Copy, Inspiration இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பாமரனான எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதனை வைத்துத்தான் தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்கள் பலரும் கும்மியடிக்கிறார்கள். Across the Hall என்ற ஹாலிவுட் படத்தின் சீன் பை சீன்.. ஷாட் பை ஷாட்.. அப்படியே ரீமேக் செய்துவிட்டு டைட்டிலில் Inspiration என்று சொல்லி படத்தின் பெயரை போட்டுவிட்டால் அனுமதி வாங்கிவிட்டதாக அர்த்தமாகிவிடுமா..? படத்தின் இயக்குநர், திரைக்கதை, வசனம், இயக்கம் என்று காப்பி செய்த அனைத்திலும் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். இதுதான் சிக்கலாகிறது..!
இதைவிட பெரிய கொடுமை.. இதே படத்தை காப்பியடித்து தயாரான சென்ற வருடம் ‘உன்னோடு ஒரு நாள்’ என்ற படம் வெளியாகியேவிட்டது. அதன் இயக்குநர் துரை கார்த்திகேயன் அப்படம் வெளிவரும் முன்பேயே ஒரு விபத்தில் காலமாகிவிட்டதால் நாம் எதுவும் கேட்க முடியாது..! ஆனால் இந்த இரண்டு படங்களின் முதல் காட்சியும் இறுதிவரையிலான திரைக்கதையும் ஒன்றுதான்..!
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இது உறைக்க ஆரம்பித்ததால் படத்தினை முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த நேர்எதிர் படத்தில் கதிராக நடித்த பார்த்தியின் நடிப்பு படத்தினை கொஞ்சம் ரசிக்கவும் வைத்தது என்பதைச் சொல்லியாக வேண்டும்..!
தான் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண், இரவு நேரத்தில் ஒரு ஹோட்டலுக்குள் செல்வதை பார்க்கும் கதிர் அவளைத் தேடி அதே ஹோட்டலுக்கு வந்து லஞ்சம் கொடுத்து காதலியின் அறைக்கு நேர் எதிர் அறையில் ரூம் போட்டுவிட்டு.. தனது நண்பன் கார்த்திக்குக்கு போன் செய்து தனது காதலி பற்றியும், அவளை கொலை செய்யப் போகிறேன் என்றெல்லாம் போனில் மிரட்டி டென்ஷனை ஏற்ற.. படத்தின் திரைக்கதையோட்டத்தில் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லைதான்..! ஆனால் ஒரிஜினல் பாராட்டு.. அந்த ஹாலிவுட் படத்தின் கதாசிரியர்களுக்கும், திரைக்கதை ஆசிரியர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்..!
கார்த்திக் எங்கே இருக்கிறார் என்பதையே சஸ்பென்ஸோடு ஆரம்பிக்கிறார்கள். பின்பு கார்த்திக்கை ஏன் இதில் இழுத்திருக்கிறார் என்பதையும் கதிர் இறுதியில் என்ன செய்யப் போகிறார் என்பதையும் இறுதிவரையில் சஸ்பென்ஸாகவே கொண்டு சென்று முடித்திருக்கிறார்கள். ஆனால் இது ஹாலிவுட் படத்துக்கு மட்டுமே தோதானது.. தமிழ்ச் சினிமாவுக்கு ச்சும்மா வெத்து வேட்டுதான். லாஜிக் மிஸ் ஆவதால், தமிழுக்காக கொஞ்சம் மாற்றியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..
நடிப்பு என்று பார்த்தால் கதிராக நடித்தவ பார்த்திதான் படத்திற்கு உயிர்.. தண்ணியடித்துவிட்டு சிவப்பான கண்களோடு.. வார்த்தைகளை மென்று முழுங்கி அவர் கொடுத்திருக்கும் உச்சரிப்பும், நடிப்பும் ஏ ஒன்.. பாராட்டுக்கள்.. இவருக்கு அடுத்து நமது தல அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டு.. இவருக்கு நல்ல நடிப்பார்வமும், திறமையும் இருந்தாலும் கோடம்பாக்கம் இவரை அரவணைக்காதது ஏன் என்று தெரியவில்லை..?
படத்தின் பெரும்பாலான காட்சிகள் வசனத்தின் மூலமாகவே நகர்த்தப்படுவதால் நடிப்புக்கு மிகப் பெரிய ஸ்கோப் உள்ள படம் இது.. படத்தின் நாயகியும் அழகோ அழகு.. அவருக்காக ஒரேயொரு பாடல் காட்சியை இணைத்திருக்கிறார்கள். அதையும் அம்சமாக படமாக்கியிருக்கிறார்கள்..!
மூலக் கதையில் இருக்கும் அதே டிவிஸ்ட்டுகள் மற்றும் ஆக்சன் காட்சிகள்.. வசனங்கள் மூலமாக படத்தின் சஸ்பென்ஸ் உச்சத்தை தொடும்போதுதான் கொஞ்சம் சொதப்பி விட்டார்கள்.. நீராவி என்ற வித்தியாசமான பெயருடன் ரூம் பாயாக வரும் எஸ்.எம்.பாஸ்கரின் பேச்சும், நடிப்பும் படத்திற்கு உறுதுணை.. பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சினையை ஆளாளுக்கு போர்டில் எழுதிக் காட்டும் காட்சி செம காமெடி..
காதலியைத் தேடி வந்த காதலன்.. யார் அந்த இடையில் புகுந்த நபர்.. எதற்காக கார்த்திக்கின் துப்பாக்கியை கதிர் கொண்டு வர வேண்டும்..? கார்த்திக்தான் அந்த நபர் என்பதை கதிர் எப்போது உணர்கிறார்..? அவரை மாட்டிவிட இறுதியில் என்ன செய்கிறார் என்பதையும் வரிசையாக குழப்பமில்லாமல் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள். பின்னணி இசையையும் கொஞ்சம் ரம்மியமாக இழைத்திருந்தால் தேவலை.. கர்ண கொடூரம்..
ரீமேக் படத்தினை இன்ஸ்பிரேஷனில் செய்தது என்று சொல்லித் தப்பித்த குற்றத்திற்காக இப்படத்தினை புறக்கணிக்க முடியாது என்றாலும், காப்பியடித்த இன்னொரு படமான ‘உன்னோடு ஒரு நாள்’ படத்தினைவிடவும் மேக்கிங்கில் இது அசத்தியிருக்கிறது என்பதாலும் பாராட்டுக்கள்..!