தமிழகத்தில் சின்னத்திரையில் மிக நவீன பாணியையும், புதிய நுணுக்கங்களையும், புத்தம் புதிய படைப்புகளையும் வழங்கியவர் திரு.பால கைலாசம். அவருடைய ‘மின் பிம்பங்கள்’ என்கிற நிறுவனம்தான் பெரிய திரையான சினிமா பக்கம் இருந்த தமிழகத்து மக்களை சின்னத்திரையின் பக்கம் திசை திருப்பிய ‘மர்ம தேசம்’ தொடரை தயாரித்தது.
25-க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களைத் தயாரித்து இன்றைக்கு இருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பால கைலாசம்.
சிறந்த ஆவணப் பட இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கும் பால கைலாசம், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகன் என்பதை பின்னுக்குத் தள்ளி, தற்போது சின்னத்திரையில் பணியாற்றும் பல முக்கிய கலைஞர்களை உருவாக்கியவர் என்கிற பெயரோடு தந்தைக்கு இணையாக தமிழ்த் திரையுலகில் பெயர் பெற்றவர்.
2014-ம் ஆண்டு அகால வயதில் காலமான பால கைலாசத்தின் பெயரில் பால கைலாசம் நினைவு விருதினை ‘சினிமா ராண்டவூ’ அமைப்பு வழங்கி வருகிறது.
சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மீடியாவைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பிய, பால கைலாசத்தின் பெரும் விருப்பத்தையும், நோக்கத்தையும் தற்போது செயல்படுத்தி வரும் ஆளுமைகளுக்கு அவருடைய பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.
அச்சு ஊடகம், உலகளாவிய வலைத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ஆவணப் படம் ஆகிய துறைகளில் இயங்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களில் சமூக மாற்றத்துக்காக இயங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசு கேடயத்துடன் 50000 ரூபாய் பரிசுத் தொகையையும் கொண்டது.
இவ்விருதைப் பெறுபவர்கள் சமூகத்தைத் தொட்டுப் பேசி இந்தியாவில் மாற்றங்களை உருவாக்கியவர்களாகவும், சமூகம், மாநிலம், நாடு தழுவிய சமூக முன்னேற்றத்துக்கான பார்வை மாற்றத்தை உருவாக்கிய அமைப்புகள் அல்லது சிறப்பான தனி மனிதர்களாகவும் இருத்தல் வேண்டும்.
அந்த வகையில் இந்த 2017-ம் ஆண்டிற்கான பால கைலாசம் நினைவு விருதினைப் பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி பிரிவில் News 18 நிறுவனத்தின் செய்தி ஆசிரியரான குணசேகர் சிறந்த தொலைக்காட்சி வல்லுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆவணப் பட பிரிவில் ‘Ko Ki Pa Lu’ என்கிற ஆவணப் படத்திற்காக ஈஸ்வர் ஸ்ரீகுமாரும், அனுஷ்கா மீனாட்சியும் விருதினைப் பெறுகிறார்கள்.
இணையத் தளப் பிரிவில் TheWire.in & Scroll.in இணையத் தளத்தின் Ms.Sohini Chattopadhyay விருதினைப் பெறுகிறார்.
அச்சு ஊடகப் பிரிவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹரீஷ் தாமோதரன் விருதினைப் பெறுகிறார்.
பால கைலாசம் நினைவு விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைபெறவுள்ளது.