வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் தயாரித்துள்ள திரைப்படம் ‘8 தோட்டாக்கள்.’ இந்தப் படத்தை ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ சார்பில் இணை தயாரிப்பு செய்திருக்கிறார் ஐ.பி.கார்த்திகேயன்.
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) இருவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
முற்றிலும் திறமை வாய்ந்த புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு ‘அவம்’, ‘கிரகணம்’ படங்களுக்கு இசையமைத்த கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஸ்ரீகணேஷ், “துப்பாக்கியில் இருக்கும் ட்ரிக்கரை அழுத்தினால் போதும், அதில் இருக்கும் தோட்டா இலக்கை நோக்கி சீறி பாயும். அதேபோல் எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினரின் ஒத்துழைப்பும், உற்சாகமும்தான் எங்களுக்கு ட்ரிக்கராக செயல்பட்டு, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் நிறைவு செய்ய உதவியாக இருந்தது.
ரசிகர்களின் உள்ளங்களை தொடக் கூடிய காட்சியமைப்புகளுடன் ‘8 தோட்டாக்கள்’ படத்தினை உருவாக்கியிருக்கிறோம். தற்போது படத்திற்கான தொழில் நுட்ப பணிகள், மும்முரமாக நடைபெறத் துவங்கியுள்ளன..” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.