சென்ற 2024-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் திரைக்கு வந்த 241 படங்களும் ஒட்டு மொத்தமாக சுமார் 3000 கோடிக்கு மேல் செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பெரிய பட்ஜெட் படங்களை ரூபாய் 50 கோடி முதல் 200 கோடிவரை செலவில் எடுத்துள்ளனர். மீதமிருக்கும் 186 படங்களின் பட்ஜெட் 400 கோடிவரை இருக்கும்.
இதில் 18 படங்கள் மட்டுமே லாபம் பார்த்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது.
18 படங்களில் மிக விஜய்யின் தி கோட் படமும், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும், தனுஷ் இயக்கி நடித்த ராயன் படமும் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
மேலும் பெரிய பட்ஜெட்டில் தயாரான ரஜினிகாந்தின் வேட்டையன், சுந்தர்.சி-யின் அரண்மனை 4, விஜய் சேதுபதியின் மகாராஜா, அரவிந்த்சாமி-கார்த்தி கூட்டணியின் வெளியான மெய்யழகன் ஆகியவையும் வெற்றி பெற்றுள்ளன.
நடுத்தர பட்ஜெட்டில் தயாரான டிமாண்டி காலனி 2, வாழை, கருடன், ரோமியோ, ஸ்டார், பிளாக், பி.டி. சார், அந்தகன் ஆகிய படங்களும் லாபத்தைத் தரும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல லப்பர் பந்து, லவ்வர், பேச்சி போன்ற சிறு பட்ஜெட்டில் உருவான படங்களும் வெற்றி பெற்று கவனம் பெற்றுள்ளன.
இதன்படி பார்த்தால் திரைக்கு வந்த 241 படங்களில் 223 படங்கள் தோல்வி அடைந்துள்ளன.
அரண்மனை 4 திரைப்படம் தமிழில் இந்த வருடத்தின் முதல் ஹிட் படமாக அமைந்தது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ (Greatest of all time) திரைப்படம் 2024-ம் வருடம் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.
கோட் திரைப்படம் உலக அளவில் 457.12 கோடி வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 225.01 கோடி வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ’அமரன்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகளவில் 333.57 கோடியும், தமிழ்நாட்டில் 167.81 கோடியும் வசூல் செய்துள்ளது. ’அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 3-வது இடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. ’வேட்டையன்’ திரைப்படம் உலகளவில் 253.69 கோடியும், தமிழ்நாட்டில் 123.89 கோடியும் வசூல் செய்துள்ளது.
’ராயன்’, ’அரண்மனை 4’, ’மகாராஜா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மகாராஜா உலகளவில் 165.5 கோடி வசூல் செய்த நிலையில், தமிழ்நாட்டில் சற்று குறைவாக 57 கோடி மட்டுமே வசூல் செய்தது.
இந்த வரிசையில் 7-வது இடத்தில் ’இந்தியன்-2’ திரைப்படம் இடம் பெற்றுள்ள நிலையில், ’புஷ்பா -2’ திரைப்படம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அயலான், கருடன், டிமாண்ட்டி காலனி, லப்பர் பந்து, வாழை, விடுதலை-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
திரைப்படம் – உலக அளவில் வசூல் – தமிழ்நாடு வசூல்
கோட் 457.12 225.01
அமரன் 333.57 167.81
வேட்டையன் 253.69 171.69
ராயன் 154 80.13
அரண்மனை 4 98.75 60.23
மகாராஜா 165.5 57
இந்தியன் 2 148.9 56.65
புஷ்பா 2 146.8 54.05
அயலான் 76.64 49.81
கருடன் 61 43.95
தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION









