full screen background image

“முகவரி குழப்பத்தால்தான் இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்தானது…” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்

“முகவரி குழப்பத்தால்தான் இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்தானது…” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் அச்சங்கம் செயல்பட முடியாமல் இருப்பதாகவும் சில, பல செய்திகள் சில தினங்களாக மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இவர்களோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான தாணு ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இந்தப் பிரச்சினையில் உண்மை நிலை என்ன என்பது பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் இயக்குநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி எடுத்துரைத்தார்.

அவர் பேசும்போது, “தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய காலத்தில் E-FORM-களை பதிவு செய்யாததால் சங்கப் பதிவு ரத்தாகியுள்ளது. இதைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் எங்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்.

அப்போது E-FORM-களை புதுப்பிக்காத நினைவூட்டல் கடிதங்களும், E-FORM-களை புதுப்பிக்கவில்லை என்ற SHOW CAUSE NOTICE-ம் எங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்கள். மேலும், அந்த முகவரியில் அதுபோல் ஒரு சங்கமே இல்லை என கடிதங்கள் திரும்பி வந்து விட்டதால் சங்கப் பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

எங்களது பொதுச் செயலாளர் திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அந்த கடிதங்கள் அனைத்தும் எங்கள் சங்கம் வடபழனியில் இயங்கி வந்த பழைய வாடகை அலுவலக விலாசத்திற்கு சென்றுள்ளதென தெரியவந்தது.

எங்கள் சங்க அலுவலகம் புதிய விலாசத்திற்கு மாறிய பின்பு, 2013-ல் இயக்குநர் திரு.விக்ரமன் அவர்கள் தலைவராகவும், திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்ற பிறகு, ஊதிய பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என இதே தொழிலாளர் நல ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

மேலும் திரு.விக்ரமன், திரு.ஆர்கே.செல்வமணி, திரு.P.வாசு, திரு.K.S.ரவிக்குமார் போன்ற நிர்வாகிகள் ஊதிய உயர்வு பேச்சுக்காக இதே தொழிலாளர் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் வந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் 2013-ஆம் ஆண்டு ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கான அழைப்பு கடிதங்கள் அனைத்தும் தற்போது நாங்கள் இயங்கிவரும் வளசரவாக்கம் அந்தோனி சாலையில் உள்ள புதிய அலுவலக விலாசத்திற்கு வந்துள்ளன.

ஆனால் தற்போது 2016-ல் அனுப்பப்பட்ட சங்கப் பதிவு பற்றிய நினைவூட்டல் கடிதங்களும், SHOW CAUSE NOTICE-ம் வடபழனியில் இயங்கி வந்த பழைய சங்க அலுவலக விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தவறினை சுட்டிக்காட்டி, E-FORM சம்பந்தமான நினைவூட்டல் கடிதம் மற்றும் SHOW CAUSE NOTICE இதுவரை எங்கள் நிர்வாகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தினார்.

24.11.2016 அன்று நடைபெற்ற எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நடந்த தவறுகளை விளக்கமாக எழுதி எங்கள் சங்கத்தின் உரிமத்தை ‘ரத்து செய்த ஆணையை’ ரத்து செய்திட வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் தொழிலாளார் நல ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்களது வேண்டுகோளை தொழிலாளர் நல ஆணையர் பரிசீலித்து நல்ல முடிவை தருவார் என நம்புகிறோம்.

தற்போது எங்கள் சங்கத்தில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தினமும் 100 நபர்கள் உறுப்பினர்களாக வேண்டும் என விண்ணப்பிக்க வருகிறார்கள். தற்போது, டிஜிட்டல் கேமிராக்கள் வந்து விட்ட நிலையில் ஏராளமானவர்கள் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களாக வர ஆரம்பித்துள்ளார்கள்.

புதிதாக சேர வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவர்களின் தரத்தை ஒழுங்குப்படுத்தவும், எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுக் குழு சில விதிமுறைகளை நிறைவேற்றியது.

சங்க பொதுக் குழுவின் விதிமுறைகளால் சங்கத்தில் உறுப்பினராக சேர முடியாத சிலர், அவதூறாக சேற்றை வாரி எங்கள் மீது இறைக்கிறார்கள். எங்கள் சங்கத்திற்கு பங்கம் உண்டாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

பொதுவாக நிர்வாக காரணங்களுக்காக சங்கப் பதிவு ரத்து ஆவது பல்வேறு சங்கங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு ரத்தான சங்கங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ் திரைப்படத் துறையில் அனைத்து சங்கங்களையும் விட சீரிய சங்கமாக மாண்புடன் செயல்பட்டு வருகிறது.

எதிர்காலத்திலும் அவ்வாறே சீறும் சிறப்புமாக இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று விளக்கமாக சொல்லி முடித்தார்.

Our Score