்கும்.
இதில் இதுவரை யாரும் கையாளாத ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன். இன்று அனைவர் கையிலும் இருக்கும் ஒரு பொருள் மொபைல் ஃபோன். அந்த மொபைல் ஃபோனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன். அது என்ன என்பது படம் வெளியாகும்வரையிலும் சஸ்பென்சாக இருக்கட்டுமே…’’ என்றார்.
அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் தற்போது படம் வெளியாகும் நிலையில் இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்தார்கள்.