full screen background image

19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 30-ம் தேதி துவங்குகிறது

19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 30-ம் தேதி துவங்குகிறது

சென்னையில் வரும் டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரையிலும் 19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் 53 நாடுகளை சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் மட்டுமின்றி ஈரானிய, கொரிய, ஜெர்மானிய திரைப்படங்களும் இத்திருவிழாவில் திரையிடப்பட உள்ளன.

குறிப்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்ற, ‘A hero’, ‘when pomegranets howl’, ‘yuni’, ‘a taxi’ உள்ளிட்ட பன்மொழிப் படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், தொடக்க விழா திரைப்படமாக three floors எனும் இத்தாலிய திரைப்படமும், இறுதி நாளில் Vortex எனும் பிரெஞ்சு திரைப்படமும் திரையிடப்படுகிறது.

சென்னையில் சத்யம் திரையரங்கின் 4 திரைகள், SDC அண்ணா திரையரங்கின் ஒரு திரை என மொத்தம் 5 திரைகளில் தினம்தோறும் 4 காட்சிகள் திரையிட உள்ளது.

முதல் பரிசுக்கு தேர்வாகும் தமிழ்ப் படத்தின் இயக்குநருக்கு 2 லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் இரண்டாம் பரிசுக்கு தேர்வாகும் திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. சிறந்த தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் www.icaf.in / chennaiflimfest.com உள்ளிட்ட வலைதளங்களில் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும், திரைக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 500 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரைப்பட விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

திரைப்படத் திருவிழா தொடர்பாக சென்னை அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் குழுத் தலைவர் தங்கராஜ் தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Our Score