full screen background image

10 எண்றதுக்குள்ள – சினிமா விமர்சனம்

10 எண்றதுக்குள்ள – சினிமா விமர்சனம்

விக்ரமின் ராசி விஜய் மில்டனையும் தொற்றிக் கொண்டது போலும்..! பெரிய ஸ்டார்களை வைத்து படமாக்கினால் இதுதான் நடக்கும்..!

கதைக்காக கேரக்டர்களை உருவாக்கி இந்தக் கேரக்டருக்காக நடிப்பவர்களைத் தேடினால் அது எல்லாவகையிலும் இயக்குநருக்கு சுமையில்லாமல் இருக்கும். இங்கே ஹீரோவுக்காக கதை செய்யப் போனால் சுவாரஸ்யமான திரைக்கதையும் கூடவே சில மசாலாக்களும் இத்யாதிகளும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும்..

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’வின் ஆத்மார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து என்ன பேசப் போகிறார்களோ தெரியவில்லை.

டிரைவிங் ஸ்கூலில் டியூட்டராக இருக்கிறார் விக்ரம். கார் ஓட்டுவதில் கில்லி. அகாசய சூர்ர். 10 எண்ணுவதற்குள் வேலையை முடித்துவிடுவார் என்று எண்ண வைப்பவர். கடத்தல் தொழிலாகவே இருந்தாலும் சரி.. அவரைப் பாராட்டிவிட்டு கையில் கொஞ்சமாக துட்டை வைத்தாலும் அந்த வேலையை கச்சிதமாக முடித்துவிடுவார். இதனால்தான் படத்துக்கு இந்தப் பெயராம்.

ஒரு கடத்தல் பிஸினஸில் லோக்கல் தாதா பசுபதியிடம் மோதுகிறார். முடிவில் விக்ரமின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பசுபதி அவரை தனது கடத்தல் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். கையில் பணம் வந்தால் போதும் என்று விக்ரமும் அதையெல்லாம் செய்து கொடுக்கிறார்.

அன்னை தெரசா அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தவர் சமந்தா. பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். கார் டிரைவிங் லைசென்ஸிற்காக விக்ரம் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார். கார் பயிற்சியில் விக்ரமுடன் லடாய் வருகிறது.. சர்டிபிகேட் வாங்கச் சென்ற இடத்தில் விபத்தாகி, இந்த முறையும் சமந்தாவுக்கு லைசென்ஸ் கிடைக்காமல் போகிறது.

இந்த நேரத்தில் பசுபதிக்கு வடநாட்டில் இருந்து மிகப் பெரிய வேலை ஒன்று வருகிறது. 1 கோடி ரூபாய் பிராஜெக்ட் அது. சமந்தாவின் புகைப்படத்தைக் காட்டி அவரைத் தூக்கி வரும்படி ஆணையிடுகிறார் வட இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தாதா. பசுபதி தனது ஆட்களை வைத்து சமந்தாவை மயக்கத்துக்குள்ளாக்கி கடத்தும்போது டிராபிக் போலீஸ் வந்து வண்டியை பறிமுதல் செய்கிறார்கள்.

அந்த வண்டியை மீட்க விக்ரமை அணுகுகிறார் பசுபதி. விக்ரமும் ஓடோடிப் போய் வண்டியைக் கடத்துகிறார். துரத்தி வரும் போலீஸிடமிருந்து தப்பிக்க பசுபதியின் ஐடியாபடி ஆந்திரா வழியாக உத்தர்காண்ட் செல்ல முடிவெடுக்கிறார்.

வண்டி ஆந்திராவின் ரேணுகுண்டாவுக்கு வரும்போதுதான் சமந்தாவையே பார்க்கிறார் விக்ரம். அங்கே சமந்தாவை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி மீண்டும் வண்டியை உத்தர்கண்ட் நோக்கி விரட்டுகிறார். அதற்குள்ளாக விக்ரமின் செல்போன் களவாடப்பட்டதால் பசுபதியுடனான அவரது தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

உத்தர்கண்ட்டுக்கு சரியான நேரத்தில் வராத்தால் டெல்லி தாதா கொந்தளிக்க சென்னை தாதா பசுபதி விக்ரமை சந்தேகப்பட்டு தனது ஆட்களை அனுப்பி வைக்கிறார். கடைசியாக உத்தர்கண்ட்டில் விக்ரமை கண்டுபிடிக்கிறார்கள் பசுபதியின் ஆட்கள்.

