full screen background image

ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குநர்கள் சங்கம் தடையுத்தரவு..!

ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குநர்கள் சங்கம் தடையுத்தரவு..!

தனது திமிரான பேச்சு மொழியில், தமிழ்ப் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிழித்துத் தொங்கவிட்ட சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் இனி படங்களை இயக்குவது அல்லது சினிமா விமர்சனம் செய்வது என்ற இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழ் டாக்கீஸ் மாறன் என்கிற ப்ளூ சட்டை மாறன் என்பவர் அடிப்படையில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிர்வாகி. புரொடெக்சன்ஸ் மேனேஜர் சங்கத்தில் உறுப்பினரும்கூட. இயக்குநர் ஹரியின் பல படங்களுக்கு மேனேஜராகப் பணியாற்றியிருக்கிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று ‘தமிழ் டாக்கீஸ்’ என்ற பெயரில் யுடியூப் சேனலை உருவாக்கி அதில் தமிழ்த் திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் கொச்சையாகப் பேசி கடுமையான மொழியில் கிண்டல் செய்தும், கேலி செய்தும் வந்தார். இவரது விமர்சனத்தால் பல திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு பல தயாரிப்பாளர்கள் இதனாலேயே இவர் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள்.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் ’ஆன்டி இண்டியன்’என்றொரு படம் ரிலீஸாகி தோல்வியைத் தழுவியது. ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தை இயக்கிய காரணத்தால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் உறுப்பினராக சேர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திங்களன்று வடபழனி, கமலா திரையரங்கில் நடந்த இயக்குநர் சங்க பொதுக் குழு நடைபெற்றது. இந்தப் பொதுக் குழுவில் ப்ளூ சட்டை மாறன் பல தமிழ்ப் படங்களை இழிவாக விமர்சனம் செய்து வருவதாக அவர் மீது குற்றம் சாட்டி பல இயக்குநர்கள் பேசினார்கள்.

இதையடுத்து ப்ளூ சட்டை மாறனுக்காகவே ஸ்பெஷல் தீர்மானம் ஒன்றும் அந்தப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அவர் இனிமேல் சினிமா விமர்சனம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவர் உடனடியாக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று இயக்குநர் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

Our Score