அதற்குள்ளாக விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் இடையில் சண்டை போய் காதல் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. காரை ஒப்படைக்கத்தான் தன்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைத்திருந்த விக்ரமுக்கு அப்போதுதான் ஒப்படைக்கச் சொன்ன பொருள் சமந்தா என்பது புரிகிறது.

ஆனாலும் கொண்ட காதல் காரணமாய் சமந்தாவை ஒப்படைக்க மறுத்து டெல்லி தாதாவுடன் சண்டையிட்டு தப்பித்தவர் இத்தனை தூரம் வந்தாச்சு எதுக்கு சமந்தாவை கேக்குறாங்க என்கிற ஆர்வக் கோளாறில் சமந்தாவைத் தூக்கச் சொன்னவர்களைச் சந்திக்க செல்கிறார்..

அவர்கள் யார்..? எதற்காக சமந்தாவைத் தேடுகிறார்கள்..? கடைசியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் மீதமான திரைக்கதை.

பத்திரிகையாளர் சந்திப்பில் கதை என்ன என்று பலவாறு கேட்டபோது கதையே இல்லங்க.. டிராவலிங்குதான் கதை.. எங்களுக்குள்ள காதலும் இல்லை. ஆனால் இருக்கு என்று குழப்பமாகவே விக்ரமும், இயக்குநர் விஜய் மில்டனும் சொல்லி சமாளித்து முடித்தார்கள். அது ஏன் என்பது படத்தை பார்த்த பின்புதான் தெரிகிறது.

கதை சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்றெண்ணி இடைவேளைக்கு பின்புதான் கதையின் முடிச்சை அவிழ்க்கிறார்கள். ஆனால் அதற்குள்ளாக ஒன்றரை மணி  நேரம் ஓடிப் போய்விட்டதால் வெறுமனே காட்சியமைப்புகளை வைத்தே கதையை நகர்த்தியிருப்பதால் மனதில் எதுவுமே ஒட்டாமல் போய்விட்டது. இயக்குநர் ஏன் இப்படியொரு டிராஜடி முடிவையெடுத்தார் என்று தெரியவில்லை.

உண்மையில் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதிதான் முதல் பகுதியில் வந்திருக்க வேண்டும். படத்தின் துவக்கத்திலேயே கதையை சொல்லிவிட்டு பின்பு கடத்தல், சேஸிங் என்றாவது கொண்டு போயிருந்திருக்கலாம். அதாவது சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஒரு நல்ல கதை கிடைத்தும் அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்காமல் விட்டதன் பலன்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் எதிர்மறை விமர்சனங்கள். இயக்குநர் விஜய் மில்டன் இதனை நேர்மையாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

விக்ரம் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஜாலியாகத்தான் இருக்கிறார். சாதாரணமாகத்தான் பேசுகிறார். ஆடுகிறார். 49 வயது என்கிறார்கள். தெரியவில்லை. ஆனாலும் இப்படியே இருந்தவர் கடைசியில் சமந்தாவிடம் மட்டுமே இரண்டு நிமிடங்கள் தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். இதுக்குத்தான் இத்தனை அக்கப்போராய்யா என்ற சலிப்பும் தியேட்டரில் எழுகிறது.

நஸ்ரியாவை போல சின்னச் சின்ன முகபாவனைகளில் அசர வைக்கிறார் பால்கோவா முகவழகி சமந்தா. காரை மரத்தின் மீது ஏற்றிவிட்டு வெட்கத்துடன் கையைத் தூக்கி தான்தான் என்பதில் துவங்கி.. விக்ரம் பேசும் டபுள் மீனிங் டயலாக்கிற்கு ஐய்யோ என்று முகம் சுழிக்கும் காட்சிவரையிலும் குளோஸப் காட்சிகளில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கூடவே இன்னுமொரு சாதி வெறி பிடித்த பெண்ணாக.. அந்த ஆக்ரோஷம்.. சண்டையிட்டுக் கொல்லும் சமந்தாவின் கோப முகம் சற்றும் எதிர்பாராத்து.. இந்த சஸ்பென்ஸை முன்பேயே சொல்லியிருக்கலாம்.. இதையும் விட்டுவிட்டார்கள். அந்த சமந்தாவா இது என்றெல்லாம் கேட்க வைப்பதுபோல திரைக்கதையின் அந்த சில நிமிட டிவிஸ்ட்டுகள் ரசிக்க வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பசுபதி, டெல்லி தாதா, உத்தர்கண்ட் ரவுடி, முனீஸ்காந்த் என்று எல்லாருமே இயக்குநருக்காக  நடித்து முடித்திருக்கிறார்கள். பசுபதி பல காட்சிகளைத் தாங்கியிருக்கிறார். அவரும் இல்லையெனில் நிச்சயம் படத்தை பார்க்க நினைப்பது கஷ்டம் என்றே சொல்லியிருக்கலாம்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு ஹீரோவுக்கு பெயரே இல்லாமல் நடித்திருக்கிறார் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும். ஜேம்ஸ்பாண்ட், ச்ச்சின் டெண்டுல்கர், விரோத் ஹோலி, மணிரத்னம் என்று இஷ்டத்துக்கு பெயரைச் சொன்னவர் கடைசிவரையிலும் உண்மையான பெயரைச் சொல்லவில்லை.. சினிமாவில் வழக்கத்தை உடைக்க விரும்பலாம். ஆனால் அது இந்த அளவுக்கா..?

வட மாநிலங்களில் சாதிப் பிரச்சினை கொழுந்துவிட்டுத்தான் எரிகிறது. ஆனால் அதை எதிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் இணைத்தார் என்று தெரியவில்லை. அதிலும் ஒரு பெண்ணை கொலையாளி என்பதுபோல காட்டும் அளவுக்கு என்ன கதைப் பஞ்சம் வந்துவிட்டது..? கிளைமாக்ஸில் விக்ரம் தப்பிப்பதற்காக சாதிக் கலவரத்தைத் தூண்டிவிடுவதை போன்ற காட்சியமைப்பை வைத்திருக்கிறார் இயக்குநர். நிச்சயம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத திரைக்கதை இது.

இமானின் இசையில் 10 எண்றதுக்குள்ள பாடலும், இசையும், ஆட்டமும் பாட்டமும் ஓகேதான்.. அந்த தீம் மியூஸிக் சில மணி நேரங்கள் மனதில் நின்றது தாலாட்டியது உண்மைதான். நடுவில் ரேணுகுண்டாவில் சிவப்பு மிளகாயுடன் சார்மியுடன் ஆடும் ஆட்டம் தேவைதானா..? அப்படியொரு டென்ஷனான கட்டத்தில் ஆட்டத்தைக் காட்டி சீரியஸ்னெஸ்ஸை குறைத்துவிட்டார் இயக்குநர்.

இன்னும் 2 டூயட் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு கடைசியில் சேர்க்கப்படவில்லை என்று அறிகிறோம். சேர்த்திருக்கலாம்.. அப்படியே அந்த சில குறிப்பிட்ட காட்சிகளில் வரும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களையும் முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம். இது படத்திற்கே தேவையில்லாதவையாக தோன்றுகின்றன.

படத்தில் முதலில் பாராட்டைப் பெறுவது இயக்குநரைவிடவும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான். துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவில் வர்ண ஜால வித்தையைக் காட்டியிருக்கிறார். உத்தர்கண்ட், நேபாளப் பகுதிகளெல்லாம் கேமிராவாவ்ல் மிக அழகாக பதியப்பட்டிருக்கின்றன. சமந்தாவின் அழகை ‘அஞ்சானு’க்கு பிறகு மீண்டும் ஒருமுறை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நன்றிகள்..!

 சில சஸ்பென்ஸ்கள், காட்சியமைப்புகள் சுவாரஸ்யமாக ‘திடுக்’ உணர்வை தந்தது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் திரைக்கதையில் ஒரு ஆர்வமும் இல்லாத நிலையில், அடுத்தது என்ன என்பதை அறியும் மனநிலையிலேயே படம் பார்க்கும் ரசிகன் இல்லாத நிலையில் கடைசி அரை மணி நேரம்தான் படம் என்றால் அதனை எப்படி அணுகுவது என்றே புரியவில்லை.. கடைசியில் ஜஸ்ட் பாஸ்.. ஓகே என்கிற மனநிலைதான் வந்திருக்கிறது.

விஜய் மில்டன் இனிமேல் ஹீரோவுக்காக படம் செய்ய வேண்டாம். விஜய் மில்டனின் படமாகவே தயாரித்து வழங்கலாம்..! 

Our Score